Thursday, November 5, 2020

 

மனிதப் பிறவியும் வேண்டுவதே

காஞ்சி காமகோடி பீடாதிபதி

ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்ரீ சங்கராச்சார்ய சுவாமிகள்

 

ஆசார்ய: சங்கராசார்ய:

ஸந்து மே ஜன்ம ஜன்மனி

       'எல்லாப் பிறவிகளிலும் ஸ்ரீ சங்கர பகவத்பாதர்களே என் ஆசாரியராக இருக்க வேண்டும் - என்று இதற்கு அர்த்தம். சுலோகம் முழுவதையும் சொல்கிறேன்.

 சாஸ்த்ரம் சாரீர மீமாம்ஸா

தேவஸ்து பரமேச்வ:

ஆசார்ய: சங்கராச்சார்ய:

ஸந்து மே ஜன்ம ஜன்மனி.

       'சாரீர மீமாம்ஸா' என்றால் சரீரத்துக்குள் இருக்கப்பட்ட உயிரைப் பற்றிச் சொல்கிற வேதாந்த சாஸ்திரம் என்று அர்த்தம். 'இந்த வேதாந்தமே எந்நாளும் எனக்கு சமய சாஸ்திரமாக இருக்கட்டும்! அதாவது 'நான் வேத மதத்திலேயே பிறக்க வேண்டும்' என்று சுலோகத்தின் முதல் வரி சொல்லுகிறது. அடுத்த வரி, 'பரமேச்வரனே! எனக்கு எந்நாளும் தெய்வமாக இருக்கட்டும்' என்கிறது. பிறகு 'ஜன்ம ஜன்மத்திலும் எனக்கு சங்கரரே ஆசாரியராக இருக்கட்டும்' என்று சுலோகம் முடிகிறது.

 

      புனர்ஜன்மம் இல்லாமல் பரமாத்மாவில் கலந்துவிடவேண்டும் என்பதே பொதுவாகப் பிரார்த்திக்கப்படுவது. ஆனால் ஸ்ரீ சங்கர பகவத் பாதர்கள் ஒவ்வொரு ஜன்மாவிலும் ஆசாரியராக அமைவார் என்றால் எத்தனை பிறவியும் எடுக்கலாம் என்று இந்த சுலோகம் சொல்வது போல் இருக்கிறது. நடராஜாவைப் பார்த்துக் கொண்டேயிருப்பதற்காக 'மனிதப் பிறவியும் வேண்டுவதே இம் மாநிலத்தே' என்று அப்பர் சுவாமிகள் சொன்னது போலிருக்கிறது.

       ஸ்ரீ சங்கரரும் இதே ரீதியில் சிவானந்த லஹரி' யில் ஒரு சுலோகத்தில் பிரார்த்திக்கிறார்.

நரத்வம் தேவத்வம் நகவன ம்ருகத்வம் மசகதா

பசுத்வம் கீடத்வம் பவது விஹகத்வாதி ஜனனம் |

ஸதா த்வத் பாதாப்ஜ ஸ்மரண பரமாநந்த லஹரீ

விஹாராஸக்தம் சேத் ஹ்ருதயமிஹ கிம்தேன வபுஷா ||

  'பரமேசுவரரின் பாதாரவிந்தத்தை ஸ்மரித்து அந்த ஆனந்த வெள்ளத்தில் முழுகியிருப்பதற்குத் தடையில்லை எனில் நான் எந்தப் பிறவியும் எடுக்கத் தயார். மனிதனாகவோ தேவனாகவோ, கல்லாகவோ, மரமாகவோ, விலங்காகவோ, கொசுவாகவோ, மாடாகவோ, கிருமியாகவோ, பட்சியாகவோ எந்தப் பிறவி வாய்த்தாலும் சரி, இருதயத்தில் ஈசுவர ஸ்மரணானந்தம் வெள்ளமாகப் பாய்ந்தால் சரீரம் எதுவாக இருந்தால் என்ன?'என்கிறார் இந்த சுலோகத்தில் ஸ்ரீ ஆசார்யாள்.

