Saturday, November 7, 2020

 நிர்குணமானஸ பூஜா

       (ஸகுணமான தெய்வத்தை நம் உடற்கருவிகள் கொண்டு வழிபடுவதையே பொதுவாகப் பூஜையென எண்ணுகிறோம். இங்கு ஶ்ரீமத் ஆசார்யாள் நிர்குணமான ப்ரஹ்மத்தை மனம் கடந்த நிலையில் அநுபவிக்கு முகமாகவே மனத்தால் பாவிப்பதையும் உவமை மூலம் பூஜைச் சடங்குடன் பொருத்திக் காட்டுகிறார்.)

சிஷ்ய உவாச: -

அக2ண்டே3 ஸச்சிதா3நந்தே3 நிர்விகல்பைக ரூபிணி |

ஸ்தி2தே(அ)த்3விதீய பா4வே(அ)பி கத2ம் பூஜா விதீ4யதே ||                      1

 சிஷ்யன் சொல்கிறான்: -

      ஸத்தாகவும், சித்தாகவும், ஆனந்தமாகவும் உள்ள (ப்ரஹ்மமான)து பிரிவற்றதாகவும், எவ்வித விகல்பத்திற்கும் இடமில்லாமல் ஒரே ரூபமாகவும், இரண்டாவது பொருளில்லாததாகவும் இருக்கும் போது (அதற்குப்) பூஜையானது எப்படி செய்யப்படுகிறது?

பூர்ணஸ்யாவாஹனம் குத்ர ஸர்வாதா4ரஸ்ய சாஸநம் |

ஸ்வச்ச2ஸ்ய பாத்3யமர்க்4யம் ச சுத்34ஸ்யாசமநம் குத: ||                     2

       எங்கும் நிரம்பியிருக்கிற பிரஹ்மத்திற்கு (பூஜாக்ருஹம், விக்ரஹம் எனும் படியாகக் குறிப்பிட்ட இடத்தில்) ஆவாஹனம் எங்கே செய்வது? எல்லாவற்றையுமே தாங்குவதற்கு (அதனைத் தாங்கும்) ஆஸனமும் (எப்படிக் கொடுப்பது)? நிர்மலமாயிருப்பதற்கு (கழுவிக்கொள்வதற்கான) பாத்யமும், எதற்கு? சுத்தமாயிருப்பதற்கு ஆசமனம் எங்கிருந்து வரும்? (பாத்யம் - பாத தீர்த்தம்; அர்க்யம் - முக தீர்த்தம்; ஆசமனம் - அங்கசுத்திக்காக நீர் அருந்துதல்)

நிர்மலஸ்ய குத: ஸ்நாநம் வாஸோ விச்வோத3ரஸ்ய ச |

அகோ3த்ரஸ்ய த்வவர்ணஸ்ய குதஸ்தஸ்யோபவீதகம் ||                      3

       அழுக்கற்றவருக்கு ஸ்நானம் எதற்காக? பிரபஞ்சத்தையே தன் வயிற்றில் அடக்கியுள்ளவருக்கு வஸ்திரம்தான் எப்படி உடுத்த முடியும்? கோத்திர மில்லாதவரும், ஜாதியில்லாதவருமான அவருக்கு எதற்காக யக்ஞோபவீதம்? (பூணூல் சாற்றும் உபசாரம்)

நிர்லேபஸ்ய குதோ க3ந்த3: புஷ்பம் நிர்வாஸநஸ்ய ச |

நிர்விசேஷஸ்ய கா பூ4ஷா கோ(அ)லங்காரோ நிராக்ருதே: ||                  4

       எதிலும் ஒட்டாதவருக்கு கந்த (உபசார)ம் (சந்தனப் பூச்சு) எப்படி (ஏற்படும்)? எவ்வித வாசனையுமற்றவருக்கு புஷ்பமும் (எதற்கு)? எந்த விசேஷமு மில்லாதவருக்கு பூஷணம் எது? ரூபமேயில்லாதவருக்கு அலங்காரம் எது?

