Thursday, November 5, 2020

 

ஶ்ரீ சங்கர பகவத்பாதர்

ரா. கணபதி

     பூவுலகில் ஒரே பரம்பொருளே படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று காரியங்களுக்காக பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று மூன்று மூர்த்திகளாக இருக்கின்றன.

    ஒவ்வொரு யுகத்திலும் உலக நலனைக் குறித்து விஷ்ணு பகவான் பூலோகத்தில் அவதாரம் செய்கிறார். அதுபோல் பிரம்மாவிற்கு அவதாரம் இல்லை. சிவனுக்கும் ஒவ்வொரு யுகத்திலும் அவதாரம் கிடையாது. கலியுகத்தில் அவருடைய அம்சமாக, ஞானோபதேசம் செய்வதற்காக ஸ்ரீ சங்கரர் என்னும் திருநாமம் பூண்டு ஓர் அவதாரம் நிகழ்ந்தது.

    சிவபெருமான் ஞானோபதேசம் செய்யும் பொழுது தக்ஷிணாமூர்த்தி என்னும் திருநாமத்துடன் விளங்குகிறார். அவருடைய உபதேசம் வாய்மொழியாக இல்லாது கையில் சின் முத்திரையின் மூலமாகவே உபதேசம் செய்கிறார். முதிர்ந்த மகரிஷிகள் உட்பட பலரும் தங்கள் சந்தேகங்களை சின்முத்திரையின் மூலமாகமே தெளிவுபடுத்திக் கொள்கிறார்கள்.

     சுமார் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் உலகில் ஞான மார்க்கம் குறைந்து நிரீசுரவாதம் தலை தூக்கி நின்றது. அந்தச் சமயத்தில் சகல தேவர்களும், மகரிஷிகளும் கைலாயம்பதியில் வசிக்கும் தக்ஷிணாமூர்த்தியின் சன்னதியை அடைந்து, பூலோகத்தின் நிலையை எடுத்துக் கூறி மானிடர்களுக்கு நல்ல அறிவையும், ஞானத்தையும் அருள்பாலிக்க வேண்டினர்.

    கருணைக்கடலான தக்ஷிணாமூர்த்தி அவர்களும் பூவுலகில் அவதாரம் செய்வதற்கு இசைந்தார். அவருடைய அவதார காரியத்திற்கு உதவியாக பிரம்மா, இந்திரன் முதலிய தேவர்களும் பூலோகத்தில் பிறவி எடுக்கச் சம்மதித்தார்கள்.

     தேவரும் முனிவரும் உள்ளம் குளிர்ந்தனர்.

         இதே சமயத்தில், பாரத தேசத்தில் எழிலார்ந்த கேரளத்தில் உள்ள காலடி என்கிற கிராமத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியைப் பார்ப்போம்.

     காலடியில் சிவகுரு என்கிற ஓர் அந்தணப் பெரியார் வாழ்ந்து வந்தார். ஆர்யாம்பாள் என்பவர் அவரது மனைவி. இவ்விருவரும் எப்பொழுதும் பூஜை செய்வதிலும், ஏழை எளியவருக்குத் தானதருமம் செய்வதிலும் ஈடுபட்டிருப்பார்கள். மிகவும் நல்லவர்களான இந்தத் தம்பதியருக்கு ஒரு பெரிய மனக்குறை இருந்தது. தங்களுக்குக் குழந்தையே இல்லை என்பது தான் அந்தக் குறை.

      விருஷாசலம் எனவும் சிவபுரம் எனவும் கூறப்படும் திருச்சூர் என்கிற பெரிய சிவ க்ஷேத்திரம் ஒன்று கேரளத்தில் உள்ளது. அங்குள்ள சிவபெருமானை மனமார ஒரு மண்டலம் (48 நாட்கள்) வழிபாடு செய்து வந்தால் மகப்பேறு கிடைக்கும் என்று சிவகுரு தம்பதிகள் கேள்விப்பட்டனர்.

      உடனே திருச்சூருக்குப் புறப்பட்டனர். 'வடக்குநாதன்'என்கிற பெயரில் திருச்சூரில் கோயில் கொண்டுள்ள சிவபெருமானை நாள்தோறும் ஆறுகாலமும் நெஞ்சுருகி வழிபட்டு வந்தனர். வடக்குநாதனுக்கு நெய்யாலேயே அபிஷேகம் செய்வது வழக்கம். எப்போதும் வடக்குநாத சிவலிங்கம் நெய் விழுதுகளில் தான் புதைந்திருக்கும். அதைப் பார்த்தால் பனிமலையின் நடுவே பரமசிவள் விளங்குவது நினைவு வரும். இந்த நெய்யைப் பிரசாதமாகப் பெற்று உட்கொண்டால் தீராத வியாதிகளும் தீரும்.

       சிவகுரு தம்பதியரின் உண்மையான பக்தியைக் கண்டு, வடக்குநாதனின் நெஞ்சம் நெய். போலவே உருகியது. அவர்களைக் கொஞ்சம் சோதனை செய்துவிட்டு வரம் தர எண்ணினார்.

        இருவரது கனவிலும் தோன்றினார் சுவாமி "உங்கள் பக்தியை மெச்சினேன், நீங்கள் விரும்பியபடி புத்திர வரம் தருகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை.. உங்களுக்கு நீண்ட ஆயுள் கொண்ட, ஆனால் புத்தியில்லாத பல குழந்தைகள் வேண்டுமா? அல்லது அற்ப ஆயுள் கொண்ட, ஆனால் புத்தியில் மிகச் சிறந்த ஒரே பிள்ளை வேண்டுமா? இரண்டில் ஒன்றைத்தான் தருவேன். நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்" என்றார் சிவ பெருமான்.

      பக்தியில் சிறந்த அத்தம்பதியரோ, "தேர்ந்தெடுக்க நாங்கள் யார்? எங்களுக்கு எது நல்லதோ, நாட்டுக்கு எது நல்லதோ அதை இறைவனான நீயே அறிவாய். எனவே உன் விருப்பப்படியே செய்தருள்வாய்'' என்றனர்.

        பரமன் மகிழ்ந்து ஆஹா! சோதனையில் வென்றுவிட்டீர்கள். உலகம் முழுவதற்கும் நன்மை செய்வதற்காக நானே உங்களுக்கு மகாபுத்திமானான ஒரு புத்திரனாகப் பிறப்பேன்'' என்று கூறி மறைந்தார்.

         தம்பதியர் ஆனந்தக்கடலில் ஆழ்ந்தனர்.

     வட விருட்சம் எனப்படும் ஆலமரத்தினடியில் அமர்ந்திருக்கும் தக்ஷிணாமூர்த்தி, வடக்குநாதனாக ஆகி, ஆர்யாம்பாளின் வயிற்றுக்குள் ஜோதி வடிவில் புகுந்தார்.

       உடனே சிவகுரு தம்பதியர் காலடிக்குக் திரும்பினர்.

      சரியாகப் பத்து மாதங்கள் சென்றன. வைகாசி மாதம், வளர்பிறை ஐந்தாம் நாளன்று, சிவபெருமானுக்கு உரிய திருவாதிரை நட்சத்திரத்தில் அந்தச் சிவபெருமானே ஆர்யாம்பாளுக்கு அருமைப் பிள்ளையாக அவதாரம் செய்தார்.

     "உலகுக்கெல்லாம் நன்மை செய்வதற்காகவே அவதரிப்பேன்'' என்று பெருமான் கூறியிருந்ததால் குழந்தைக்கு சங்கரன் என்று பெயரிட்டனர். வடமொழியில் 'சம்' என்றால் சுகம்', 'கரோதி என்றால் 'கொடுப்பவன்' 'சங்கரன்' என்றால் சுகத்தையும், ஆனந்தத்தையும் அளிக்கக் கூடியவன் என்று பொருள்.

      சங்கரக் குழந்தையின் அழகு தெய்விக ஒளியுடன் விளங்கியது. அக்குழந்தையைக் கண்ட அனைவரும் "இது சாதாரண மனிதக் குழந்தை அல்ல என்று பாராட்டிப் பணிந்தனர். சிவபெருமானிடம் காணப்படும் மான்; பசு, சூலம், கபாலம் முதலியன குழந்தையின் கை, கால்களில் ரேகைகளாக இருப்பது கண்டு அனைவரும் வியந்தனர்.

      இக்குழந்தை பிறந்தவுடனேயே யாகம் நடந்துகொண்டிருந்த ஒரு சில அபூர்வமான இடங்களில் வேள்வித் தீ வலப்புறமாகச் சுழித்துக்கொண்டு. ஓங்கி வளர்ந்தது. பிற மதஸ்தர்களும், கடவுள் இல்லை எனக்கூறும் நாஸ்திகர்களும் தங்கள் கொள்கைகளுக்கு ஆதாரமாகக் கையில் வைத்திருந்த சுவடிகள் தாமாகவே நழுவி விழுந்தன. இந்த அறிகுறிகளைக் கண்டு 'எங்கோ ஓர் மகான் அவதரித்திருக்கிறார்' என்று பெரியவர்கள் புரிந்துகொண்டார்கள்.

      குழந்தை சங்கரன் அறிவிலும், குணத்திலும் மிக உயர்ந்தவனாக விளங்கினான். அன்பால் அனைவரையும் கவர்ந்தான். மூன்றாவது வயதிலேயே அவனுக்கு அட்சாரப்பியாசம்' செய்தார்கள். அதாவது படிக்கவும் எழுதவும் கற்றுக் கொடுத்தார்கள். உடனே அவன் பெரிய பெரிய சாஸ்திரங்களையும் தானாகப் படித்து ஒரே முறையில் மனப்பாடம் செய்து கொண்டு விட்டான். அவற்றின் கருத்துக்களைத் தெளிவாகப் புரிந்து கொண்டான்.

     சங்கரனுக்கு நான்கு வயதான போது ஓரு துயர சம்பவம் திகழ்ந்தது, சிவகுரு காலமாகிவிட்டார்!

    சிவ குருவின் மரணத்தால் ஏற்பட்ட துக்கத்தைச் சிறிது சிறிதாக ஆர்யாம்பாளும் சங்கரனும் ஆற்றிக்கொண்டனர்.

     சங்கரனுக்கு ஐந்து வயதாயிற்று. ஆர்யாம்பாள் அவனுக்கு உபநயனம் செய்வித்தாள் - அதாவது பூணூல் கல்யாணம் நடத்தினாள்.

     பூணூல் போட்டுக்கொண்டபின் ஓரு சிறுவன் வீட்டைவிட்டு, ஆசிரியரிடம் சென்று அவருடனேயே வசிக்கவேண்டும். இதற்குக் 'குருகுல வாசம்' எனப் பெயர். குருவானவர் சீடனுக்கு வேதங்கள், அதன் அங்கங்கள், மற்ற சாஸ்திரங்கள், காரியங்கள் யாவும் போதிப்பார். மாணவன் அவருக்குப் பணிவிடை செய்து இவற்றைக் கற்க வேண்டும். படிப்பு முடிந்த பின் வீடு திரும்புவான். பூணூல் போட்ட பின் குருகுல வாசம் செய்து வேதம் கற்பவன் பிரம்மசாரி எனப்படுவான்.

     சங்கரன் அற்புத பிரம்மசாரியாக விளங்கினான். பிரம்மசாரிக்குக் கொஞ்சம்கூட அகம்பாவத் திமிர் இருக்கக்கூடாது என்பது விதி. பணிவு இருந்தால் தான் படிப்பு பயன் தரும். அகம்பாவம் இல்லாமல் இருப்பதற்கென்றே பிரம்மசாரியைப் தினமும் வீடு வீடாகச் சென்று பிட்சை வாங்கி வரச் சொல்வார் குரு.