       'ஆசார்யாள்' என்று சொன்னாலே இந்தத் தேசத்தில் ஸ்ரீ சங்கராச்சாரியர்களைத் தான் குறிப்பிடுகிறது. இதிலிருந்தே அவரது மஹிமை தெரிகிறது. பீஷ்மாசாரியார், துரோணாச்சாரியார், வியாஸாசாரியார், ஸாயணாசாரியார் இன்னும் எத்தனையோ ஆசாரியர்கள் இருந்தாலும் ஒரு பெயரையும் சேர்க்காமல் 'ஆசாரியாள்' என்று மட்டும் சொன்னால் அது நம் பகவத் பாதாள் என்றே அனைவரும் புரிந்துகொள்கிறார்கள். சாஸ்திர அர்த்தங்களை எடுத்துச் சொல்லி, பிறரை ஆசாரத்தில் நிலை நிறுத்துவதோடு எவன் ஒருவன் தானே அந்த ஆசாரங்களை அனுஷ்டித்துக் காட்டுகிறானோ அவனே ஆசாரியன்' என்பது தான் ஆசார்ய பதத்துக்கு லட்சணம் (definition).

 

      ஸ்ரீ சங்கர பகவத் பாதர்கள் அத்வைதத்தைப் பரம தத்துவமாக ஸ்தாபித்தார். நாமும் எல்லாம் ஒன்று, பேதமேயில்லை.' என்று பிரமாதமாக வேதாத்தம் பேசுகிறோம். ஆனால் யதார்த்தத்தில் இந்த ஏகமான ஸத் வஸ்துவின் ஞானம் நமக்கு கொஞ்சங்கூட வவில்லை. ஆசாரியாளோ அதுவாகவே இருந்தவர். எத்தனை காரியங்கள் செய்தாலும் காரியமற்ற பரப்ரம்மத்திலேயே இருந்துகொண்டிருந்தார். அதன் நிறைந்த னந்தத்தாலே தான் வெற்றி தோல்விகளால் துளிக் கூடப் பாதிக்கப்படாமல் ஒயாமல் காரியம் பண்ணி லோக க்ஷேமத்தைச் செய்துவிட்டார். ஞானத்தை நிலை நாட்டினார் பக்தி மார்க்கத்தையும் நிலை நிறுத்தினார். க்ஷேத்திரம் க்ஷேத்திரமாகச் சென்று ஸ்தோத்திரம் செய்தார். நாமும் பக்தி பண்ணுகிறோம். ஆனால் எப்படி? கஷ்டம் வந்தால் மட்டும் அது நிவிருத்தியாகப் பெரிய பூஜை, சாந்தி எல்லாம் செய்கிறோம். நிவிரித்தியானால் அநேகமாகப் பூஜையையும் அதோடு விட்டு விட்டு விடுவோம். ஆகாவிட்டாலோ சுவாமியையே திட்டுவோம். நமக்கு உண்மையான ஞானம் வருவதற்கு வழி என்ன?

      இதற்கெல்லாம் அடிப்படையாக ஆசாரியாள் கர்மானுஷ்டானத்தையே விதித்தார். அதை விட்டுவிட்டு நாம் செய்கிற பக்தி, ஞானம் எதுவுமே நிலைத்து நிற்கக் காணாம். அவரவரும் உரிய கர்மத்தை ஆசாரங்களோடு பின்பற்றினால் தான் மனசில் ஒழுக்கம், கட்டுப்பாடு, சித்தசுத்தி எல்லாம் உண்டாகி, அப்புறம்தான் உண்மையான பக்தியும் ஞானமும் சித்திக்கும். பகவத் பாதர்கள் அத்வைத ஞானம், ஸகுண உபாசனை இவற்றைச் சொன்னதோடு வைதிக கர்மானுஷ்டானத்தை விதித்து தானும் யதிதர்மங்களைப் பூரணமாகப் பின் பற்றிக் காட்டியதால் தான் 'ஆசாரியாள்' என்பதன் பூரண லட்சணத்தையும் பெற்றிருக்கிறார்.