      (வாஸனை என்பது கர்மாவின் அநுபோக நெடியையும் குறிக்கும் விசேஷம் என்பது ஒன்றைவிட இன்னொன்று சிறப்புற்றுள்ள போதே தோன்றுவது. ப்ரஹ்மமோ தனக்கு வேறாய் இன்னொன்று இல்லாததால் நிர்விசேஷமானது. ஒருவர் பிறரினும் சிறப்பு எய்துவதற்காகவே அவரை பூஷிப்பது வழக்கம். பிறிதற்ற ப்ரஹ்மத்துக்கு பூஷணம் எப்படி இருக்க முடியும் என்பது கேள்வி.)

நிரஞ்ஜநஸ்ய கிம் தூ4பைர் தீ3பைர் வா ஸாவஸாக்ஷிண: |

நிஜாநந்தை3க - த்ருப்தஸ்ய நைவேத்3யம் கிம் ப4வேதிஹ ||                   5

       தோஷமில்லாதவருக்கு தூபங்களினால் என்ன பிரயோஜனம்? ஸர்வ ஸாக்ஷியாக (எல்லாவற்றையும் நேரில் பார்த்துக்கொண்டிருக்கிறவருக்கு) தீபங்களினால் தான் என்ன பயன்? தன்னுடைய ஆனந்தத்தினாலேயே திருப்தி அடைந்துள்ளவருக்கு இங்கே எது நைவேத்யமாக ஆகும்?

      (துர்வாஸனை, ஸ்நானத்தின் பின் விளைவால் ஏற்படக்கூடிய கெடுதல்கள் இவை போகவே தூபம் காட்டுவது. தோஷமெதுவும் அண்டவொண்ணா ப்ரஹ்மத்துக்கு இது எதற்கு? தேவதைக்கு ஒளிகாட்டவே தீபம். ப்ரஹ்மமோ ஒளிக்குள் ஒளிதருவதாக தானே அனைத்தையும் பார்ப்பதாயுள்ளதே! ஸ்வரூபானந்தத்திலேயே முட்டமுட்டத் திளைக்கும் ப்ரஹ்மத்துக்குப் பசியும் உண்டா என்ன? நிவேதனம் செய்வான் வேண்டி?)

விச்வாநந்த3யிதுஸ் - தஸ்ய கிம் தாம்பூ3லம் ப்ரகல்பதே |

      பிரபஞ்சம் முழுவதற்கும் ஆனந்தம் தருகிற அவருக்கு, எது தாம்பூலமாக ஆகும்? (மகிழ்ச்சியூட்டவே தாம்பூலம் அளிப்பது.)

ஸ்வயம்ப்ரகாச – சித்3ரூபோ யோ(அ)ஸாவர்காதி3பா4ஸக: ||                   6

கீ3யதே ச்ருதிதி4பிஸ் - தஸ்ய நீராஜா – விதி3: குத: |

       எவர் ஸ்வயம் பிரகாசமான ஞானஸ்வரூபரோ அவர் ஸூர்யன் முதலானவர் களுக்கும் பிரகாசம் தருபவராக வேதவாக்யங்களினால் பாடப்படுகிறார். அவருக்கு எதற்காக கர்ப்பூராரத்தி முறை?

ப்ரத3க்ஷிண - மநந்தஸ்ய ப்ரணாமோ (அ)த்3வயவஸ்துந: ||                    7

      எல்லையற்றவருக்கு ப்ரதக்ஷிணம் (எப்படிச் செய்ய)? இரண்டாவதற்ற வஸ்துவிற்கு நமஸ்காரம் (செய்ய அடியார் என்று ஒருத்தரும்) தனியாக உண்டா?

வேத3வாசா – மவேத்3யஸ்ய கிம் வா ஸ்தோத்ரம் விதீ3தே |

      வேத வாக்யங்களினாலேயே அறியவொண்ணாமலிருப்பவருக்கு, ஸ்தோத் திரமாக எதைத்தான் விதிக்க முடியும்? (நீராஜனத்துக்குப் பின் செய்யும் ஸ்தோத்ர உபசாரம் ஏது?)