     நமது சங்சரனும் இவ்வாறு பிட்சை வாங்கி வந்தான். ஒரு துவாதசி தினத்தன்று பரம ஏழையான ஒருவரின் வீட்டு முன் நின்று பிட்சை கேட்டான். அந்த வீட்டில் உணவுப் பண்டம் எதுவுமே கிடையாது. சாஸ்திரக் கட்டளைப்படி துவாதசி தினத்தில் கடவுளுக்கு நிவேதனம் செய்வதற்காக ஒரே ஒரு நெல்லிக் கனி மட்டுமே தேடி எடுத்து வந்திருந்தாள் அவ்வீட்டுப் பெண்மணி.

     பாலமுருகனைப்போல் வாசலில் வந்து நிற்கும் சங்கரனைக் கண்டதும் அப்பெண் மணிக்குக் கண்ணீர் வந்து விட்டது. "அடடா! பரம ஏழையான என்னிடம் இந்த தெய்வக் குழந்தைக்குப் பிட்சையிடுவதற்கு எதுவுமே இல்லையே' என்று மனம் குமுறினாள்.

     அவ்வீட்டிலிருந்த ஒரே ஒரு நெல்லிக் கனியைக் கொண்டுவந்து சங்கரனின் பிட்சா பாத்திரத்தில் இட்டாள். அவளது நல்ல உள்ளத்தை அன்பு வெள்ளத்தைக் கண்டு சங்கரன்' உருகிவிட்டான், உடனே செல்வத்திற்கு தெய்வமான லக்ஷ்மியைக் குறித்து ஓர் அற்புதத் துதி செய்தான்.

     ஓர் அதிசயம் நிகழ்ந்தது! அந்த வீட்டு முற்றத்தில் தங்கத்தினாலான 'நெல்லிக் கனிகள் மழையாகப் பொழிந்தன. அன்பு கொண்டு பிச்சையிட்ட ஒரு நெல்லிக்கனிக்கு ஈடாக, அவர்களது வறுமை முழுதும் மறையுமளவுக்குப் பொன் நெல்லிக் கனிகளை பொழிந்துவிட்டாள் செல்வத் தேவதை. சங்கரனின் மணிவாக்கே அதற்குக் காரணம்  பொன்மழை பொழிவித்த இத்துதி "கனகதாரஸ்தவம்'' என்றே வழங்குகிறது. அறிவில் இணையற்ற சங்கரன், மூன்றே ஆண்டுகளில் சகல நூல்களையும் கற்றுத் தேர்ந்து விட்டான். வேதங்கள், சாஸ்திரங்கள், காவியங்கள் யாவற்றிலும் பெரிய நிபுணனாகிவிட்டான் எட்டே வயதுப் பாலன் சங்கரன்.

     குருகுல வாசம் முடிந்து, வீடு திரும்பினான் சங்கரன். கணவனை இழந்திருந்த அன்னைக்கு எந்தக் குறையும் தெரியாதவாறு மிகுந்த அன்போடு பணிவிடை செய்து வந்தான்.'

        ஒருமுறை ஆர்யாம்பாளுக்கு நோய் உண்டாயிற்று. அதிகமாக நடக்க முடியாமல் அவளுக்கு சக்திக் குறைவு ஏற்பட்டது. காலடியில் இருக்கும்போதெல்லாம் அவள் ஒருநாள் - கூடத் தவறாமல் அவவூரில் ஓடும் புண்ணிய நதியான 'பூர்ணா' வில் தான் ஸ்நானம் செய்வாள். இந்த ஆற்றைச் 'சூர்ணா' என்றும் 'ஆல்வாய் புழை' எனவும் சொல்வார்கள். அப்போது ஆர்யாம்பாளால் நடமாடமுடியாததால் நதியில் ஸ்நானம் செய்யமுடியாமற் போயிற்று; இது அவளுக்கு மிகவும் குறையாக இருந்தது.

     அன்னையின் துயர் தீர்க்க எண்ணினான் சங்கரன். பூர்ணா நதியைப் பிரார்த்தித்து, "வா, வா'' என்று அழைத்தான். பரமேஸ்வரனின் அவதாரமான அவனது வார்த்தைக்கு நதியும் கட்டுப்பட்டது. பூர்ணா நதி தனது போக்கையே மாற்றிக் கொண்டு, சங்கரன் வீட்டுத் தோட்டத்திற்கே வந்து விட்டது. அன்னை பேரானந்தம் அடைந்தாள்.

     ஒரு நாள் சப்த ரிஷிகள் எனப்படும் மாமுனிவர் எழுவர் சங்கரன் தனித்திருந்த போது அவனிடம் வந்தனர். 'பெருமானே! நாளுக்குநாள் நாட்டில் நாஸ்திகம் வலுத்து வருகிறது. தாங்கள் ஆஸ்திகத்தை நிலை நிறுத்தவே அவதாரம் செய்து எட்டாண்டு முடிய இருக்கிறது. தங்களது அவதாரப் பணியை நினைவூட்டவே வந்தோம்'' என்றனர்.

   "நல்லது. பணியைத் தொடங்குவேன். துறவியாகி, வீட்டைவிட்டு. நாட்டைச் சுற்றிச்சுற்றி வந்து உபதேசித்தால் தான் இப்பணி நடைபெறும். இவ்விதம் நான் துறவியாவதற்கு வாய்ப்பாக இனி நிகழ்ச்சிகளை உருவாக்குவேன்.'' என்றான் சங்கரன்.

     சப்தரிஷிகள் திருப்தியுடன் விடை பெற்றனர்.

     சங்கரன் திட்டமிட்டபடியே சம்பவம் நடந்தது. ஒருநாள் அவன் பூர்ணா நதியில் நீராடுகையில் முதலை ஒன்று அவனுடைய காலைக் கவ்வி விட்டது.

     "அம்மா! அம்மா!'' என்று அலறினான் கங்கரன்.

     ஆர்யாம்பாள் கதிகலங்கிவிட்டாள். தன் உயிருக்குயிரான உத்தமக் குழந்தையை முதலை பற்றியிருப்பதைக் கண்டு துடி துடித்தாள். ஆனால் அவளால் எப்படி முதலையின் இறுக்கமான பிடிப்பிலிருந்து குழந்தையை விடுவிக்க முடியும்?

     ''ஐயோ! உன்னைக் காப்பாற்றுவது என் கையில் இல்லையே! கையாலாகாத பாவியாக நிற்கிறேனே!'' என்று கூறிக் கையைப் பிசைந்தாள் ஆர்யாம்பாள்.

     "இல்லையம்மா, என்னைக் காப்பது உன் கையில் தான் இருக்கிறது'' என்றான் சங்கரன்.

     அதன் பொருள் விளங்காமல் அவள் தவிக்க, சங்கரனே தொடர்ந்து கூறினான் ''அம்மா, இந்தப் பிறவியில் நான் முதலையினால் கொல்லப்பட வேண்டும் என்பது விதி ஆனால் இப்போதே நான் சந்நியாசம் செய்து கொண்டு. துறவியாகி, வீட்டையும் உறவினரையும் உடமைகளையும் விட்டு விட்டு வெளியேறினேனாகில் இந்தப் பிறவியே முடிந்து, எனக்கு வேறு பிறவி உண்டானதாகும். சாஸ்திரப்படி சந்நியாசம் என்பது மறுபிறவியாகும். அடுத்த பிறவியில் முதலை என்னை எதுவும் செய்ய முடியாது. எனவே இப்போது துறவியாவதற்கு நீ அனுமதி கொடுத்தால் முதலை என்னை விட்டுவிடும். என்னை பிழைக்க வைப்பது உன் கையில் தான் இருக்கிறது.'' என்றான் சங்கரன்.

     செல்வப் புதல்வன் தன்னை விட்டுப் பிரிந்து சந்நியாசியாக ஆவதை அன்னை அனுமதிக்க மாட்டாள் என்பதாலேயே, இந்த அசாதாரணமான நிகழ்ச்சியை சங்கரனே உண்டாக்கிவிட்டான்!

     சங்கரனின் எண்ணத்தை அறியாத ஆர்யாம்பாள் என்ன செய்வாள், பாவம் தன்னை விட்டுச் சென்றேனும் பிள்ளை உயிரோடு இருந்தால் போதும் என்று கருதினாள். "சரியப்பா! நீ துறவியாவதற்கு அனுமதிக்கிறேன்'' என்று கதறிக்கொண்டே கூறினாள்.

     அன்பே உருவான சங்கரன், ''அம்மா நான் எல்லா உறவுகளையும் விட்டுத் துறவியானாலுங்கூட, உன் உயிர் பிரிகிற சமயத்தில் உன்னிடம் வந்து சேருவேன்! நானே உனக்கு அந்திமக்கிரியை செய்து பிள்ளை என்கிற கடமையை நிறைவேற்றுவேன்'' என்று உணர்ச்சியுடன் கூறினான்.

     முதலையிடமிருந்து விடுபட்ட சங்கரனை வீட்டுக்கு வருமாறு அழைத்தாள் அன்னை. ஆனால் சங்கரனோ, "உலகில் உள்ள அன்னையர் அனைவரும் எனது அன்னையரே! ஆண்கள் அனைவரும் எனது சகோதரர்களே! பெண்கள் அனைவரும் எனது சகோதரிகளே! இந்த உலகில் உள்ள இல்லங்கள் அனைத்தும் எனது இல்லங்களே!'' என்று கூறிவிட்டு புதிய துறவி உருவம் பெறுவதற்காகக் காலடியை விட்டுப் புறப்பட்டான்.

     காலடியை விட்டு, பெற்றெடுத்து வளர்த்த அன்புத் தாயை விட்டு, இவ்வுலகத்தையும் விட்டுக் காலடி நோக நடந்து கொண்டேயிருந்தான் சங்கரன். "ஆபத்சந்நியாசம்'' என்கிற முறையில் பூர்ணா நதிக்குள் அவன் தனக்குத்தானே துறவற மந்திரத்தைச் சொல்லிக்கொண்டு சந்நியாசியாகி விட்டான். ஆனாலும் இப்போது ஆபத்து நீங்கிவிட்டதால் உத்தம சந்நியாசியான் ஒரு குருவினிடமிருந்து.. துறவறம் வாங்கிக் வாங்கிக்கொள்வதே வேத மதம் கூறும் முறையெனக் கருதினான். இவ்வாறு தனக்கு சந்நியாச உப்தேசம் தரவேண்டிய குரு யார், அவர் எங்கே - இருக்கிறார் என்பதெல்லாம் சிவ அவதாரமான சங்கரனுக்குத் தெரியும். குருவைத்தேடி சாதாரண பாலன் போல் காதம் காதமாகக் கால்தேய நடந்து செல்கிறான். நர்மதைக் கரையை இறுதியில் அடைகிறான்.''

     சங்கரன் அங்கே சென்றபொழுது நர்மதை பிரவாகமாகப் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. சங்கரன் தன் சக்தியால் அப்பிரவாகத்தைக் கமண்டலத்தில் அடக்கினான். பெருவெள்ளமாக இருந்த அந்த நதியை மக்ககளுக்கு உதவும் முறையில் கரைக்கு அடங்கி ஓடுகிற ஆறாக மீண்டும் பாயவிட்டான்.

     அங்கே நர்மதையின் கரையில் காத்திருந்த கோவிந்த பகவத்பாதர் இந்த அற்புதத்தைக் கண்டு, அன்பு பொங்கும் உள்ளத்தோடு சங்கரனை வரவேற்றார்.

     தலையிலிருந்த முடியைக் களைந்து, காஷாய ஆடை உடுத்துப் புதியதொரு தூய்மைப் பொலிவினைப் பெற்றான் சங்கரன். இதுவே துறவறத்தின் அடையாளமாகும். அவனுக்குத் துறவு மந்திரம் புகட்டினார் கோவிந்த பகவத்பாதர். "அனைத்தும் கடவுளின் தோற்றமே; மனித ஜீவனாகத் தன்னை எண்ணிக்கொண்டிருப்பவனும் உண்மையில் கடவுள் என்கிற ஒரே தத்துவம் தான்'' என்கிற உண்மையைக் கூறும் வேத மந்திரங்களுக்கு 'மகா வாக்கியங்கள்' எனப்பெயர். இந்த மகா வாக்கியங்களையும் சங்கரனுக்கு உபதேசித்தார். கோவிந்தர்.

