Saturday, November 7, 2020

 மநீஷா பஞ்சகம்

       பகவத்பாதாள் காசீ க்ஷேத்திரத்துக்குச் சென்றபோது அவருடைய பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்டவே விசுவநாதர் சண்டாள வேஷம் பூண்டு பகவத்பாதாள் முன்பு தோன்றினார். அவரை பகவத்பாதாள் ''விலகிச் செல்'' என்றார். இது கேட்டு சண்டாளன் கூறினான்:

அன்னமயாத3ன்னமயம் அத2வா சைதன்யமேவ சைதன்யாத் |

யதிவர தூ3ரீகர்தும் வாஞ்ச2ஸி கிம் ப்3ரூஹி க3ச்ச2 3ச்சே2தி ||

       அதாவது, ''சிறந்த ஸந்யாஸியே, அன்னத்திலிருந்து உண்டான ஒரு சரீரத்திலிருந்து, அன்னத்திலிருந்து உண்டான இன்னொரு சரீரத்திலிருந்து விலகச் சொல்கிறீரா? அல்லது சைதன்யத்திலிருந்து சைதன்யத்தை விலகச் சொல்கிறீரா? எதைபோ போ'' என்று தூரத்தில் விலக்குவதற்கு விரும்புகிறீர்; சொல்லும்'' என்றான்.

      விசாரித்துப் பார்த்தால் இரண்டும் தப்பு. இரண்டு சரீரங்களுக்கும் அன்னம் தான் காரணம். ஒரே காரணத்திலிருந்து உண்டான இரு வஸ்துக்கள் வெவ்வேறு ஸ்வபாவமுள்ளதாக எவ்விதம் இருக்கமுடியும்? அதனால் இதில் ஒன்றால் மற்றதற்கு எப்படித் தீட்டு வரும்? சைதன்யத்தையும் விலகச்சொல்ல முடியாது. அது எங்கும் நிறைந்த ஒன்றேயன்றி, இரண்டு சைதன்யம் என்றே கிடையாது. ஸர்வ வியாபகமான வஸ்துவை எப்படி எங்கு விலகச்சொல்ல முடியும்? உடலாகப் பார்த்தால் இரண்டும் அன்ன மயமான மாம்ஸபிண்டமே. உயிராகப் பார்த்தால் இரண்டிலும் உள்ள சைதன்யம் ஒன்றே. இவ்விதம் இருக்க ஒருவர் மற்றவரை விலக்குவது உசிதம் அல்ல என்பது தாத்பரியம்.

      சைதன்ய ஸ்வரூபத்தில் வேற்றுமை இல்லை என்பதை விளக்கி மேலும் சொன்னான்:

ப்ரத்யக்3வஸ்துனி நிஸ்தரங்க3 ஸஹஜாநந்தா3வபோதா4ம்பு3 தெ4

       விப்ரோயம் சவபசோயமித்யபி மஹான் கோ(அ)யம் விபே4தப்4ரம: |

கிம் க3ங்கா3ம்பு3நி பி3ம்பி3தே (அ)ம்ப3ரமணௌ சாண்டாளவீதி2பய: -

       பூரே வா(அ)ந்தரமஸ்தி காஞ்சநக4டீம்ருத்கும்ப4யோர் வாம்ப3ரே II

       "அலையில்லாத ஸ்வபாவஸித்தமான, ஆனந்த ஞானக்கடல் ரூபமான, ஆத்மவஸ்துவில்,'' இவன் அந்தணன், இவன் நாய் மாமிஸம் தின்னும் சண்டாளன்'' என்று, இது என்ன பெரிய வேற்றுமை பிராந்தி? கங்கா ஜலத்திலும், சேரியிலுள்ள நீர்க்குட்டையிலும் ஒரே போலப் பிரதிபிம்பித்த சூரியனிடத்திலோ, தங்கக் குடம், மண் குடம் இரண்டிலும் ஒரே போல் நிறைந்துள்ள ஆகாசத் திலோ வேற்றுமை இருக்கிறதா என்ன?''

       எல்லா சரீரங்களிலும் ஒரே ஆத்மா தோன்றும் பொழுது எப்படி ஒரே சரீரத்தை இன்னொன்றிடமிருந்து விலகிப்போகும்படி சொல்லலாம் என்பதே மொத்தத்தில் கேள்வி.