 அந்தர் 3ஹி: ஸம்ஸ்தி2தஸ்ய உத்3வாஸந விதி4: குத: ||                      8

      உள்ளும் வெளியும் நன்கு உறைந்திருப்பவருக்கு உத்வாஸன முறை எப்படி? (பூஜை முடிவில் தேவதையை அதன் இருப்பிடத்திறகு திரும்ப அனுப்பிவைப்பது ''உத்வாஸனம்'' எனப்படும்.)

ஸ்ரீ குருருவாச: -

ஆராத4யாமி மணி ஸந்நிப4-மாத்ம-லிங்க3ம்

       மாயாபுரீ ஹ்ருத3ய-பங்கஜ-ஸந்நிவிஷ்டம் |

ச்ரத்3தா4 நதீ3 - விமல சித்த ஜலாபி4ஷேகை:

       நித்யம் ஸமாதி4 - குஸுமை – ரபுநர்ப4வாய ||                           9

 ஸ்ரீ குரு சொல்கிறார்:

      மாயா புரியின் மாயையால் ஏற்பட்ட நவத்வார புரியான சரீரத்திலுள்ள ஹ்ருதய பத்மத்தில் நன்கு வீற்றிருக்கும் ஸ்படிகம்போல் நன்கு விளங்குகிற ஆத்மாவாகிற லிங்கத்தை மறுபடியும் ஸம்ஸார பந்தத்தில் அகப்படாமலிருக்கும் பொருட்டு சிரத்தையாகிற நதியில் நிர்மலமான மனஸாகிற (குடத்தை முழுக்கி எடுத்த) ஜலத்தினால் அபிஷேகங்கள் செய்து, ஸமாதியாகிற புஷ்பங்களினால் ஆராதிக்கிறேன்.

அயமேகோ(அ)வசிஷ்டோ(அ)ஸ்மீத் - யேவ - மாவாஹயேத் சிவம் |

ஆஸநம் கல்பயேத் பச்சாத் ஸ்வப்ரதிஷ்டா2த்மசிந்தனம் ||                     10

       தனித்து மிஞ்சினவனாக, இந்த (நான் தான்) இருக்கிறேன் என்று, இவ்விதமாக (தன்னிடமே) சிவத்தை (மங்கள ஸ்வரூபியான பரமாத்மாவை) தன்னிடமே ஆவாஹனம் செய்யவேண்டும். பிறகு தன்னிடத்தில் நிலைத்திருக்கும் ஆத்மாவைச் சிந்தனை செய்வதையே ஆஸனம் என்று பாவிக்க வேண்டும்.

புண்ய - பாப – ரஜஸ்ஸங்கோ3 மம நாஸ்தீதி வேத3நம் |

பாத்3யம் ஸமர்பயேத் வித்3வான் ஸர்வகல்மஷநாசநம் ||                      11

       'புண்ணியம், பாபம் என்கிற அழுக்கின் சேர்க்கை எனக்குக் கிடையாது' என்று அறிவதையே எல்லா தோஷங்களையும் போக்கக்கூடிய பாத்யமாக அறிவாளியானவன் கொடுக்க வேண்டும்.

அநாதி3 - கல்ப – வித்4ருத - மூலாஜ்க்ஞாந - ஜலாஞ்ஜலிம் |

விஸ்ருஜேதா3த்மலிங்க3ஸ்ய ததே3 வார்க்4ய - ஸமர்பணம் ||                  12

       அநாதி கல்ப காலமாகச் சுமந்து வந்த மூல அவித்யையை ஜலமாகக் கொண்ட (பாவித்து) அஞ்ஜலியை விடவேண்டும். அதுவேதான் ஆத்மாவாகிற லிங்கத்திற்கு அர்க்யத்தைக் கொடுத்தல் ஆகும்.

 ப்3ரஹ்மாநந்தா3ப்3தி4 கல்லோல கண கோட்யம்சலேசகம் |

பி3பந்தீந்த்3ராத3ய இதி த்4யாநமாசமநம் மதம் ||                                13

       பிரஹ்மானந்தமாகிற ஸமுத்திரத்தின் அலையின் திவலையில் கோடியில் ஒரு அம்சத்தின் சிறு துளியைத் தான் இத்திரன் முதலான தேவர்கள் பானம் செய்கிறார்கள் என்று தியானம் செய்வது ஆ ஸமன மென்று எண்ணப்படுகிறது. (தேவலோக ஆனந்தமென்பது, ஆத்மானந்தத்தின் வெகுவெகு அற்பமான அம்சமே.)