     சந்நியாசியாகிவிட்ட சங்கரனை இனி நாம் மரியாதையுடன் சங்கரர் என்றே அழைக்கலாம். மகா வாக்கியங்கள் எல்லாம் சங்கரனுக்குத் தானாகவே அனுபவத்தில் தெரியும். மூல குருவான தக்ஷிணா மூர்த்தியே அவர்தாமே? என்றாலும் உலகத்தில் குரு-சிஷ்ய முறையின் பெருமை விளங்க வேண்டும் என்பதால் அடக்கத்துடன் கோவிந்தரிடம் சீடரானார்.

     தெய்வமாக இருந்து பெரிய சக்தியினால் மக்களை நல்வழிப்படுத்துவதைவிட, மனிதர் போல இருந்து அன்பால் அவர்களை உயாதது வது தான் சிறப்பானது; அப்போதுதான் மற்ற மானுடர்களுக்கும் தாங்கள் கூடத் தெய்வமாக உயரலாம் என்கிற நமபிககை பிறக்கும் என்று கருதினார்.

     எனவே கோவிந்தர் கட்டளையிட்டபடி அத்வைத விதியை, உலகினருக்குப் பிரச்சாரம் செய்யக் கிளம்பினார். கோவிந்தரும் இமாலயத்திற்குக் கிளம்பினார்..

     பாரதநாட்டில் உள்ள எண்ணில் அடங்காத புண்ணிய க்ஷேத்திரங்களில் முதலிடம் பெறுவது காசி. எல்லா மதங்களையும் சேர்ந்த பண்டிதர்களும் வாழ்ந்த இடம் காசி தான். அத்வைதத்தை எதிர்ப்பவர்களுடன் வாதம் செய்து வெல்வதற்குக் காசியே ஏற்ற இடம் என்பதால் அங்கு சென்றார் சங்கரர்.

     வண்டுகள் மலரை நாடிவந்து மொய்ப்பது போல் நம் சங்கரரைப் பாமரரும் பண்டிதரும் வந்து சூழ்ந்து அடிபணிந்து சீடராயின்ர். இறைவ்னது திருவடிகளிலேயே அவர் ஆழ்ந்திருந்ததால் "சங்கர பகவத் பாதர் என்றும் பெயர் பெற்றார்.

     காசியம்பதியில் கங்கைக் கரையில் இவரது உபதேசமும் கங்கையைப் போலக் கொந்தளித்து வந்தது. அத்வைதத்தை எதிர்த்து மாற்று மதக்காரர்களும் அவரது உபதேசத்தினால் அழுக்கு அகன்று தெளிவு பெற்றனர்.

     அற்ப ஆயுளே இம்மானுட உலகில் வாழப்போவதாக அல்லவா முன்பு வடக்கு நாதன் கூறியிருந்தார்? தன் உடல் அழிந்தாலும் உபதேசங்கள் அழியலாகாது என்பதால் அவற்றை எழுதி வைக்கலானார் ஸ்ரீ சங்கராச்சாரியார்.

     வியாசர் அருளிய பிரம்ம சூத்திரம், வேத ரிஷிகள் அருளிய பத்து உபநிஷதங்கள், கண்ணன் அர்ஜுனனுக்கு உபதேசித்த கீதை ஆகிய மூன்று நூல்களுக்கும் ஸ்ரீ சங்கரர் உரை இயற்றினார். இவைகள் 'பாஷ்யம்' எனப்படும். இந்நூலின் மூலக் கருத்துக்களையே மையமாகக் கொண்டு அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் அநேக வேதாந்த நூல்களை இயற்றியுள்ளார். அவைகளே 'பிரகரண கிரந்தங்கள்' எனப்படும். இவை தவிர குழந்தைகளுக்கு இதே கருத்தும், பக்தியும் கொண்ட 'கணேச பஞ்ச ரத்னம்' போன்ற ஸ்தோத்திரங்களையும் இயற்றியுள்ளார்.

     இன்று உலகெங்கும் உள்ள அறிஞர் பெருமக்களும், ஆன்மீக அனுபவசாலிகளும் சங்கரர் தந்துள்ள இந்த நூல்களைப் போற்றிப் புகழ்கின்றார்கள்.

     பாரத நாட்டின் எல்லாப் பகுதிகளைச் சேர்ந்தவர்களும் காசிக்கு வருவார்கள். அங்கு கங்கா ஸ்நானம் விசேஷமானது. அதோடு காசியில் கோயில் கொண்டுள்ள விசுவநாத சிவபெருமான், விசாலாட்சி அம்பிகை, அன்ன பூரணியம்பிகை இவர்களைத் தரிசிப்பது பெரும் புண்ணியமாகும். முற்காலத்தில் உத்தமமான குருவைத் தேடியவர்களும் காசிக்கே சென்றனர்.

     இவ்விதம் காசிக்குச் சென்ற ஓர் இளைஞரே சநந்தனர். இவர் சோழ நாட்டைச் சேர்ந்தவர். ஆசாரியரை காணக் காசி சென்ற இவர் ஒப்பில்லாத ஆசாரிய மணியான சங்கரரைக் கண்டு அவரிடம் நிகரற்ற பக்திகொண்டு சீடரானார். இவர் நரசிம்ம மூர்த்தியிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.

     சநந்தனரின் பக்தி எவ்வளவு உயர்ந்தது என்று உலகு உணரச் செய்யவேண்டும் என உளம் கொண்டார் ஸ்ரீசங்கரர்.

    ஒரு நாள் சங்கரர் கங்கையின் இக்கரையில் அமர்ந்து உபதேசம் செய்து கொண்டிருக்க, அக்கரையில் அவரது வஸ்திரங்களை உலர்த்தி எடுத்து மடித்துக்கொண்டிருந்தார் சநந்தனர்.

       திடுமென சங்கரர், ''சநந்தனா வா! நான் கட்டியிருக்கும் வஸ்திரம் – ஈரமாகி விட்டது. உலர்ந்த வஸ்திரத்தை விரைவில் கொண்டுவா'' என்று உரக்கக் கூவினார்.

     குருநாதனின் கட்டளை வந்ததும் தம்மை மறந்தார் சநந்தனர். படகு அமர்த்திக் கொண்டு கங்கையைக் கடக்க வேண்டும் என்பதையும் குருபக்தியின் வேகத்தில் மறந்தார். ''குரு ஈரத் துணியுடன் நிற்கிறார்! 'வா' என்று தன்னை அழைக்கிறார்'' என்று மட்டுமே அவருக்குப் புரிந்தது. உடனே தாமே கங்கை வெள்ளத்தின்மீது நேராக நடக்கத் தொடங்கிவிட்டார்!

     விந்தை விளைந்தது! அந்த பக்தி மயமான சீடர் கங்கையில் முழுக ஆசாரியர் பார்த்துக் கொண்டிருப்பாரா? எனவே அக்கரைக்கும் இக்கரைக்குமாக குபுகுபுவென பெரியப் பெரிய தாமரை மலர்கள் முளைத்து ஒரு மலர்ப்பாலமே உருவாகிவிட்டது. அந்தந் தாமரை மலர்களின் மீது அடியெடுத்துவைத்தே சநந்தனரும் இக்கரைக்கு வந்து சேர்ந்தார். ஆனால் அவரது நினைவு முழுவதும் குருவிடமே இருந்ததால் மலர்ப் பாலம் உண்டானதே அவருக்குத் தெரியாது! எனவே சங்கரர் அவரிடம்  நதியை எப்படிக் கடந்தாய்?'' என்று கேட்ட போது அவர், "குருவே! தங்களை நினைத்தால் பிறப்பு-இறப்புத் தொடரான சம்சாரக் கடலே மறைந்து போகுமே! அவ்விதமிருக்க கங்கை மறைந்ததில் அதிசயம் என்ன?'' என்றார்.

     பத்மங்களின் மீது பாதத்தை வைத்து வந்த இவருக்கு "பத்ம பாதர் என்று புதுப்பெயர் சூட்டினார் நம் பகவத்பாதர்.

    ஒருநாள் சங்கரர் கங்கையில் நீராடி விட்டுச் சீடர் புடைசூழ விசுவநாதர் ஆலயத்திற்குச் சென்று கொண்டிருந்தார்.

     அப்போது ஒரு புலையனும், புலைச்சியும் நம்முடைய ஆசாரியர் போகின்ற வழியில் குறுக்கே வந்துவிட்டார்கள். போதாத குறைக்கு கையில் நான்கு நாய்களை வேறு பிடித்திருந்தார்கள்!

     "போ, போ! விலகிப் போ! எட்டிப் போ என்று சங்கரரின் சீடர்கள் கூவினர்.

     அவன் சிரித்தான்! "அத்வைதம்,  அத்வைதம் என்று சொல்லிவிட்டு என்னை விலகிப்போகச் சொல்கிறீர்களே, இது பெரிய முரண்பாடு அல்லவா? எல்லாமே ஒரே சத்தியமான கடவுளின் தோற்றந்தான் என்கிறது உங்கள் அத்வைதம். அவவாறெனில் உங்களைப்போலவே நாங்களும் அதே சத்தியத்தின் தோற்றந்தான். உடல் நமக்கு வேறுவேறானாலும், உடலுக்குள்ளே இருக்கிற பரமாத்மா ஒருவர்தான். இந்த உடம்பைப்பற்றிய எண்ணத்தையே விலக்கி விட்டுப் பரமாத்மாவாக இருக்கவேண்டும் என்றுதான் இந்த ஆசாரியர் உபதேசிக்கிறார். அப்படியிருக்க, உங்கள் உடம்பின் அருகிலிருந்து எங்கள் உடம்பு விலகிப்போக வேண்டும் என்று சொல்வதில் பொருள் இல்லை. உங்கள் உடம்புக்குள் உள்ள ஞான ஒளியிலிருந்து எங்கள் உடம்பிலுள்ள ஞான ஒளி விலக வேண்டும் என்று நீங்கள் கருதினால் அதுவும் அர்த்தமற்றதாகும். ஏனெனில் இந்த ஞான ஒளிகள் அனைத்தும் ஒன்றே தான். தன்னை விட்டே தான் எப்படி விலக முடியும்?'' என்று இப்படி ஆணித்தரமாகக் கேட்டுவிட்டான் அந்தப் புலையன்.

     உடனே சத்தியத்தையே தலையால் வணங்கும் ஸ்ரீ சங்கரர் இப்படிப்பட்ட ஞான நிலையை அடைந்து பேசுபவர் புலையனாக இருக்க முடியாது. காசிவிஸ்வநாதரும், விசாலாட்சியுமே நம்மைச் சோதிக்க வந்துள்ளனர் என்பதை ஞான திருஷ்டியினால் உணர்ந்து 'மனீஷா பஞ்சகம்' என்கிற ஐந்து சுலோகங்களைப் பாடினார்.

     உடனே புலையன் நின்றிருந்த இடத்திலே விஸ்வநாதப் பெருமானே நின்றார்; புலைச்சி விசாலாட்சியானாள். நான்கு நாய்களும் நான்கு வேதங்களாயின.

     என் மறு உருவமான சங்கரா! வாய்ப்பேச்சில் மட்டும் வேதாந்தம் கூறாமல் வாழ்விலேயே அதை நீ நடத்திக் காட்டுபவன் என்று உலகறியச் செய்யவே இந்த நாடகம் நடித்தேன்'' என்று கூறி ஆசி வழங்கி மறைந்தார் விஸ்வநாதப் பெருமான்.