      உடனே ஜகதாசாரியரிடம் இப்படி ஒரு சரீரத்தை வெறும் மாமிஸ பிண்ட மாகவும், அதனுள் உள்ள ஆத்மாவை ஏக சைதன்யமாகவும் உணர்ந்துள்ள ஞானியான ஒருவன் இருக்கிறானெனில் அப்படிப்பட்ட ஞானியிடம் வர்ணாச்ரம தர்மங்களைப் பொறுத்தாமல். அவன் சண்டாளனேயாயினும் குருவாகக் கொள்ள வேண்டும் என்றும், தாமே அப்படிக் கொள்வதாகவும், ஐந்து ச்லோகங்களில் எடுத்தியம்புகிறார். அதுவே ''மநீஷா பஞ்சகம்- ''மநீஷாஎன்றால் உறுதியான கொள்கை. (ஞானிகளுக்கு வர்ணாச்ரமமில்லை என்று இங்கு ஆசார்யாள் கூறுவதை வியவஹாரதசையிலுள்ள ஸகல ஜனங்களுக்கும் வர்ணாச்ரம தர்மம் வேண்டாமென பொருள் கொள்வது சற்றும் தகாது.)

ஜா3க்ரத் ஸ்வப்ந ஸுஷுப்திஷு ஸ்பு2டதரா யா ஸம்விது5ஜ்ஜ்ரும்ப4தே

       யா ப்3ரஹ்மாதி பிபீலிகாந்ததனுஷு ப்ரோதா ஜக3த்ஸாக்ஷிணீ |

ஸைவாஹம் ந ச த்3ருச்யவஸ்த்விதி த்3ருட4ப்ரஜ்ஞாபி யஸ்யாஸ்தி சேத்

       சாண்டா3ளோஸ்து ஸ து த்3விஜோஸ்து கு3ருரித்யேஷா மநீஷா மம || 1

       "நனவு, கனவு, தூக்கம் இம்மூன்று நிலைகளிலும், எந்த சைதன்யம் மிகத் தெளிவாக விளங்குகிறதோ, உலகை காண்கிற (அறிகிற) எது ப்ரஹ்மா முதல் எறும்புவரை உள்ள (ஸகலப் பிராணிகளின் சரீரங்களில்) ஊடுருவியிருக்கிறதோ, அதுதான் நான்; அறியப்படும் வஸ்து அல்ல. ஆதார அறிவேதான்; அறியப்படுபவன் அல்ல)'' என்று எவனொருவனுக்கு உறுதியான பிரக்ஞை இருக்கு மானாலும், அப்படிப்பட்டவன் சண்டாளனாக இருக்கட்டும் அல்லது பிராமணனாயிருக்கட்டும் அவன் (என்) குரு என்ற இதுவே என்னுடைய உறுதியான கொள்கை.

ப்3ரஹ்மைவாஹமித3ம் ஜக3ச்ச ஸகலம் சின்மாத்ரவிஸ்தாரிதம்

       ஸர்வம் சைத்த3வித்3யயா த்ரிகு3ணயா ஸேசம் மயா கல்பிதம் |

இத்த2ம் யஸ்ய த்3ருடா மதி: ஸுக2தரே நித்யே பரே நிர்மலே

       சாண்டா2ளோஸ்து ஸ து த்3விஜோஸ்து கு3ருரித்யேஷா மநீஷா மம || 2

       ''நான் ப்ரஹ்மமே; இந்த உலகம் எல்லாம் ஞானமாத்ரமான ப்ரஹ்மத்தினால் விரிவை அடைந்திருக்கிறது. (ஸத்வம், ரஜஸ், தமஸ் என்னும்) முக்குண வடிவமான, அவித்யை (என்னும் சாதனம்) கொண்டு ஈசுவரனுடன் கூடிய ஈதனைத்துமே என்னால் ஆரோபம் செய்யப்பட்டிருக்கிறது. (ஆத்மா என்ற ஆதாரத்தின்மேல் கல்பிக்கப்பட்டுள்ளது) என்று இவ்வாறு எவனுக்குப் பேரானந்த ஸ்வரூபமாயும் அழிவற்றதாயும், தோஷமற்றதாயும் உள்ள பா (ப்ரஹ்ம)த்தில் திடமான புத்தி இருக்கிறதோ, அவன் சண்டாளனாக இருக்கட்டும் அல்லது பிராமணனாக இருக்கட்டும் (அவனே) குரு என்ற இது என்னுடைய தேர்ந்த அபிப்ராயம்.

