Saturday, November 7, 2020

 ஏகசுலோக பிரகரணம்

    (குருவுக்கும் - சிஷ்யனுக்கும் இடையில் நடக்கும் ஸம்வாத உருவில் உள்ள இந்த ஒரே ச்லோகத்தில், அத்வைத வித்யையின் ஸாரம் முழுதும் உபதேசிக்கப்படுவதால் இது ''ஏகச்லோக ப்ரகரணம்'' எனப்படுகிறது. இது ப்ருஹதாரண்ய உபநிஷத்தின் நான்காம் அத்தியாயத்தில் ஜனகயாஜ்ஞவல்க்ய ஸம்வாதமாக அமையும் ''ஜ்யோதிர் ப்ராஹ்மணம்'' என்பதைத் தழுவியது.)

கிம் ஜ்யோதிஸ்தவ பா4நுமான் அஹநி மே ராத்ரௌ ப்ரதீ3பாதி3கம்

ஸ்யாதே3வம் ரவி-தீ3ப-தர்சநவிதெ4ள கிம் ஜ்யோதிராக்2யாஹி மே |

சக்ஷஸ்-தஸ்ய நிமீலநாதி3ஸமயே கிம் தீ4ர்-தி4யோத3ர்சநே

கிம் தத்ராஹமதோ ப4வான் பரமகம் ஜ்யோதிஸ்-தத3ஸ்மி ப்ரபோ4 ||          1

ஆசார்யர்: -  உனக்கு ஜ்யோதி பிரகாசம் எது? (எந்த பிரகாசத்தால் நீ                       விஷயங்களைத் தெரிந்து கொள்கிறாய்?)

சிஷ்யன்: -   பகலில் எனக்கு சூரியன். (விஷயங்களைப் பார்க்க சூரியப்பிரகாசம்            உதவி செய்கிறது.)

ஆசார்யர்: -  இரவில் (எது பிரகாசத்தைக் கொடுக்கிறது)?

சிஷ்யன்: - விளக்கு முதலியவை.

ஆசார்யர்: -  இவ்விதம் இருக்கலாம். (ஆனால்) சூரியனையும், தீபத்தையும்  பார்க்கும் விஷயத்தில் எது பிரகாசத்தைத் தருவது? எனக்குச் சொல். (சூரிய, சந்திரரின் பிரகாசத்தை அறியும் திறனில்லா குருடருக்கு இவையும் விஷயங்களைத் தெரிவிப்பதில்லையல்லவா? எனவேஇந்த வெளி ஒளியின் உதவியைப்பெற உதவும் உள்ளொளி எது என ஆசார்யர் வினவுகிறார்.)

சிஷ்யன்: -   கண்.

ஆசார்யர்: -  அந்தக் கண்ணுக்கு மூடுதல், மறைவு முதலியவை ஏற்படும் சமயம் எது ஜ்யோதி? (எதனால் விஷயத்தை அறியலாம்? விஷயத்தை விளக்குவது எதுவானாலும் அதுவே விளக்கு - அதாவது ஜ்யோதி.)

சிஷ்யன்: -   புத்தி. (கண்ணற்றவரும் புத்தியினால் பொருட்களைத் தெரிந்து                கொள்கின்றனரன்றோ?)

ஆசார்யர்: -  புத்தியை அறியும் விஷயத்தில் எது ஜ்யோதி? (வெளி ஒளியை அறியக் கண்: கண்ணை அறியச் செய்ய புத்தி. புத்தியை அறியச் செய்யும் ஜ்யோதி எது?)

சிஷ்யன்: -   அதில் நான். (புத்தியில் உள்ளுறையும் " நான்'' என்ற உயிருணர்வு தான் அதனை அறியச் செய்கிறது.)

ஆசார்யர்: -  ஆகையால் நீர் மேலான (தானே பிரகாசிக்கும்) ஜ்யோதி. "நான்', எனும் ஆத்மாவிற்குப் பிறவற்றை அறியவும், தன்னையே அறிந்து  கொள்ளவும் திறன். வேறெங்கிருந்தும் வரவில்லை. அதுவே தன்னையும், ஸகலத்தையும் தானாகவும் விளங்கிக்கொள்ளும் ஜ்யோதி.)

சிஷ்யன்: -   ப்ரபுவே! அதுவாகவே (அத்த ஜ்யோதிஸ்வரூப ப்ரஹ்மமாகவே நான்)          இருக்கிறேன்.

 


No comments:

Post a Comment