     சங்கரருக்குப் பதினாறு வயது நிறைகிற சமயம். தொண்டு கிழவரான ஒரு பிராமணர் அவரிடம் வாதம் செய்யவந்தார். சங்கரர் செய்துள்ள பிரம்ம சூத்ர பாஷ்யத்தை ஆட்சேபித்து அந்தக் குடுகுடு கிழவர் எதிர் வாதம் ஆரம்பித்தார்.

      சங்கரர் தமது கூர்மையான அறிவுத் திறனால் அந்த எதிர்வாதங்களை முறியடித்தார்.

     ஆனால் கிழவனாரும் மதிநுட்பத்திலே சங்கரருக்குச் சளைத்தவராக இல்லை. சங்கர் ஓர் உண்மையை நிலைநாட்டினால், அடுத்தபடி கிழவனார் மேலும் பல ஆட்சேபங்களைக் கிளப்பினார்.

     இப்படியே வாதம் போய்க்கொண்டிருந்தது. மணிக்கணக்கில் மட்டும் அல்லாது நாட்கணக்கிலும் வாதம் முடியாமல் தொடர்ந்து கொண்டேயிருந்தது.

     மாமேதையான நமது ஆசாரியாருக்குச் சமமாக இப்படி வாதம் செய்யக்கூடியவர் எவராயிருக்கக்கூடும் என்று அதிசயித்தார் பத்மபாதராகிவிட்ட சநந்தனர். "இந்தச் கிழவர் நிச்சயமாகச் சாமானிய மானுடராக இருக்க முடியாது; நம்முடைய குருநாதரைப் போன்றே இவரும் ஓர் அவதார புருஷராகத் தான் இருக்க வேண்டும்'' எனக் கருதி மிக பயபக்தியுடன் அவ்விருவரையும் நோக்கினார்.

     அவரது பக்தியின் சக்தியால் வந்திருக்கும் உண்மையை மூடியிருந்த திரை விலகியது. வந்திருக்கும் கிழவர் யாரென்று பத்மபாதர் கண்டுகொண்டார்.

      அவர் வேறுயாருமில்லை! பிரம்ம சூத்திரத்தை இயற்றிய சாட்சாத் வியாச மகாமுனிவரே தான் அவர்! அந்த வியாசர் யாரெனில் நாராயணனின் அவதாரமே தான் அவரை அடையாளம் கண்டுகொண்ட பத்மபாதரும் திருமாலின் அம்சம்தான்.

     பத்மபாதர் இவ்வாறு சிந்தித்துக்கொண்டிருக்கும்போதே - சங்கரரும் வந்திருக்கும் கிழவரின் வேஷத்தைப் புரிந்துகொண்டார். மகரிஷியே! தங்களிடம் அடியேன் வாதிக்குமாறு செய்யலாமா? - அபசாரம் செய்து விட்டேனே!'' என வியாசரை வணங்கினார்.

     வியாசமா முனிவர் அருளுடன் நகைத்து, “ஐயனே! என் சுய உருவைக் காட்டினால் நீ உன் வாதத் திறனைக் காட்டமாட்டாய் என்றே மாறுவேஷம் போட்டேன். நீ எனது பிரம்ம சூத்திரத்துக்குத் தந்துள்ள விளக்கமே நான் மனதார விரும்புவதாகும். அதுவே உண்மை. இந்த உண்மையை நீ. நாடு முழுவதும் பிரசாரம் செய்யவேண்டும். இன்றோடு உனக்குப் பதினாறாண்டு நிறைந்தது. இதோடு ஆயுளை முடித்துவிடாதே! உனக்கு இன்னும் பதினாறாண்டு வாழ்வினைப் பிரம்மாவிடமிருந்து பெற்று வந்துள்ளேள். உனது வாக்கியங்களை நாடு முழுவதும் பரப்புவாயாக!" எனக்கூறி மறைந்தார் வியாச மாமுனிவர்.

     நாடு முழுவதும் அத்வைத உண்மையை சங்கரர் பரப்பவேண்டும் என்று வியாசர் விரும்பியபடியால், அவர் காசியிலிருந்து புறப்பட்டார்.

     இன்று அலகாபாத் என்று சொல்லப்படுகிற பிரயாகைக்கு விரைந்தார் சங்கரர். காரணம், அங்குதான் குமாரில பட்டர் என்ற பெரும் பண்டிதர் மரணத் தருவாயில் இருந்தார். அத்வைதத்தை அவர் ஏற்குமாறு செய்துவிட்டால், அவரைச் சேர்ந்த ஏராளமான சிஷ்யகோடிகளும் அத்வைதத்தைத் தழுவிவிடுவர். அவரையும் அவரைச் சேர்ந்தவர்களையும் 'கர்ம மீமாம்சகர்கள்' என்பார்கள்.

     புத்த மதத்தவருக்கு வேதகர்மங்கள் கிடையாது. ஆதியில் அவர்களது கருத்துக்களை வெல்ல எண்ணிய இந்தக் குமாரிலபட்டர், பௌத்தனாக மாறுவேஷம் பூண்டு பெளத்தர்களுடனேயே வசித்தால் தான் அவர்களது கருத்துக்களை கற்கலாம்; பிறகு அவற்றை எதிர்வாதத்தால் முறிக்கலாம் என்றெண்ணிணார். அவ்விதமே பௌத்தராக வேஷம் போட்டு அம்மதக் கொள்கைகள் முழுவதையும் கற்றுக்கொண்டார்.

     பின்பு வேதகர்மங்கள் அவசியம் என்பதை நிலைாட்டும் போது, இக்கர்மங்களை விலக்கும் புத்த மதத்தை ஆணித்தரமாகக் கண்டித்தார்.

     கடைசியில் ஒருநாள் அவருக்கு வருத்தம் உண்டாயிற்று. "அடடா! என்னைத் தங்களில் ஒருவனாக எண்ணி அந்தப் பௌத்தர்கள் பேணிக் காத்தனரே! தங்களது மர்மக் கருத்துக்களை போதித்தனரே! இவர்களிடம் வேஷம் போட்டு வஞ்சனை செய்துவிட்டேனே'' என்று பச்சாத்தாபம் கொண்டார்,'' இதற்கு சாஸ்திரம் கூறும் ஒரே பிராயச்சித்தம் 'துஷாக்னிப் பிரவேசம்' தான். அதாவது தன்னைச்சுற்றி உமியை மலையாகக் குவித்துக்கொள்ள வேண்டும். பிறகு அந்த உமிக்குத் தீ மூட்ட வேண்டும். அந்த வெம்மையிலேயே நான் அணுவணுவாகச் சாகவேண்டும்.''

     சத்தியசந்தரான குமாரிலர் இவ்விதம் உயிர் விடுவதை அறிந்த சங்கரர் அவரிடம் விரைந்தார். ''மதிப்புக்குரிய குமாரிலரே! புத்த மதத்தைக் கண்டித்துத் தாங்கள் வேத கர்மாக்களை நிலைநாட்டியது சரியே! ஆனால் உயிரற்ற கர்மம் தானாகப் பலனளிக்காது என்பதையும், எல்லாக் கர்மாக்களையும் ஒழுங்குபடுத்தும் பேரறிவான கடவுளே பலன் தரு பலன் தருகிறான் என்பதையும் புரிந்துக் கொள்ளும். அத்வைதம் மறையாத பெரும் ஆனந்தம் என்பதை உய்த்து உணருங்கள்'' என்றார் சங்கரர். அவரது வாதத்தால் குமாரிலரும் அத்வைத உண்மையை ஏற்றார். உமிக்காந்தலில் உடலைக்கருக்கி உயிரை அத்வைதமாகக் கரைத்தார்.

     மண்டன மிச்ரர் என்கிற ஒரு புகழ்பெற்ற பண்டிதரை வென்றாலே தமது வெற்றி நிலைக்கும் என முடிவுசெய்தார் ஸ்ரீசங்கரர். எனவே மண்டன மிச்ரர் வசித்துவந்த மாஹிஷ்மதி என்கிற அந்த நகரத்திற்குச் சென்றார். பண்டித திலகமான மண்டனர் வாழ்ந்த அவ்வூரின் பாமர பெண்டிரும், கூட்டுக் கிளிகளும் கூட கர்ம மீமாம்சை வாசகங்களைக் கோஷித்துக்கொண்டிருப்பது கேட்டு ஆச்சரியப்பட்டார்.

     சங்கரர் அவரது வீட்டை அடைந்த போது. உள்ளே மண்டனர் திதி கொடுத்துக் கொண்டிருந்தார். எனவே வாயிற்கதவு சாத்தியிருந்தது. சங்கரர் தமது விசேஷ சக்தியைப் பிரயோகித்து அவரது வீட்டினுள் சென்றுவிட்டார்.

   திதி கொடுக்கும் போது சங்கரர் வந்ததைக் கண்டு மண்டன மிச்ரர் கோபமாகப் பேசப்பேச, சங்கரரோ சற்றும் கோபமின்றி ஹாஸ்யமாகப் பதில் சொல்லிக்கொண்டு இருந்தார்.

     அந்த ஹாஸ்யத்தின் உள்ளே தொனிக்கின்ற அறிவுத் திறனை வியந்தார் மண்டனர். அவரும் அறிஞராதலால், இத்தகைய அறிவாளியை அடித்து விரட்டாமல் வாதம் செய்ய எண்ணினார். சங்கரர் விரும்பியதும் இதுதான்;

     திதி முடிந்த பின் இருவரும் வாதத்திற்கு அமர்ந்தார்கள். தீர்ப்புச் சொல்ல மத்தியஸ்தர் ஒருவரை வைத்துக்கொள்ள வேண்டும் என்றார் மண்டன மிச்ரர்.

     "தங்கள் மனைவி சரஸவாணியே மத்தியஸ்தராக இருக்கலாமே, என்றார் சங்கரர். மண்டனர் இணங்கினார்.

     சரஸவாணி மட்டும் தயங்கினாள். அவள் அறிவுத் தெய்வமாதலால் சங்கரரை சிவபெருமானே என்று புரிந்துக்கொண்டாள். "அவர் எப்படியும் என் கணவரை வென்று விடுவார். என் கணவர் தோற்றார் என்று நானே எப்படிச் சொல்லமுடியும்?'' என்று தயங்கினாள். எனவே இருவரும் இரு மலர் மாலைகளை அணிந்து கொள்ளச்செய்து," எந்த மாலை முதலில் வாடுகிறதோ அவரே தோற்றதாகக் கருதவேண்டும்'' என்றாள்.

     காரசாரமான வாதப்பிரதிவாதம் நடந்தது. முடிவில் மண்டனரின் மாலை வாடிற்று; சரஸவாணியின் முகமும் வாடிற்று.

     சரஸவாணியின் முகம் வாடியதற்குக் காரணம், தனது கணவர் தோற்றுவிட்டார் என்பது மட்டுமல்ல. இந்த வாதத்துக்கு முன் விதிக்கப்பட்ட நிபந்தனை தான் காரணமாகும். அந்த நிபந்தனை என்னவெனில், சங்கரர் தோற்றுவிட்டால் அவர் துறவறத்திலிருந்து நீங்கித் திருமணம் புரிந்து  இல்லறம் ஏற்று மண்டனரின் சீடராகிவிட வேண்டும்; மாறாக, மண்டனர் தோற்று விட்டால் அவர் இல்லறத்தை விட்டுத் துறவியாகி சங்கரரின் சீடராக வேண்டும்.

     இப்போது சங்கரர் வென்றதால் மண்டனர் இல்லறத்தை விட்டு அவருடன் புறப்பட்டுவிட்டார்.