       ஆசாரியாள் என்ற மாத்திரத்தில் ஸ்ரீ சங்கராச்சாரியர்கள் என்று நாம் அர்த்தம் செய்து கொள்வது போலவே, வெளிநாடுகளில் எல்லாம் 'வேதாந்தம்' என்ற மாத்திரத்திலேயே ஆசாரியாளின் அத்வைத மார்க்கம் என்றே அர்த்தம் செய்துகொள்கிறார்கள். வேதாந்தமாகிய உபநிஷதங்களை அடிப்படையாகக்கொண்டு த்வைதம், விஸிஷ்டாத்வைதம், சைவ சித்தாந்தம் ஆகிய பல சித்தாந்தங்கள் இருந்த போதிலும், ஆசாரியர்கள் அவலம்பித்த அத்வைதத்திற்கே இந்தப் பெருமை "வேதாந்த சிம்மம் கர்ஜனை செய்யட்டும்'' (Let the Lion of Vedanta roar) என்று சொல்லிக்கொண்டு விவேகாநந்தர் அமெரிக்காவிலும் ஐரோப்பாவில அத்வைத்தைப் பிரசாரம் செய்ததிலிருந்து நம் ஆசாரியர்களின் மதம் சர்வ சம்மதமாகி விட்டது! ஆனால் இது தாம் புதிதாகச் செய்த மதமல்ல. உபநிஷட்க தாத்பரியமே என்று ஆசாரியாள் விளக்கியிருக்கிறார்.

    அத்வைத மதத்தோடு, ஷண்மதங்களையும் ஸ்தாபித்தது ஆசாரியாளின் இன்னெரு பெருமை. தெய்வ பேதமே இல்லாமல் ஈசுவரன், அம்பாள், மஹாவிஷ்ணு, விக்நேசுவரர், சுப்பிரமணிய ஆகிய ஆறு தெய்வங்களின் உபாசனையையும் ஒழுங்குபடுத்தித் தந்து ஷண்மதாசாரியார் ஆனார்.

     ஆசாரியாளின் தனிப்பெருமை இன்னொன்றும் உண்டு. இன்று நம் தேசத்தில் இருக்கிற விஸிஷ்டாத்வைதம், த்வைதம், சைவ சித்தாந்தம் முதலிய சித்தாந்தங்களை ஸ்திரப்படுத்திய ஶ்ரீ ராமாநுஜர், ஶ்ரீ மத்வர், ஸ்ரீ மெய்கண்டார் முதலியவர்கள் நம் ஆசாரியாளுக்குப் பிற்பாடு தோன்றியவர்களே. ஆனால் நம் ஆசாரியாளுக்கு முன்னால் தோன்றிய கபிலர், ஜைமினி, கணாதர், கௌதமர் ஆகியோர் ஸ்தாபித்த ஸாங்கியம், மீமாம்சை, வைசேஷிகம், நியாயம் முதலிய மதங்கள் ஸ்ரீ சங்கரபகவத் பாதாளுக்குப் பின் இருந்த இடம் தெரியாமலே போய்விட்டன. ஆசாரியாள் அவற்றை அடியோடு நிராகரணம் செய்து விட்டார்.. அவருக்கு முன் தோன்றியிருந்த புத்த, ஜைன மதங்களையும் வென்று வைதிக தர்மத்தை நிலைநாட்டினார், முப்பத்திரண்டு வயசுக்குள் இத்தனை காரியங்களைச் செய்த ஆசார்யாள் பரமேசுவர, அவதாரமே என்பதில் சந்தேகமில்லை.