ப்3ரஹ்மாநந்த3 - ஜலேநைவ லோகா: ஸர்வே பரிப்லுதா: |

அக்லேத்3யோ (அ)யமிதி த்4யாந - மபிஷேசன - மாத்மந: ||                     14

       பிரஹ்மாநந்தமாகிற ஜலத்தினாலேயே எல்லா உலகங்களும் நாலாபக்கங் களிலும் மூழ்கடிக்கப்பட்டிருக்கின்றன, (அப்படிப்பட்ட) இந்த ஆத்மரூபி எந்த ஜலத்தினாலும் நனைக்கப்படக்கூடியவரல்ல என்று எண்ணுவதே ஆத்மாவிற்கு அபிஷேகமாகும்.

நிராவரண சைதன்யம் ப்ரகாசோ (அ) ஸ்மீதி சிந்தனம் |

ஆத்மலிங்க3ஸ்ய ஸத்3வஸ்த்ர - மித்யேவம் சிந்தயேன்முனி: ||               15

       மறைவில்லாத சைதன்யமாகவும் பிரகாச ஸ்வரூபமாகவும் நான் இருக் கிறேன் என்று நினைப்பதே ஆத்ம லிங்கத்திற்கு (ச் சார்த்தும்) நல்லாடை என்று எண்ண வேண்டும். (மறைத்துக்கொள்ளத்தான் நாம் ஆடை உடுத்துவது.)

த்ரிகு3ணாத்மாசேஷ - லோக - மாலிகா ஸூத்ரமஸ்ம்யஹம் |

இதி நிச்சய ஏவாத்ர ஹ்யுபவீதம் பரம் மதம் ||                                 16

       முக்குணங்களை ஸ்வபாவமாகவுடைய, எல்லா உலகங்களும் சேர்ந்த மாலைக்கு ஸூத்ரமாக (நாராக) நான் இருக்கிறேன் என்ற தீர்மான மே இங்கு உத்தமமான யக்ஞோபவீத ஸூத்ரமாகக் கருதப்படுகிறது. (நார் என்ற ஆதாரமின்றி பூக்களைத் தொடுக்க முடியாதது போல் ஆத்மாவின் ஆதாரமின்றி முக்குண மில்லை. மலர்கள் வாடி அழிந்தாலும், நார் வாடாமல் அழியாமலிருப்பது போல குணங்கள் மாறி நாசமுற்றாலும் ஆத்மா மாறுதலும் நாசமும் இன்றி விளங்குகிறது.)

 அநேக வாஸநா மிச்ர ப்ரபஞ்சோ (அ) யம் த்4ருதோ மயா |

நாந்யேநேத்யனுஸந்தா4ன - மாத்மநச் - சந்தனம் ப4வேத் ||                   17

       "பலவிதமான வாஸனைகள் கலந்த இந்த பிரபஞ்சம் என்னால் தாங்கப்பட்டிருக்கிறது, வேறு எதனாலும் இல்லை.'' என்று அனுஸந்தானம் செய்வது தான் (இடையறாமல் சிந்தித்து அனுபவத்துக்குக் கொண்டுவருவதுதான்) ஆத்மாவிற்குச சந்தனம் கொடுப்பதாக ஆகும்.

ரஜஸ் - ஸத்வ - தமோ - வ்ருத்தி த்யாக3ரூபைஸ் திலாக்ஷதை: |

ஆத்மலிங்க3ம் யஜேத் நித்யம் ஜீவன் முக்தி ப்ரஸித்34யே ||                  18

      ஜீவன் முக்தி நிலை நன்கு விதிக்க வேண்டியதற்காக ரஜஸ், ஸத்வம், தமஸ் இவைகளால் ஏற்படும் மனோவிருத்திகளை விட்டு விடுவது என்பதாகிய எள்ளு கலந்த அக்ஷதைகளால் ஆத்மாவாகிற லிங்கத்தை எப்பொழுதும் பூஜிக்க வேண்டும். (சித்த ஓட்டத்தை விடுவதாக எண்ணுவதே அக்ஷதா ஸமர்ப்பணம்.)