     கணவனின் பிரிவைத் தாளாத சரஸவாணி கலங்கினாள். ஆயினும், அவள் அறிவுத் தேவதையின் அவதாரமல்லவா? தன் கணவருடன் கிளம்பிய ஆசாரியாரின் முன்சென்று, "சுவாமீ! கணவன் மனைவி இருவரும் ஈருடல் ஆயினும் ஒரே உயிர் என்கிற சாஸ்திரத்தைத் தாங்கள் அறிந்திருப்பீர்களே! இப்போது உயிரில் ஒரு பாதியை மட்டும் தானே தாங்கள் வாதத்தில் வென்றீர்கள்? மற்ற பாதியான என்னுடனும் வாதம் நடத்தி ஜயித்தாலே இவரைத் தாங்கள் வென்றதாக ஆகும்'' என்றாள்.

     அவள் கூறியதில் இருந்த உண்மையை மதித்த ஆசாரியர் அவளுடனும் வாதம் புரிய இணங்கினார்.

     மகா புத்திசாலியான சரஸவாணி மிகச் சிக்கலான வினாக்களை கணை மழைபோல விடுத்தாள். சங்கரரோ அதியற்புதமான விளக்கங்களைத் தந்துவிட்டார்.

     அதன்பின் சரஸவாணியால் ஏதும் செய்ய இயலவில்லை. கணவர் சென்றபின் இம் மண்ணுலகில் தான் இருக்கவேண்டாம் எனக்கருதி, சரஸ்வதிக்கு உரிய பிரம்ம லோகத்துக்குக் கிளம்பினாள்.

     ஆனால் சங்கரரோ, வனதுர்கா மந்திரத்தை ஜபித்து, அதனால் அவளைக் கட்டிக் கிளம்பவொட்டாமல் நிறுத்திவைத்தார். ''அம்மா! உனக்கு இந்த உலகத்திலேயே ஓர் உத்தமமான காரியம் வைத்திருக்கிறேன்'' என்று சிரித்துக்கொண்டே கூறினார்.

     'மண்டன மிச்ரர் துறவியாகிவிட்டார்; சுரேசுவரர் என்கிற சந்நியாசப் பெயருடன் சங்கரரின் சீடராகச் செல்கிறார்' என்று வெளியுலகம் அறிந்ததும் ஏராளமான கர்ம மார்க்கக்காரர்கள் சங்கரரின் ஞான மார்க்கத்தைத் தழுவலாயினர். ஒரு நிலையில் கர்மம் அவசியம் என்றும் பிறகு கர்மமற்ற ஞான அனுபவம் மட்டுமே நிற்கும் என்றும் கூறும் அத்வைதம் வெற்றிபெற்று வந்தது.

    கடவுளிடம் உண்மையான அன்பு செலுத்துவதே பக்தி. உண்மையான அன்பு யாதெனில், 'அந்தக் கடவுளேதான் எல்லாமும்; எனவே அவனை வழிபடுகின்ற நானும்கூட அவனேதான்' என்பதை உணர்ந்து, அன்பினால் அவனன்றித் தானில்லாமல் கரைந்து ஒன்றாகிவிடுவதுதான்.

   ஆனால் சங்கரரின் காலத்திலிருந்த பக்தி இவ்வாறு அத்வைத ஞானத்தோடு இணைந்ததாக இருக்கவில்லை. பல வேறு தெய்வங்களும் ஒரே கடவுள் எடுத்துக் கொள்ளும் பல வடிவங்கள் தான் என்பதை மறந்து அவரவரும் தான் வழிபடுகின்ற தெய்வமே மற்ற தெய்வங்களை விட உயர்ந்தது என்று வாதப்போர் செய்து வந்தனர். இது போதாது என்று அன்பே வடிவான கடவுளின் உக்கிர ரூபங்களைப் பலர் வழிபட்டு, அதற்காகத் தாங்களும் மிகப் பயங்கரமான வழிபாட்டு முறைகளை மேற்கொண்டனர். கர்ம, ஞான வழிகளைச் செம்மை செய்த சங்கரர். அன்பு மயமான ஆண்டவன் வழிபாட்டில் புகுந்துவிட்ட அச்சமூட்டுகிற, அருவருப்பூட்டுகிற அம்சங்களை விலக்கிக்கொண்டு நாட்டில் அருள் மாரியாகச் சஞ்சரித்துவந்தார்.

     சுரேசுவரருடனும் சரஸவாணியுடனும் கர்நாடகத்தில் துங்கபத்ரா கரையில் உள்ள சிருங்ககிரியை அடைந்தார் சங்கரர். அங்கே உடன் வந்த சரஸவாணி மணலில் ஒரு வினாடி தயங்கி நின்றுவிடவே, சங்கரர் பின்னோக்கித் திரும்பினார். பின்னர் அங்கே பீடம் அமைத்து சரஸவாணியை அங்கு பிரதிஷ்டை செய்தார். இவ்வாறு சிருங்ககிரி சாரதா பீடம் உதித்தது.

     "எதிர்காலத்துக்குத் தமது எழுத்துக்கள் இருந்தால் மட்டும் போதாது. அந்த எழுத்துக்களின் உண்மையை வழிகாட்டிகளாக இருந்து நடத்திக்காட்டும் ஞான பரம்பரைகள் என்றென்றும் இருக்க வேண்டும்' என்று திருவுளம் கொண்டார் ஸ்ரீ சங்கர பகவத்பாதர். தமக்குப் பின்பு எங்கெங்கோ என்றென்றோ பிறக்கப்போகிறவர்களிடம் கூட அவருக்கு இத்தனை கருணை! அவர்களை முன்னிட்டே நாட்டின் பல இடங்களில் மடங்களை நிறுவினார்; இம்மடங்கள் ஒவ்வொன்றிலும் ''சங்கராசாரியர்'' என்றே பெயர்கொண்ட ஆசார்யர்களை அமர்த்தினார். இந்த சங்கராசார்யர்களும் இவ்விதமே சீடப் பரம்பரையை உண்டாக்கிவருகின்றனர். அதனால் தான் இன்றும் சங்கர மடங்களைச் சார்ந்த சங்கராசார்யர்களை நாம் தரிசித்து வருகிறோம்.

       சிருங்ககிரியில் ஸ்ரீ சங்கர பகவத் பாதர் இருந்தபோது, காலடியில் தனது அன்னையின் உயிர் ஊசலாடுவதை உணர்ந்தார். மரண காலத்தில் அவளருகே தாமே இருந்து அவளுக்கு அந்திமக்கிரியையைச் செய்வதாக முன்பு வாக்குத் தந்திருந்தார் அன்றோ? உலகம் போற்றும் ஆசாரியர் அன்பு மகனாக மாறி அன்னையிடம் ஓடினார்.

      அந்திமக் காலத்தில் அருமை மைந்தனைக் கண்டு அகமகிழ்ந்தாள் ஆர்யாம்பாள். சங்கரர் திருமாலைக் குறித்துப் பாமாலை பாடினார். பெருமாளைப் போலவே நீலமேக சியாமளராக, சங்கு சக்கரம் தாங்கிய வைகுண்டலோகத் தூதர்கள் விமானத்துடன் வந்துவிட்டனர். ஆர்யாம்பாளை அவ்விமானத்தில் ஏற்றிக்கொண்டு அவர்கள் விண்ணுலகு சென்றுவிட்டனர்!

       முன்பு வாக்களித்தவண்ணம் அவளது உடலைத் தாமே தகனம் செய்ய முன்வந்தார் சங்கரர். இது துறவி செய்யத்தகாத செயல் என்று ஊராரும், உற்றாரும் பழித்து, இடித்துரைத்து விட்டுச் சென்று விட்டனர். ஆயினும் சத்தியமும், அன்புமே எல்லா ஆசாரங்களுக்கும் மேம்பட்டது எனக் கருதிய சங்கரர் - தன்னந்தனியாக தாம் ஒருவரே அன்னையின் உடலத்தைத் தோட்டத்திற்குச் சுமந்து சென்று சிதையில் இட்டார். ஆசாரியப் பெருமான் ஆசாரசீலர் மட்டும் அல்ல. அவர் அன்பின் வடிவம்; உண்மையின் உருவம்.

       அன்னையின் இறுதிக்கடனை முடித்த பின்னர் தன் அவதார நோக்கத்தைப் பூர்த்தி செய்வதற்கு தேசம் முழுவதையும் காலால் நடந்து திக்விஜயம் செய்தார். சென்ற இடமெல்லாம் மற்ற கொள்கைக்காரர்களை வென்று வேத வழியான வைதீக மதத்திற்கு திருப்பினார். பல ஆலயங்களில் தமது மந்திர சக்தியால் யந்திரங்களை ஸ்தாபித்து அவற்றின் மூலம் பராசக்தியின் அருள் உலகில் மேலும் வலுவாகப் பாய வகை செய்தார். சங்கரரைப்போல் உலக நலனுக்காகப் பல காரியம் சாதித்த இன்னொரு வரை எண்ணிப்பார்க்கவும் இயலாது. நான்கு முறை அவர் பாரதத்தைச் சுற்றிவந்தாராம். இத்தனைக்கும் அவர் வாழ்ந்தது முப்பத்திரண்டே ஆண்டுகள் தாம்! மக்கள் உயர்வு பெறவேண்டும் என்கிற மகத்தான கருணை ஒன்றே அவரை இப்படி செயலில் ஈடுபடுத்தி அச்செயலுக்கு ஜெயமும் பெற்றுத்தந்தது.

       இந்த திக்விஜயத்தில் அவர் ஒருமுறை கர்நாடக நாட்டில் உள்ள மூகாம்பி என்கிற க்ஷேத்திரத்தை அடைந்தார். அங்கு வெகு உக்கிரமாகக் கோயில் கொண்டிருந்த அம்பிகையை சங்கரர் சாந்தப்படுத்தி அவளது உக்கிரத்தை ஒரு ஸ்ரீ சக்கரத்துக்குள் அடக்கினார்.

       இல்வூரில் ஓர் அந்தணர் தமது ஊமைந் பிள்ளையுடன் சங்கரரை தரிசிக்க வந்தார். சங்கரர் அந்த ஊமைக் குழந்தையிடம் "நீ யார்?'' என்று கேட்க அக்குழந்தை கணீரென்று பதில் கூறிற்று. "நான் இந்த உடல் அல்ல; எங்கும் பரவியுள்ள ஆத்மா வான ஒரே சத்யம் தான் நான்'' என்று கூறியது குழந்தை. உள்ளங்கை நெல்லிக் கனியாக இவ்வுண்மையை அக்குழந்தை தெரிந்துக் கொண்டிருந்ததால் அக்குழந் தைக்கு ''ஹஸ்தாமலகர் என்று பெயர் சூட்டினார் ஸ்ரீசங்கரர்.

       ‘ஹஸ்தம்' என்றால் 'கை'. 'ஆமலகம்' என்றால் 'நெல்லிக்கனி!’ 'ஹஸ்தாமலகரை தமது முக்கியமான சீடர்களுள் ஒருவராக ஏற்றுக் கொண்டார் சங்கர பகவத் பாதர்.

       பத்மபாதர், சுரேசுவரர், ஹஸ்தாமலகர் ஆகிய முக்கியமான மூன்று சீடர்களுடன் வேறு பல பேரரறிஞர்களும் அவரிடம் வேதாந்த பாடம் பயின்றனர்.

       இந்தச் சீடர்கள் யாவரும் 'கிரி' என்ற ஒரு சீடனைக் குறித்து மிகவும் ஏளனமாகப் பேசி எள்ளிநகையாடி வந்தனர். அடக்கத்தின் உருவமான கிரி, குருநாதர் பாடம் நடத்தும்போது வாயே திறக்க மாட்டார். எந்த சந்தேகமும் கேட்க மாட்டார். ஆகையால் அவரை எதுவுமே புரிந்து கொள்ளாத மூடம் என்று எண்ணி மற்றவர்கள் அலட்சியம் செய்தனர். உடல் வணங்கி வேலை செய்து குருவுக்குக் கைங்கரியம் செய்ய மட்டுமே கிரிக்குத் தகுதியுண்டு, புத்தியில் அவரது போதனைகளை ஏற்கும் திறன் அவருக்கு இல்லை என்பது இவர்களின் எண்ணம்.