 பகவத்பாதர் தரும் பக்தி லட்சணம்

       பக்தனாகி இருப்பவனும் பகவான் தான் என்ற உணர்வோடு, சாராம்சத்தில் அவன் வேறு, தான் வேறு அல்ல என்ற அனுபவ ஞானத்தோடு ஈசுவரனை பக்தியோடு அனுபவித்த அத்வைத ஞானிகள் பலர் இருந்திருக்கிறார்கள். மதுசூதன சரஸ்வதி, அப்பைய தீக்ஷிதர், சதாசிவ பிரம்மேந்திராள், பகவந்நாம போதேந்திராள் ஆகிய பரம ஞானிகள் இவ்விதத்திலேயே பக்தி செய்திருக்கிறார்கள். நிர்குணமாக இருக்கின்ற பிரம்மத்துக்கும் அனந்த கல்யாண குணம் கொண்ட ஈசுவரனுக்கும் இடையே இவர்கள் எந்த பேதமும் காணவில்லை. ''நிர்க்குணமாக, நிஷ்களமாக எந்த வஸ்துவை யோகிகள் தியானத்தில் அநுபவிக்கிறார்களோ, அதையே யமுனா தீரத்தின் மணல் வெளியில் நீலஜோதி வெள்ளமாக ஓடிவிளையாடும் கண்ணனாக நான் கண்டு மகிழ்கிறேன்'' என்கிறார் மதுசூதன சரஸ்வதி. ஞானிகள் எல்லாத் தெய்வ வடிவங்களும் ஒன்றேயான பிரம்மம்தான் என்று கண்டுகொண்டவர்கள். என்றாலும், அவற்றில் பூர்வகாலத்தில் தங்கள் மனத்தைக் கவர்ந்த ஒரு ரூபத்தில் ஞானம் வந்த பின்னும் விசேஷ பக்தி செலுத்தினார்கள்.

       அத்வைத ஞான சமுத்திரமான சங்கர பகவத் பாதர்கள் அத்தனை தெய்வங்களையும் பிரம்ம ஸ்வரூபமாகவே வைத்து ஸ்தோத்திரம் செய்திருக்கிறார்.

      பக்தியின் லட்சணத்தையும் பகவத் பாதர்கள் 'சிவானந்த லஹரீ' யில் வெகு அழகாக வர்ணித்திருக்கிறார். ஐந்து உதாரணங்களைக் கொடுத்து வர்ணித்திருக்கிறார். 'அழிஞ்சில் விதை எப்படித் தாய் மரத்துடனேயே ஒட்டிக்கொள்கிறதோ, ஊசி எப்படி காந்தத்தால் கவரப்படுகிறதோ, பதிவிரதை எப்படித் தன் பதியின் நினைவிலேயே ஆழ்ந்திருக்கிறாளோ, கொடி எப்படி மரத்தைத் தழுவி வளர்கிறதோ, நதி எப்படிச் சமுத்திரத்தில் கலக்கிறதோ, அப்படியே பசுபதியின் பாதார விந்தங்களில் ஸதாஸர்வகாலமும் மனத்தை அமிழ்த்தியிருப்பதுதான் பக்தி என்பது' என்கிறார் ஸ்ரீ ஆசார்யாள்.