ஈச்வரோ கு3ருராத்மேதி பே4த - த்ரய விவர்ஜிதை: |

பி3ல்வ - பத்ரை – ரத்3விதீயை – ராத்மலிங்க3ம் யஜேத் சிவம் ||                19

       ஈசுவரன், குரு, ஆத்மா என்கிற மூன்று வித வேற்றுமையு மற்று இரண் டற்றதாயிருக்கும் தன்மையாகிற பில்வபத்திரங்களினால் சிவ (மங்களஸ்வ ரூப) மான ஆத்மலிங்கத்தைப் பூஜிக்க வேண்டும். (வில்வத்தின் மூன்று தளமாக ஈச்வர - குரு - ஜீவ என்ற மூன்று பேத நீக்கம், த்ரிதளத்தில் மேலே உள்ள ஒரு தளம் மற்ற இரண்டிலிருந்து நீங்கியிருப்பது போல, த்வைதம் விடுத்த அத்வைத பாவம்.)

ஸமஸ்த வாஸநா த்யாக3ம் தூ4பம் தஸ்ய விசிந்தயேத் |

ஜ்யோதிர்மயாத்ம விஜ்ஞாநம் தீ3பம் ஸந்3தர்சயேத் பு34: ||                    20

       எல்லா வாஸனை களையும் விட்டுவிடுவதையே (ஆத்மாவாகிய) அவருக்கு தூபம் என்று எண்ணவேண்டும். ஜ்யோதிஸ்வ ரூபமாயிருக்ரும் ஆத்மாவை நன்கு அறிவது என்பதையே தீபமாக ஞானி காட்டவேண்டும்.

நைவேத்3ய – மாத்மலிங்க3ஸ்ய ப்3ரஹ்மாண்டா3க்3யம் மஹோத3னம் |

பி3பா (சிதா3) நந்தரஸம் ஸ்வாது3 ம்ருத்யு - ரஸ்யோபஸேசநம் ||              21

       பிரஹ்மாண்டம் என்கிற பெரிய அன்னம் தான் ஆத்மாவாகிற லிங்கத்திற்கு ருசியுள்ள நைவேத்தியம். ('சிதானந்த ரஸம்'என்ற பாடத்தின்படி : (ப்ரஹ்மத்துக்கு) ஞான இன்பமே ரஸமாகும் - கனிச் சாறாகும். 'பிபானந்த ரஸம்' என்ற பாடத்தின்படி: (ஹே ப்ரம்ம ஸ்வரூபியே) ஆனந்த ரஸத்தைப் பருகு.) அதற்கு மிருத்யு வேதான் வியஞ்சனம். (உலகத்தை அன்னமாயும், உபநிஷதம் கூறுவது போல், காலனையே (காலத்தை யே) ஊறுகாயாகவும் விழுங்குவது ப்ரஹ்மம்.)

அஜ்ஞானோச்சி2ஷ்டகரஸ்ய க்ஷாளநம் ஜ்ஞானவாரிணா |

விசுத்34 ஸ்யாத்மலிங்க3ஸ்ய ஹஸ்த - ப்ரக்ஷாளனம் ஸ்மரேத் ||            22

       அஜ்ஞானமாகிற எச்சில்பட்ட கையை, ஞான மாகிற ஜலத்தினால் அலம்பு வதையே அதிபரிசுத்தமான ஆத்மாவாகிற லிங்கத்திற்கு கையலம்புதல் என்று நினைக்க வேண்டும்.

ராகா3தி3 கு3ண சூந்யஸ்ய சிவஸ்ய பரமாத்மந: |

ஸராக3 விஷயாப்4யாஸ த்யா3ஸ் தாம்பூ3ல - சர்வணம் ||                    23

       ராகம் (ஆசை) முதலான குணங்களற்ற சிவமான பரமாத்மாவிற்கு, ஆசையுடன் விஷயங்களில் ஈடுபடுவதென்பதை விடுவதே தாம்பூலம் போட்டுக் கொள்ளுதலாகும்.