 சச்வந்நச்வரமேவ விச்வமகி2லம் நிச்சித்ய வாசா கு3ரோ:

       நித்யம் ப்3ரஹ்ம நிரந்தரம் விம்ருசதாம் நிர்வ்யாஜ சாந்தாத்மநாம் |

பூ4தம் பா4வி ச து3ஷ்க்ருதம் ப்ரத3ஹதாம் ஸம்வின்மயே பாவகே

       ப்ராரப்3தா4ய ஸமர்பிதம் ஸ்வவபுரித்யேஷா மநீஷா மம ||             3

       உலக வஸ்துக்கள் யாவும் எப்போதும் அழியக்கூடியதுதான் என்பதை குருவின் உபதேசத்தால் தீர்மானித்து, அழிவற்றதான ப்ரஹ்மத்தை இடை விடாமல் தியானிப்பவர்களும், கபடமில்லாத சாந்த உள்ளம் படைத்தவர்களும், ஸஞ்சித மாயும், ஆகாமியாயுமுள்ள பாபத்தை, ஞான மயமான அக்னியில் பொசுக்குகின்றவர்களுமான ஞானிகளுடைய சரீரம் பிராரப்தானுபவத்திற்காக கொடுக்கப்பட்டதாக ஆகிறது என்ற இது என்னுடைய தீர்ந்த அபிப்ராயம்.

      (முற்பிறவிக் கர்மங்கள் ஸஞ்சிதம் எனப்படும். அதில் இந்த ஜன்மத்தில் அநுபவித்தேயாக வேண்டுமென்பது பிராப்தம். மீதமுள்ள ஸஞ்சித முன்வினையும், இப்பிறவியில் செய்யும் வினையும், இனி வரவிருக்கும் பிறவிகளில் பலன் தருவதற் காகஆகாமி" என்ற பெயரில் சேரும். ஞானம் எய்தி ஒருவன் தனது ஜீவபாவத்தையே போக்கிக்கொண்டவுடன் ஸஞ்சித, ஆகாமி கர்மங்கள் நசிக்க, ப்ராப்தம் தீரும்வரையில் அவன் உலகில் ஜீவமுக்தனாக வாழ்கிறான்.)

யா திர்யங்நரதே3வதாபி4ரஹமித்யந்த: ஸ்பு2டா க்3ருஹ்யதே

       யத்பா4ஸா ஹ்ருத2யாக்ஷதே3 ஹவிஷயா பா4ந்தி ஸ்வதோ(அ)சேதநா: |

தாம் பா4ஸ்யை: பிஹிதார் கமண்ட3லநிபா4ம் ஸ்பூ2ர்திம் ஸதா3 பா4வயன்

       யோகீ3 நிர்வ்ருதமாநஸ: ஸ கு3ருரித்யேஷா மநீஷா மம ||             4

       எந்த சைதன்யம் மிருகம், மனிதன், தேவர் முதலிய எல்லா ஜீவன்களாலும்நான்'' என்று உள்ளே விளக்கமாக உணரப்படுகிறதோ, எதன் பிரகாசத்தால் ஸ்வயம் ஜடமான மனம், இந்திரியம், தேஹம், விஷயம் ஆகியவைகள் விளக்க முறுகின்றன வோ, பிரகாசிக்கப்படும் மேகங்களால் மறைக்கப்பட்ட சூரிய மண்டலத்திற்கொப்பான அந்த உள் ளொளியை, எப்பொழுதும் தியானம் செய்து கொண்டு யோகியானவன் நிறைந்த மனிதனாக ஆகிறான். அப்படிப்பட்டவன் குரு என்ற இது என்னுடைய உறுதியான அபிப்பிராயம்.

யத்ஸௌக்2யாம்பு3 தி4லேசலேசத இமே சக்ராத3யோ நிர்வ்ருதா:

       யச்சித்தே நிதராம் ப்ரசாந்தகலனே லப்3த்4வா முநிர் நிர்வருத: |

யஸ்மிந்நித்யஸுகா2ம்பு3தெ4ள க3ளித்தீ4ர் ப்3ரஹ்மைவ ந ப்3ரஹ்மவித்

       ய: கச்சித் ஸ ஸுரேந்த்3ரவந்தி3தபதோ3 நூநம் மநீஷா மம ||           5

       எந்த ஆத்மாநந்தம் என்ற கடலிலுள்ள சிறிய திவலை யினுடைய திவலையினால் (தான்) எப்பேர்ப்பட்ட இந்திராதியரும் இன்புற்றவர்களாக இருக் கின்றனரோ, எதை எண்ண ஓட்டம் நன்கு அடங்கிய சித்தத்தில் அடைந்து முனிவர்கள் ஆனந்தமாக இருக்கிறார்களோ, எந்த அழிவற்ற ஆனந்தக் கடலுள் நழுவிய மனத்தினன்'ப்ரஹ்மத்தை அறிந்தவன்'மட்டுமாயின்றி, ப்ரஹ்மமாகவே உள்ளானோ, அவன் யாராயிருந்தாலும் தேவேந்திரனாலும் பூஜிக்கப்பட்ட பாதங்களை உடையவன். (இது) என்னுடைய நிச்சயமான அபிப்ராயம்.


 

No comments:

Post a Comment