       எல்லாமறிந்த சர்வயக்ஞரான சங்கரர் இந்த எண்ணத்தை அறியாமலிருப்பாரா? இவர்களுக்கு நல்லறிவு தர எண்ணினார்.

       ஒருநாள் கிரி தவிர ஏனைய சீடர்கள் பாஷ்ய பாடம் கேட்கக் குழுமிவிட்டனர். இருந்தாலும் ஆசாரியர் தொடங்கவில்லை.கிரி வரட்டும்'' என்று சொல்லியபடி காத்திருந்தார்.

  "அவனுக்காக இப்படி ஆசாரியர் கால தாமதம் செய்கிறாரே?'' எனச் சீடர்கள் முணுமுணுத்துக்கொண்டனர்.

     கடைசியில் கிரியும் வந்தார். வழக்கமாக மலை போல் மலைத்து மலைத்து நிற்பவர் இன்று ஆனந்தத்தில் நடனமாடிப் பாடிக் கொண்டு வந்தார். அவர் - பாடிய எட்டு சுலோகங்களைக் கேட்டு மற்ற சீடர்கள் அனைவரும் அதிசயத்தில் ஆழ்ந்தனர். அவர்கள் அதுவரை கேட்டிராத அந்தச் செய்யுட்களை கிரியே இயற்றியிருக்கிறார்! ஸ்ரீ சங்கர பகவத்பாதரைப் போற்றும் அரிய துதி அது!

       மற்ற சீடர்களுக்கு இப்போதுதான் கிரியின் அருமை பெருமைகள் தெரிந்தன. தோடக விருத்தத்தில் துதி செய்த அவர் 'தோடகர்' என்கிற விருதைப் பெற்றார். அவர் இயற்றிய 'தோடகாஷ்டகம்' இன்றும் ஆசாரியருக்கு நமஸ்கரிக்கும் போது பாடப் பெறுகிறது.

       தமிழகத்தின் க்ஷேத்திரங்கள்தோறும் சங்கர பகவத்பாதர் விஜயம் செய்தார் என்றறிய நமக்குப் பூரிப்பாக இருக்கிறது. இந்த யாத்திரையில் அவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவிடைமருதூர் என்கிற மகாக்ஷேத்திரத்தை வந்தடைந்தார்.

       அங்கிருந்த சைவப்பெரும் பண்டிதர்கள் "சிவன் தான் உலகை ஆக்கிப்படைத்து அழிக்கும் கடவுள். அவனால் படைக்கப்பட்ட நாம் அற்பமான ஜீவன்கள். அப்படியிருக்க நானும், அவனும் ஒன்றே என்று கூறுகின்ற உமது அத்வைதத்தை நாங்கள் ஏற்க முடியாது'' என சங்கரரிடம் கூறினர்.

       "சரி, அப்படியானால் என்னுடன் ஸ்வாமி சந்நிதிக்கு வாருங்கள்" என்று அவர்கனை அழைத்தார் ஆசாரியர்.

   அவரது உறுதியைக் கண்டு அவர்களுக்கு ஆச்சரியமாயிற்று. அனைவரும் திருவிடைமருதூரில் கோயில் கொண்டுள்ள மகாலிங்கமான சிவபெருமானின் முன் நின்றனர்.

    அப்போது லிங்கத்தினின்று அமுதம் போன்ற ஓர் கம்பீரமான குரல் எழுந்தது. "'சத்தியம் அத்வைதம்என மும்முறை அது கோஷித்தது. கை தூக்கிச் சத்தியம் செய்வதே வழக்கமல்லவா? இதற்கேற்ப, மகாலிங்கனார் குரல் எழுப்பியது மட்டுமின்றி அந்த லிங்கத்துக்குள்ளிருந்து ஒரு கரம் வெளிவந்து ஓங்கி நின்றது. கூடியிருந்த அனைவருக்கும் புலலறித்தது. ஆசாரியரோ ஐயனுக்கு உள்ளுருகி நன்றி கூறினார். சைவப் பெருமக்கள் அனைவரும் சங்கரரை குருவாகக் கொண்டனர்.

      திருவிடைமருதூரில் இன்றளவும் ஒரு சங்கர மடம் உள்ளது. சமீபத்தில் அம் மடத்து முகப்பில், லிங்கத்தினின்று கை வெளிப்படுவது போன்ற சிற்பத்தை வடிக்கச் செய்துள்ளார். இன்று நம் கண்முன் ஆதி சங்கரரின் அவதாரமாக வாழ்பவர் காஞ்சி காமகோடிப் பெரியவர்கள்.

       நடராஜப் பெருமான் ஆனந்த நடனம் செய்யும் சிதம்பரத்துக்குச் சென்றார் ஸ்ரீ சங்கரர். அவரது குருவுக்குக்குருவான கௌடபாதர் சிதம்பரத்தில் தான் பதஞ்சலி யிடமிருந்து வடமொழி இலக்கணம் பயின்றார். பரமகுரு பாடங்கேட்ட இடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார் நம் ஆசாரிய சங்கரர். நடராஜர் ஆலயத்தில் பஞ்சாக்ஷர யந்திரமும், அன்னா கர்ஷண யந்திரமும் ஸ்தாபித்தார். பஞ்சாட்சரம் என்பது சிவ பெருமானின் அருளை வருவித்துத் தரும் ஐந்தெழுத்து மந்திரமாகும். அன்னாகர்ஷண யந்திரம் என்பது உணவுவகைகளை சுபீட்சமாகக் கிடைக்கச் செய்வதாகும்.

      திருச்சியை அடுத்த திருஆனைக்காவுக்கு ஆசாரியர் சென்ற பொழுது அங்குள்ள அகிலாண்டேசுவரி மிகவும் உக்கிர சக்தி படைத்திருந்தாள், அந்த உக்கிரத்தைத் தாடங்கம் என்கிற இரு காதணிகளுக்குள் இழுத்து அடக்கினார். ஸ்ரீ சக்கரவடிவில் அமைந்த இத் தாடங்கங்களை அகிலாண்டேசுவரிக்கே அணிவித்தார்.

       ஆசாரியர் அணிவித்க ஸ்ரீ சக்கர தாடங்கத்தை அவ்வப்போது புதுப்பிப்பது உண்டு. இவ்விதம் காஞ்சி மடத்திலுள்ள சங்கராசாரிய சுவாமிகள் பரம்பரையாக புதுப்பித்து அகிலாண்டேசுவரிக்கு அணிவித்திருக்கிறார்கள்.

       பரந்த பாரதத்தில் ஸ்ரீ சங்கரர் பவனி வந்த நகரங்களில் ஒன்று ஜகந்நாதபுரி. கிழக்குக் கடற்கரையிலுள்ள இந்தப் பெரும் புண்ணியம்பதியில் ஒரு மடம் நிறுவி அதில் பத்மபாதரை ஆசாரியராக அமர்த்தினார். இது கோவர்த்தன பீடம் எனப்படும்.

       இதைப்போல் மேற்குக் கடற்கரையில் உள்ள மற்றொரு கிருஷ்ண ஸ்தலமான துவாரகையிலும் ஒரு மடம் நிறுவி அதில் ஹஸ்தாமலகரை ஆசாரியராக நியமித்தார். திருச்செந்தூர் முருகனின் அருட் பெருமையை வெளிப்படுத்த செந்தூர் அடைந்து ''சுப்ரமண்ய புஜங்க" த்தால் ஆண்டவனைத் துதித்தார். இன்றும் பன்னீர் இலையில் விபூதிப் பிரசாதத்தை வைத்துக்கொண்டு இத்துதியை ஓதி நீறணிந்த பலர் நோய் நீங்கப் பெறுகிறார்கள்!

       திருமாலின் திவ்வியத் தலங்களில்  தலைசிறந்து விளங்குபவை ஸ்ரீரங்கமும் திருப்பதியுமாகும். ஆனைக்கா விஐயத்தின் போதே ஆசாரியர்கள் அரங்கநாதனையும் தரிசித்து அவ்வாலயத்தில் யந்திர ஸ்தாபிதம் செய்தார்.

       திருப்பதியில் வேங்கடரமணப் பெருமாளைக் கண்டு மனம் உருகினார் ஆசாரியர். அவனை அடியிலிருந்து முடிவரை அங்கம் அங்கமாக வர்ணிக்கும் ''விஷ்ணு பாதாதி கேசாந்த ஸ்தோத்திர'' த்தை இயற்றிப் பரடினார்.

       ஏழுமலை கடந்து விளங்கும் இப்பெருமானை எங்கே நானில மக்கள் காணாதிருந்து விடுவாரோ எனக் கருதினார் போலும்! திருமலை திருப்பதியில் ஒரு யந்திரத்தை ஸதாபித்து விட்டார். ஜனங்களை ஆகர்ஷிக்கும் இந்த யந்திரந்தை ஸ்தாபித்தாலும் ஸ்தாபித்தார். அன்றிலிருந்து திருப்பதியில் நித்திய உற்சவமாக இருக்கிறது.

       புனித பாரத நாட்டை மேலும் புனிதமாக்கும் பன்னிரண்டு ஜோதி லிங்கங்கள் உள்ளன. ஸோமநாதபுரி, ஓம்காரமாந்தாதா, பரலி, வைத்யநாத், பீமசங்கரம், ராமேசுவரம், தாருகாவனம், காசி, நாஸிக். கௌதமீதடம், கேதாரிநாத், குஸ்ருணேச்வரம் என்பனவே பன்னிரண்டு "ஜ்யோதிர்லிங்க க்ஷேத்திரங்கள் ஆகும். தேசம் நெடுகிலும் பரவியுள்ள இத்தலங்கள் யாவற்றிற்கும் ஆசாரிய சங்கரர் சென்று வணங்கியிருக்கிறார். இவை எல்லாவற்றையும் இணைத்து "த்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்தோத்திரம்”  என்கிற ஒரு துதியும் செய்திருக்கிறார்.

       ஆயினும் இவை யாவற்றுள்ளும் அவரது மனத்தை மிகவும் கொள்ளை கொண்டது ஆந்திர தேசத்தில் உள்ள ஸ்ரீ சைலமேயாகும்! முன்பு நாம் கண்ட திருவிடைமருதூரை மத்யார்ஜுனம் என்றும் சொல்வார்கள். அர்ஜுனம் என்றால் மருதமரம். மருதமரத்தின்கீழ் இறைவன் எழுந்தருளும் இடம் அர்ஜுன க்ஷேத்திரமாகிறது. ஸ்ரீசைலத்தில் மல்லிகைக்கொடி தழுவிய ஒரு மருதமரத்தின் கீழ் சிவலிங்கம் எழுந்தருளியிருந்கிறது. எனவே இங்கு இறைவன் மல்லிகார்ஜுனர் எனப்படுகிறார். வனத்தின்  நடுவே மல்லிகார்ஜுனப் பெருமாளைக்கண்டதும் ஆசாரியரின் உள்ளத்தில் சிவாநந்த வெள்ளமே அலைமோதிக்கொண்டு பெருக்கெடுத்தது. உடனே "சிவாநந்த லஹரி'' என்கிற நூறு ஸ்லோகங்கள் அவரது நாவிலிருந்து குபுகுபுவெனப் பொங்கி வெளி வந்தன.

       ஸ்ரீசைலத்தில் மல்லிகார்ஜுனர் கோவில் கொண்ட இடத்திற்குச் சற்று தூரத்தில் உள்ள ஹாடகேசுவரம் என்னும் மனித சஞ்சாரமற்ற பகுதியில் ஆசாரியர் பல நாட்கள் தன்னந்தனியாக தவம் இருந்து வந்தார்.