      (ராகம் என்பது சிவப்பையும் குறிக்கும். ராகம் (சிவப்பு) ஏற்றிக்கொள்வதே மற்றவருக்குத் தாம்பூலம், ஆத்மாவுக்கோ ராகம் (ஆசை) நீக்குவதே தாம்பூலம்.)

அஜ்ஞாந த்3வாந்த வித்4வம்ஸ ப்ரசண்ட - மதி – பா4ஸ்கரம் |

ஆத்மநோ ப்3ரஹ்மதா ஜ்ஞாநம் நீராஜநமிஹாத்மந: ||                         24

       அஜ்ஞானமாகிற இருட்டைப் போக்கடிப்பதில் மிகவும் ஸாமர்த்திய முள்ளதாயும், ஸூர்யனை மீறினதாயும் (வெகு பிரகாசத்தைக் கொடுக்கக்கூடிய தாயும்) உள்ள ஆத்மா பிரஹ்மம்தான் என்கிற ஞானமே இங்கு ஆத்மாவிற்கு நீராஜனம் (கர்ப்பூர ஆரத்தி) ஆகும்.

விவித4 ப்3ரஹ்ம ஸந்த்3ருஷ்டி மாலிகாபி4 ரலங்க்ருதம் |

பூர்ணாநந்தா3த்மதா த்3ருஷ்டிம் புஷ்பாஞ்ஜலிமனுஸ்மரேத் II                  25

       பலவிதமான பிரபஞ்சமும் ப்ரஹ்மம்தான் என்ற நல்லறிவே பூமாலை அலங்கரிப்பு. நிறைந்த ஆனந்த ஸ்வரூபமான ப்ரஹ்மமே நான் என்று அறிவதையே புஷ்பாஞ்ஜலியாக நினைக்க வேண்டும்.

பரிப்4ரமந்தி ப்3ரஹ்மாண்ட3 ஸஹஸ்ராணி மயீச்வரே |

கூடஸ்தா2சலரூபோ (அ)ஹமிதி த்4யானம் ப்ரத3க்ஷிணம் ||                    26

       "ஈசுவரனாயிருக்கிற என்னிடத்தில் ஆயிரக்கணக்கான ப்ரஹ்மாண்டங்கள் சுழலுகின்றன,'' நான் கூடம்போல் (ப்ரபஞ்சம் மாற்றுருவங்களை அடைய ஆவேசமாக) இருந்து கொண்ட ஸ்வயமாக அசையாமலிருக்கும் ஸ்வரூபத்தை யுடையவன் என்று தியானம் செய்வதுதான் பிரதக்ஷிணம் செய்வதாகும்.

      (எல்லா இரும்புப் பண்டங்களையும் எந்த அடி இரும்புத்தட்டின் மேல் வைத்து அடிக்கிறார்களோ, ஆனாலும் எந்த அடி இரும்பு தான் அடிபடுவதில்லையோ அது "கூடம்'' எனப்படும்.)

விச்வ – வந்த்3யோ (அ)ஹ - மேவாஸ்மி நாஸ்தி வந்த்3யோ ம3தந்யக: |

இத்யாலோசனமேவாத்ர ஸ்வாத்மலிங்க3ஸ்ய வந்த3னம் ||                    27

       "நான் தான் ஜகத் பூராவினாலும் வந்தனம் செய்யப்படவேண்டியவனாக இருக்கிறேன். என்னைத் தவிர வேறு யாரும் வந்தனம் செய்யப்படவேண்டியவனாக இல்லைஎன்று ஆய்ந்து தெளிவதுதான் இங்கு தன்னுடைய ஆத்மாவாகிற லிங்கத்திற்கு வந்தனமாகும்.