      ஏறு அழிஞ்சில் என்று ஒரு மரம் உண்டாம். அதன் காய் முற்றியவுடன் பூமியில் விழுந்து உடையும். உடனே உள்ளே இருக்கிற விதைகள் ஏதோ ஓர் ஆகர்ஷண சக்தியால் நகர்ந்து நகர்ந்து வந்து மறுபடியும் தாய் மரத்தோடேயே ஒட்டிக்கொள்ளும். ஒட்டிக் கொண்ட பின் மூலமான மரத்துக்குள்ளேயே மறைந்துவிடும் என்கிறார்கள். பகவானிடமிருந்து பிரிந்துவந்திருக்கிற நாம் இப்படியே எப்போதும் அவன் பக்கமாக நகர்ந்து நகர்ந்து போய் முடிவில் அவனிடம் ஒட்டிக் கொண்டு ஒன்றாகி விடவேண்டும். ஊசி காந்தத்தை நோக்கிப் பாய்ந்து ஒட்டிக் கொள்வது அடுத்த உதாரணம். காந்தத்தில் சேர்ந்த ஊசிக்கும் காந்த சக்தி உண்டாகி அது மற்ற இரும்புப் பொருள்களை இழுப்பது போல், பக்தனுக்கும் பகவானின் குணங்களும், சக்திகளும் உண்டாகும் என்று இந்த உதாரணத்தால் காட்டுகிறார். அடுத்து பதி விரதையின் உதாரணம்; பதிவிரதையின் நினைவு பேச்சு, காரியம் அனைத்தும் பதியைச் சுற்றியே இருப்பது போல் நம் மனோவாக்கு காரியங்கள் பகவானையே பற்றி இருக்க வேண்டும் என்பது இதிலிருந்து தெரிகிறது. பதியை மூல சுலோகத்தில் 'விபு' என்கிறார். சர்வ வியாபகன் என்பது இதன் பொருள். இதனால் பகவானை ஏதோ ஓரிடத்தில் மட்டுமின்றி எங்குமாக, எல்லாமாக இருப்பதாகப் பாவிக்க வேண்டும் என்று உணர்த்துகிறார். அடுத்தபடியாக கொடியின் உதாரணம். கொழு கொம்பைச் சுற்றிக்கொள்கிற கொடியை நாம் சிறிது விலக்கிப் பிரித்து விட்டால் கூட அது படாத பாடுபட்டுக் கொஞ்சநேரத்திலேயே மறுபடியும் கொம்பை வளைத்துச் சுற்றிக்கொண்டுவிடும். நம் மனத்தை ஈசுவர ஸ்மரணையிலிருந்து அலைக் கழிக்கிற இடைஞ்சல்கள் எத்தனை வந்தாலும் நம் லட்சியத்தைப் பிடிவாதமாகப் பிடித்திருக்க வேண்டும் என்பதை இந்தந் திருஷ்டாந்தம் உணர்த்துகிறது. கடைசியில் நதி - சமுத்திர உபமானம். இதுவே பரம அத்வைதம். கடல்தான் மழையாக விழுந்து பிறகு ஆறாகியிருக்கிறது. இரண்டும் வேறு வேறு அல்ல. ஒரு நதியானது எந்த மலையுச்சியில் பிறந்தாலும் அலுக்காமல் சளைக்காமல் ஓடி ஓடிவந்து கடைசியில் கடலில் கலந்து தன்னுடைய தனிப்பெயரையும் உருவத்தையும் இழந்து கடலாகவே ஆகிவிடுகிறது. கடல் அதை எதிர்கொண்டு அழைத்துக்கொள்கிறது. இதனால் தான் நதி சங்கமங்களுக்குச் சிறிது தூரம் இப்பாலே அந்த ஆற்றின் ஜலம் உப்புக் கரிக்கிறது. இப்படியே நாமும் நிஜமான பக்தி செலுத்தினால் கருணாசமுத்திரமான பகவான் முன்னே வந்து நம்மை ஆட்கொண்டு தானாக்கிக் கொள்வான்.

      முதலில் பொருள் வேண்டும், பவிஷு வேண்டும் என்று வியாபார ரீதியில் பக்தி செய்ய ஆரம்பித்தாலும், பகவானின் குண விசேஷம் காரணமாக அவனுக்காகவே அவனிடம் அன்பு செலுத்துகிற பக்குவத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பெறுவோம். கடைசியில் குணவிசேஷம் எதுவுமே இல்லாத பரமாத்ம ஸ்வரூபமாகவே நாமும் அவனில் கரைந்து அவனாகவே ஆவோம்.

     லோக ரீதியில் நன்றாக வாழ்க்கை நடத்துவதற்கும் சரி, துவைதம். விசிஷ்டாத் வைதம், அத்வைதம் முதலிய சித்தாந்தங்களின் அனுபவத்துக்கும் சரி, பக்தி என்பது இன்றியமையாததாகிறது. மோட்சம் அடையப் பின்பற்றும் உபாயங்களில் தலை சிறந்தது பக்தியே என்கிறார் ஸ்ரீ பகவத் பாதர் - ஆத்ம ஸ்வரூபத்தை உணர்வது தான் பக்தி என்றும் அதையடுத்துச் சொல்கிறார்.

மோக்ஷஸாதன ஸாமக்ர்யாம் பக்திரேவ கரீயஸீ |

ஸ்வஷ்வரூபாநுஸந்தானம் பக்திரித்ய பிதீயதே ||

 

No comments:

Post a Comment