       இச்சமயத்தில் தன்னுடைய கொடூர எண்ணத்தை நிறைவேற்றிக்கொள்ள முற் பட்டான் கிரகசன் என்கின்ற பயங்கரமான கபாலிகன்!

       கபாலம் எனப்படும் மண்டை ஓட்டை ஏந்தும் சிவனே கபாலி. உக்கிரமான முறையில் சுடுகாட்டில் வசித்து, கபால மாலைகளைப் பூண்டு, நரபலியும், மிருகபலியும் தந்து கபாலியை வழிபடுவோரோ 'கபாலிகர்' எனப்படுவர்.

       அக்காலத்தில் கபாலிகர்களின் தலைவன் கிரகசன். இவர்களுக்கு சங்கரரே பெரிய விரோதி. இறைவனை அன்பு வழியிலேயே பூஜிக்க வேண்டும். உக்கிரம் கூடாது என்று போதித்து வந்ததால், அவரை இவர்கள் எதிரியாகக் கருதினர்.

       நமது ஆசாரியர் "தமது எலும்பும் பிறர்க்குறிய தியாக சிகாமணி என்று அறிந்தான். எனவே அவனுக்கோர் எண்ணம் எழுந்தது. ''சங்கரரிடமே சென்று உங்களைக் கபாலிக்கு பலி கொடுக்க சம்மதம் தாருங்கள்'' என்று கேட்டுவிடுவோமே! தியாகமே உருவான அவர் இணங்கி விடுவார். உடனே அவர் தலையை வெட்டிப் பறித்து விடலாம். இதனால் விரோதி தொலைவது மட்டுமில்லை. உத்தமத் துறவியைப் பலிபெற்றதால் மகிழ்ந்து கபாலியே நேரில் வந்து விரும்பிய வரம் அளிப்பார். ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்று குதூகலித்தது பாவியின் உள்ளம்.

       வெட்கமில்லாமல் ஆசாரியரிடம் சென்று தன் வேண்டுதலை வெளியிட்டான் கபாலிகத் தலைவன்.

       தியாகியான சங்கரரும் மகிழ்ச்சி நிறைந்து சம்மதம் தந்தார்.என் தலை தானே வேண்டும்? வெட்டி எடுத்துக் கொள்! இந்த உடலால் எந்தப் பயனும் இல்லை என்று எண்ணினேன். இதைக் கொண்டு ஏதோ பயன் பெறுவதாக நீ சொல்வதில் மிகவும் நன்றி'' என்று அன்பொழுகக் கூறினார் ஆசாரியர், தம் உயிரைப் பறிக்க வந்த பாதகனிடம்!

       சங்கரரின் தலையை வெட்டுவதற்காக கபாலிகன் வாளை ஓங்கிவிட்டான். அதே சமயத்தில் எங்கோ இருந்த பத்மபாதரின் மீது உக்கிர நரசிம்மரின் ஆவேசம் உண்டாயிற்று. அவர் தம்மையும் மீறிய அச் சக்தியின் தூண்டுதலில் ஹாடகேசுவரத்துக்கு ஒரே நொடியில் வந்துவிட்டார். சங்கரரின் தலையை வெட்டவிருந்த கிரகசனை நரசிம்மர் போலவே நகத்தால் கிழித்துப் போட்டுவிட்டார். கொல்ல வந்தவன் கொலையுண்டான்! பத்மபாதரிடம் இருந்து நரசிம்மரின் ஆவேசமும் அகன்றது!

       ஸ்ரீசங்கரர் நரசிம்மரைத் துதித்துவிட்டு நரசிம்ம க்ஷேத்திரமான அஹோபிலத்துக்குச் சென்று வழிபட்டார்.

       தலம் தலமாகச் சென்று பரத கண்டத்தின் வடக்கேயுள்ள இமாலயப் பகுதிகளிலே சஞ்சாரம் செய்து பதரீவனம், பதரிகாசிரமம் என்றெல்லாம் அழைக்கப்படும் பதரிநாதத்தை அடைந்தார்.

       அங்கு ஒருநாள் மகாவிஷ்ணு அவருக்கு தரிசனம் தந்து, “இங்கே அலகநந்தா நதிப்படுகையில் என் பூரண சாந்நித்தியம் கொண்ட விக்கிரகம் ஒன்று புதைந்துள்ளது. அதை எடுத்து பிரதிஷ்டை செய்வாயாக என்று உத்தரவிட்டார்.

       அவ்விதமே சங்கரர் அலகநந்தா படுகையில் தோண்டியவுடன் திவ்வியமான் விக்ரஹம் கிடைத்தது.

       அதை சங்கரர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்தார். பத்ரிநாராயணன் என்று இன்றளவும் உலகமல்லாம் கொண்டாடும் மூர்த்தி இதுவேயாகும்.

       இவ்விதமாக புனித யாத்திரையை மேற் கொண்டு கேதார்நாத்திற்கு வந்து சேர்த்தார் சங்கரர். அங்கு தமது பூத உடலைக் கிடத்தி விட்டு, யோகசக்தியின் மூலம் சூட்சும சரீரத்தோடு கைலாயம் சென்றார். ஸ்ரீ சங்கரர் தமது பூத உடலைவிட்டு பஞ்ச

லிங்கங்களைப் பெறவேண்டியே கைலாயம் சென்றார் என்பதை ஆதார பூர்வமாக அறியாத சிலர் ஆசாரியர் தமது பூதவுடலையே கேதாரிநாத்தில் நீத்து முக்தி அடைந்தார் என்று தவறாகக் கருதித் கொண்டுள்ளனர்.

       கயிலையில் உமையன்னையுடன் வீற்றிருக்கும் சிவபெருமானைக் கண்டு களிகொண்டு வணங்கினார் ஸ்ரீசங்கரர். சிவபெருமானின் அடியிலிருந்து முடிவரை வர்ணித்துப் பாடினார். அதில் திருப்தி உண்டாகாமல் மீண்டும் முடியிலிருந்து அடிவரை வர்ணணை செய்து இன்னொரு துதி செய்தார். இவை "சிவ பாதாதி கேசாந்த ஸ்தோத்திரம்'' எனவும் "சிவ கேசாதி பாதாந்த ஸ்தோத்திரம்எனவும் வழங்குகின்றன.

       சிவபெருமான் தனது அவதாரமான சங்கார் செய்துவரும் அரும்பணியைப் பாராட்டினார். "பஞ்ச லிங்கங்களாகிய ஐந்து ஸ்படிக லிங்கங்களை சங்கரருக்குத் தந்தார். அவருக்கு அருகேயிருந்த சக்தியைத் துதிப்பதற்கு முடியாமல் பிரமித்து நின்றார் உடனே பரமசிவன் தாமே அம்பிகையைத் துதித்துச் செய்திருந்த'ஸௌந்தர்யலஹரீஎன்கிற நூல் சுவடியையும் சங்கரருக்கு வழங்கினார்.

       இவற்றைப் பெற்று மிகுந்த பூரிப்போடு சங்கரர் கயிலையிலிருத்து வெளிவந்தார். காவலில் இருந்த நந்திதேவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி பாதி ஸ்லோகங்களை அவருக்குக் கொடுத்துவிட்டார்.  ஸௌந்தர்யலஹரியின் முதல் நாற்பத்தியொரு சுலோகங்கள் மட்டும் சங்கரரின் கையில் தங்கின. மீதமுள்ள ஐம்பத்தொன்பது சுலோகச் சுவடிகளை நந்திதேவர் பெற்றுக்கொண்டார்.

      கயிலையை விட்டு வெளிவந்த நம் ஆசாரியருக்கு இப்போது அம்பிகையைக் குறித்த பிரமிப்பு நீங்கிவிட்டது. அவளது அருளால் அவரே புதிதாக ஐம்பத்தொன்பது அற்புதமான சுலோகங்களை இயற்றி, நூலைப் பூர்த்தி செய்துவிட்டார். ஆசாரியரின் பல துதிகளுக்குள் இலக்கியச் சுவையில் சிகரமாக விளங்குவது "ஸெளந்தர்யலஹரியே யாகும். அதைப் பாராயணம் செய்வதால் பலவிதமான இகபர நலன்களும் கைகூடும்.

     கைலாசத்திலிருந்து கிளம்பிய ஸ்ரீசங்கரர் நேபாள ராஜ்யத்தைச் சென்றடைந்தார். அங்கு சிறப்பான ராஜ மரியாதையைப் பெற்றார்.

    பசுபதிநாதர் என்கிற ஐந்து முகங்கொண்ட லிங்கம் நேபாளத்தின் சிறப்பு களுக்கெல்லாம் சிறப்பாக உள்ளது.  லிங்கத்தின் நான்கு புறங்களில் திசைக்கு ஒன்றாக ஒவ்வொரு முகம்; லிங்கத்தின் உச்சியில் அம்பிகையின் வடிவான ஸ்ரீசக்ரம் எழுதிப் பூஜிப்பது இன்னொரு முகத்துக்குச் சமமாகும்.

  மகாவிஷ்ணு பூஜைக்குரிய சாளக்ராமம் நேபாளத்தில் உள்ள கண்டகி நதிக்கரையிலேயே கிடைப்பது. சிவபெருமான் உவந்து அணியும் ருத்ராக்ஷமும் அங்குதான் நிறைய காய்க்கிறது. பசுபதிநாதர் கோவில் முழுவதையும் சிவராத்திரியன்று ருத்ராட்சங்களால் அலங்கரித்து, விசேஷ பூஜை புரிவார்கள்.

   இத்தனை சிறப்புகள் பொருந்திய பசுபதி நாதத்திற்கு ஸ்ரீசங்கரர் விஜயம் செய்து ஸ்வாமி தரிசனம் செய்து பேரின்பம் எய்தினார். அங்கு ஆலய வழிபாட்டு முறைகளை ஒழுங்குபடுத்தித் தந்தார்.

  அம்பிகைக்கு விசேஷமான ஐம்பத்தி யொரு சக்தி பீடங்களில் குஹ்யேச்வரி என்பது பசுபதிநாதத்தில் இருக்கிறது. அங்கும் சங்கரர் தரிசனம் செய்து மகிழ்ந்தார்.

   நேபாளத்தில் நீலகண்ட க்ஷேத்திரத்தில், தாம் சிவபெருமானிடமிருந்து பெற்ற ஐந்து லிங்கங்களுள் ஒன்றான வரலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார் ஸ்ரீசங்கரர். பசுபதிநாத்திலிருந்து புறப்பட்ட சங்கரர் கேதாரிநாதம் என்கிற மகாக்ஷேத்திரத்தை அடைந்கார். இமாலயத்திலே உள்ள இந்த சிவஸ்தலம், திருமாலுக்குரிய பதரிநாதத்தோடு எப்போதும் சேர்த்தே பேசப்படும் பெருமை வாய்ந்தது.

 பரமசிவனிடமிருந்து பெற்ற – ஐந்து பளிங்கு லிங்கங்களுள் மற்றொன்றான முக்தி லிங்கத்தை கேதாரிநாதத்தில் ஸ்ரீசங்கரர் பிரதிஷ்டை செய்தார்.

  பாரத தேசத்தின் நான்கு திசைகளிலும் மொத்தம் பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்கள் உண்டு. இவற்றில் ஒன்று கேதார்நாதத்தில் உள்ளது. ஸ்ரீசங்கரர் இயற்றிய "துவாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்திரத் தில் கேதாரிநாதனைக் குறிப்பிட்டு வந்தனம் தெரிவிக்கிறார்.

 இவ்விதமாக பல ஸ்தலங்களுக்கும் விஜயம் செய்து, பின்னர் கங்காநதி பாயும் சமவெளியை அடைந்தார். அங்கே தம் சிஷ்யர்களுக்குப் பாடம் நடத்தினார். அவர்களுக்கு உபதேசத்தின் மூலம் பல அரிய தத்துவங்களை விளக்கினார். பிற மதவாதிகளுடன் வாதம் செய்து அவர்களை வென்று வேதாந்தக் கருத்துக்களை வேரூன்றச் செய்தார் நம் ஆசாரியர்.