ஆத்மந : ஸத்க்ரியா ப்ரோக்தா கர்தவ்யாபா4வ பா4வநா |

நாமரூப - வ்யதீதாத்ம - சிந்தனம் நாமகீர்த்தனம் ||                            28

       ஆத்மாவிற்கு செய்ய வேண்டியதொன்றும் கிடையாதென்று பாவிப்பதே (அதற்கான) உபசாரம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நாமகீர்த்தனம் என்பது நாமரூபங்களைக் கடந்த ஆத்மாவைச் சிந்திப்பது தான்.

ச்ரவணம் தஸ்ய தே3வஸ்ய ச்ரோதவ்யாபா4வ சிந்தனம்

மநநம் த்வாத்மலிங்க3ஸ்ய மந்தவ்யாபா4வ சிந்தனம் ||                       29

       அந்த ஸ்வயம்பிரகாச அத்மாவிற்கு சிரவணம் என்பது கேட்டறிய வேண்டியதாக ஒன்றும் கிடையாதென்று சிந்திப்பது தான். ஆத்மாவென்கிற லிங்கத்திற்கு மனனம் என்பது மனனம் செய்யவேண்டியதாக ஒன்றும் கிடையா தென்று சிந்திப்பது தான்.

த்4யாதவ்யாபா4வ விஜ்ஞாநம் நிதி3த்4யாஸனமாத்மந: |

ஸமஸ்த ப்4ராந்தி விக்ஷேப ராஹித்யே நாத்ம நிஷ்ட3தா II                    30

 ஸமாதி4ராத்மநோ நாம நாந்யத் சித்தஸ்ய விப்4ரம: |

தத்ரைவம் ப்3ரஹ்மணி ஸதா3 சித்த விச்ராந்திரிஷ்யதோ ||                   31

       ஆத்மாவிற்கு நிதித்யாஸனம் (ஆழ்ந்த தியானம்) செய்ய வேண்டிய விஷயமே கிடையாதென்று அறிவதேயாகும். ஆத்மாவிற்கு ஸமாதி என்பது எல்லா வித பிராந்தியும் விக்ஷேபமும் இல்லாத்தன்மையோடு ஆத்மாவிடத்திலேயே நிலைத் திருத்தல் என்பது தான், வேறு அல்ல. (மற்றவை) மனசின் பிரமைதான். இவ்விதமாக அந்த பிரஹ்மத்தினிடத்தில் எப்பொழுதும் மனசிற்கு ஓய்வு விரும்பப்படுகிறது. (இந்த விச்ராந்தியே விடாயாற்றி உத்ஸவமாகும்.)

      [சிஷ்யன் “பிரஹ்மத்திற்கு உத்வாஸனம் எப்படி?'' என்று கேட்டதற்கு மாத்திரம் குரு பதில் சொல்லவில்லை. ஸர்வ வியாபகமான பிரஹ்மத்திற்கு உவமையாகக் கூட உத்வா ஸனம் ஸாத்தியமில்லை என்று உறுதிப்படுத்தப்பெறுகிறது போலும் !]

ஏவம் வேதா3ந்த கல்போக்த ஸ்வாத்ம லிங்க3 ப்ரபூஜனம் |

குர்வன்னாமரணம் வா (அ)பி க்ஷணம் வா ஸுஸமாஹித: ||                  32

 ஸர்வ – து3ர்வாஸநா ஜாலம் பத2பாம்ஸுமிவ த்யஜேத் |

விதூ4யாஜ்ஞாந து: கெ2ளக4ம் மோக்ஷாநந்த3ம் ஸமச்நுதே ||                  33

       இவ்விதமாக வேதாந்தமாகிற கல்பத்தில் சொல்லப்பட்ட தன்னுடைய ஆத்மலிங்க பூஜையை மரணம் வரையிலோ, ஒரு ஷணமேனுமோ நன்கு மனத்தை ஒருமைப்படுத்திச் செய்கிறவர் எல்லா கெட்ட வாஸனைக்கூட்டத்தையும் காலிலுள்ள புழுதியைப் போல உதறிவிடுவர்; அக்ஞானத்தையும் அதனால் ஏற்படும் துக்கக்குவியலையும் உதறிவிட்டு மோக்ஷானந்தத்தை நன்கு அடைவர்.

 


 

No comments:

Post a Comment