 பாரத தேசமெங்கும் சுற்றி அத்வைதத்தைப் பரப்பிய ஸ்ரீசங்கரர், வடகோடியிலிருந்து தெற்கே வந்து சிதம்பரத்தை அடைந்தார். அங்கே பஞ்சலிங்கங்களில் ஒன்றான மோட்ச லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார்.

 மீண்டும் சிருங்க கிரிக்கு எழுந்தருளினார் நம் ஜகத்குரு ஸ்ரீ சங்கராசாரியர். பரமசிவன் அளித்த பஞ்சலிங்கங்களில் போகலிங்கத்தை அங்கே பிரதிஷ்டை செய்தார்.

   பிறகு தமது உலக வாழ்வை நிறைவு செய்யத் திரு உள்ளங்கொண்டு, ஏழு மோட்ச ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கும் காஞ்சி யம்பதிக்கு விரைந்தார்.

 காஞ்சி எல்லையிலேயே மன்னன் ராஐ - சேனன் ஆசாரியரைப் பணிந்து வரவேற்றான். விசுவேசுவரர் ஆலயத்தில் தங்கினார் நம் ஆசாரியர்.

 பராசக்தியான காமாட்சியின் அருள் பொங்கும் நகரம் அது எனக்கண்டார் ஸ்ரீ சங்கரர். அவளது இருப்பிடமான ஸ்ரீ சக்ரத்தைப் போலவே. அந்நகரை மாற்றியமைத்தால் அங்கு அம்பிகையின் அருட்பொலிவு முன்னிலும் அதிகமாகும் எனக்கண்டார். ஆசாரியரின் கட்டளைப்படி மன்னன் நகர சாலைகளை ஸ்ரீசக்ர வடிவில் மாற்றியமைத்தான். அதன் மத்தியில் அம்பிகை எழுந்தருளும்  இடமாக அமைந்தது, ஸ்ரீ காமாட்சியின் ஆலயமான காமகோட்டம்.

  அக்காலத்தில் கலிகால மக்களால் தாங்கமுடியாத அளவுக்குக் காமாட்சியின் சக்தி உக்கிரமாக வெளிப்பட்டுவந்தது. அவளை அணுகவே அனைவரும் அஞ்சினர். ஆனால் ஆசாரியரோ அன்புத் தாயிடம் செல்லும் அருமை மகனாக ஆனந்தத்துடன் காமாட்சியை அடைந்தார். அவளுக்கு முன் ஸ்ரீ சக்ரம் வரைந்து அதில் அவளது அதிகப்படியான சக்தியை எல்லாம் இழுத்து அடைத்து விட்டார். இதன்பின் காமாட்சியின் உக்கிரம் நீங்கி, அவள் கருணையின் எல்லையில் உள்ள பேரழகு மூர்த்தியாக ஆகி விட்டாள். இன்றும் காஞ்சி காமாட்சியின்  இந்த அருள் பொலிவை பக்தர்கள் அனுபவித்து மகிழலாம்.

 காமாட்சியிடம் எல்லையற்ற பக்தி கொண்டார் ஆசாரியர். அவள் வாழும் ஆலயத்தில் 'காமகோடி பீடம்' என்கிற மகத்தான சக்திபீடம் உண்டு. காஞ்சீபுரத்தில் தமக்கென மையமான மடத்தை ஏற்படுத்திக்கொண்ட சங்கரர், அந்த இடத்திற்கு காமாட்சி அம்மையின் பீடத்தின் பெயரான 'காமகோடி பீடம்' என்பதையே தமது மடத்துக்கும் வைத்துக்கொண்டார்.

 பஞ்சலிங்கங்களில் எஞ்சிய யோக லிங்கத்தை தனது பீடத்தின் பூஜைக்கென வைத்துக்கொண்டார். இன்று ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பூஜை செய்யும் சந்திர மௌலீசுவர ஸ்படிகலிங்கமே இந்த யோக லிங்கமாகும்.

  காஞ்சி மடத்தில் ஜகத்குரு ஸ்ரீ சங்கர பகவத்பாதர்கள் ஞான ஆட்சி நடத்தி, காமாட்சியை வழிபட்டு வாழ்ந்துவந்தார்.

 வேத மதத்தில் பல தெய்வங்களை வழிபடுகிறோம். ஆனால் இவை முற்றிலும்  வேறு வேறானவை அல்ல. ஒரே பரமாத்மாதான் இப்படிப் பல தெய்வங்களாகி இருக்கிறார். என்வே தெய்வங்களுக்குள் ஒன்று உயர்ந்தது, இன்னொன்று தாழ்ந்தது என்று ஏற்றத் தாழ்வு பேசுவது அறிவின்மையாகும்.

     ஸ்ரீ சங்கரர் இவ்விதம் தம்தம் தெய்வத்தையே உயர்த்திப் பேசுபவர்களை எல்லாம் வாதத்தில் வென்று, எல்லாத் தெய்வங்களும் ஒன்றே என்பதை நிலை நாட்டினார்.

   இருந்தாலும் ஒவ்வொருவரும் தங்கள் மனப்பான்மைக்கு ஏற்றபடி ஒரு தெய்வத்திடம் விசேஷமாக பக்தி செலுத்துவதை அவர் ஒப்புக்கொண்டார். இவை இஷ்ட தெய்வ வழிபாடு எனப்படும். இவ்வாறு இஷ்ட தெய்வத்தை வழிபடுவதால் மற்ற தெய்வங்களைத் தாழ்வாக எண்ணிவிடக் கூடாது என்பதற்காகவே "பஞ்சாயதன பூஜை'' என்பதற்குப் புத்துயிர் தந்தார் நம் ஆசாரியர். இதன்படி ஒவ்வொருவரும் சிவன் அம்பிகை, திருமால், விநாயகர், சூரியன் ஆகிய ஐவரையும் ஒரே பரம்பொருளின் வடிவங்களாகக் கொண்டு பூஜிக்க வேண்டும். இந்த ஐந்தில் ஒன்றை இஷ்ட தெய்வமாக மத்தியில் வைத்து, மற்ற நான்கை அதைச் சுற்றி வைத்துப் பூஜிக்கவேண்டும்.

   மேற்படி ஐந்து தெய்வங்களோடு முருகனையும் சேர்த்தால் ஆறாகிறது. இத் தெய்வம் ஒவ்வொன்றையும் முக்கியமாகக் கருதி ஆறு வழிபாட்டு முறைகள் உண்டு. இவை 'ஷண்மதம்' எனப்படும். அவரவரும் பிறதெய்வ நிந்தனை இல்லாமலே தம் இஷ்ட தெய்வத்தை வழிபட உதவி புரிய வேண்டும் எனக் கருணைகொண்டார் சங்கரர். எனவே தாம் காஞ்சியில் இருந்த போது ஆறு சீடர்களை நாட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் அனுப்பிவைத்து, ஷண்மதங்களில் ஒவ்வொன்றையும் வேதவழிப்படி நிலைநிறுத்தி வச் செய்தார். அவர்களும் தமது பணியை வெற்றிகரமாகச் சாதித்து விட்டு ஆசாரியரிடம் திரும்பினார்கள்.

 இதனால் ஸ்ரீ சங்கரர் "ஷண்மதா சாரியர்'' என்கிற புகழைப்பெற்றார்.

 இறுதியாக ஒருமுறை பண்டிதர் அனைவரையும் வென்று அத்வைதத்தை நிலைநாட்டி விட்டு, உடலை நீத்து விடவேண்டும் என முடிவு செய்தார். சங்கரர் இதன் பொருட்டு காஞ்சியிலேயே ஸர்வக்ஞபீடம் அமைத்தார்.

  காஞ்சியில் பிறமதத்தினர்களும் இருந்தனர். மற்றும் பாரதத்தின் பல பகுதிகளிலிருந்தும் பல மகாபண்டிதர்கள் நம் ஆசாரியருடன் வாதிட வந்தனர். அவ்வாறு வந்திருந்த பலரில் ஏழு வயதுச் சிறுவன் ஒருவனும் இருந்தான். அவன் தொடர்ந்து மூன்று நாட்கள் ஆசாரியருடன் வாதிட்டான். அவனது கேள்விகளுக்கு விடை அளித்து இறுதியில் ஆசாரியரே வெற்றி பெற்றார். அந்தச் சிறுவனின் அறிவுத் திறமையை வியந்து பாராட்டிய சங்கரர், அவனுக்கு சர்வக்ஞஆத்ம முனி என்று திரு நாமம் சூட்டித் துறவியாக்கினார். தனது பீடத்தின் முதல் சிஷ்யனாக நியமித்துக் கொண்டார்.

  அனைவரையும் அத்வைதத்தால் வென்று அப்பீடத்தில் அறிவுச் சக்ரவர்த்தியாக ஆரோகணித்தார் சங்கரர். அப்போது நாடாளும் சக்ரவர்த்திகளும் அவருக்குச் சாமரம் வீசினர். பண்டித ரத்தினங்கள், துறவி, வேந்தர்கள் அனைவரும் அப்போது அவரது அடிபணிந்தனர்.

  “ஜய ஜய சங்கரா'' என்று போற்றிப் புகழ்ந்து பணிந்தனர்.

   வேத வாழ்வை மீண்டும் ஆழ வேரூன்றச் செய்து விட்டார் நமது சங்கரபகவத்பாதர்.

 அத்வைத ஞான வழியே பரம சத்தியமான தத்துவம் என்பதை உலகம் ஒப்பச் செய்துவிட்டார். பிற மதங்கள் எழுபத்திரண்டையும் இருந்த இடம் தெரியாமல் விரட்டிவிட்டார்.

  எதற்காக அவதரித்தாரோ அந்தப் பணி முடிந்தது. இப்போது அவருக்கு வயது முப்பத்திரண்டேதான். முப்பத்திரண்டு கோடி மக்கள் ஒன்று சேர்ந்து முப்பத்திரண்டு யுகத்தில் செய்யமுடியாத சாதனையை அவர் தனியொருவராகவே இருந்து முப்பத்திரண்டு ஆண்டுகளில் சாதித்துவிட்டார்,

  ஆனால் ''நான் சாதித்தேன்'' என்கிற அகங்காரம் அவருக்கு எள்ளளவும் இல்லை. பராசக்தியான காமாட்சியின் அருள் சக்தி எள்ளளவு தம்மீது தெளித்ததாலேயே இவ்வளவும் செய்யமுடிந்தது என்று கருதினார்.

    காரியம் முடிந்துவிட்டது; காரியமற்ற பிரம்மத்தில் இரண்டறக்கலந்து அத்வைதமாகிவிட ஆர்வம் கொண்டார். பிரம்மத்தின் சக்தியான காமாட்சியிடம் சென்றார். திரிபுரசுந்தரி வேதபாதஸ்வம்" என்கிற பாடலால் அவளைத் துதித்தார். துதியானது மடியும் போது அவரது துதிக்கத்தக்க வாழ்வம் முடிந்தது. பராசக்தியோடு இரண்டறக் கலந்துவிட்டார் நம் பரமாசாரியர் சங்கரர்.

   இன்றும் காமாட்சி ஆலயத்தில் விக்கிரக வடிவில் வாழ்கிறார் நமது ஆசாரிய சங்கரர். அவருடைய சமாதியானது காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் அம்மன் சன்னதிக்குப் பின்புறத்தில் விளங்கிக் கொண்டு இருக்கிறது. அதோடு அவர் பூஜித்த அதே திருபுரசுந்தரி – சந்திர மௌலீச்வரரை இன்றும் பூஜிக்கும் காஞ்சிப் பெரியவர்களாகவும், புதுப்பெரியவர்களாகவும் தம் அருளை வெளியிடுகிறார்.

 

No comments:

Post a Comment