Saturday, November 7, 2020

 தத்த்வோபதேசம்

           [சாந்தோக்ய உபநிஷத்தில் 'தத்-த்வமஸி' என்ற மகாவாக்யம் காணப்படுகிறது. இதில் தத், த்வம், அஸி என்று மூன்று பதங்கள் இருக்கின்றன. 'த்வம்' என்ற பதத்திற்கு 'நீ' என்று பொருள். இது ஜீவனைக் குறிக்கிறது. 'தத்' என்ற பதத்திற்கு 'அது' என்று பொருள். இது ப்ரஹ்மத்தைக் குறிக்கிறது. 'அஸி' என்றால் 'இருக்கிறாய்.' ஆகவே, ‘நீ அதுவாக இருக்கிறாய்' அதாவது 'ஜீவனே ப்ரஹ்மம்' என்பது இந்த வாக்யத்தின் பொருள். ஆனால் ஜீவஸ்வரூபத்தில் பல தர்மங்கள் இருக்கின்றன. இதற்கு மாறான பல தர்மங்கள் ஸத்வஸ்துவான ப்ரஹ்மத்தில் இருக்கின்றன. ஒன்றுக்கொன்று முரண்பாடுற்ற தர்மங்களையுடைய இரண்டு வஸ்துக்கள் ஒன்றாக இருக்க முடியாதே என்ற நமது ஐயத்தைப் போக்க, 'தத்த்வோபதேசம்' என்ற இந்த ப்ரகரணத்தில் மஹா வாக்யத்திலுள்ள த்வம்' பதத்தின் பொருளையும், 'தத்' பதத்தின் பொருளையும் நன்கு சோதித்துக் காட்டுகிறார். அதாவது ஜீவனிடத்திலும், ப்ரஹ்மத்தினிடத்திலும் தோன்றும் பரஸ்பர மாறுபாடான தர்மங்கள் எல்லாம் உண்மையில் ஜீவ ஸ்வரூபத்திலோ, ஈசுவர ஸ்வரூபத்திலோ சேர்ந்தவையல்ல என்றும் மாயா ப்ரமையால் அவ்வாறு தோன்றுகிறது என்று கூறி அந்த தர்மங்களை எல்லாம் விலக்கி, சுத்தமான ஜீவ ஸ்வரூபத்தையும், ப்ரஹ்ம ஸ்வரூபத்தையும் காட்டி இவற்றில் ஒன்றுக் கொன்று விரோதமில்லாமையால் இரண்டும் ஒன்று தான் என்று தீர்மானிக்கிறார். தத், த்வம் என்ற இருபதங்களின் லக்ஷ்யார்த்தமான ப்ரஹ்ம தத்வத்தை உபதேசிப்பதால் இதற்குத் 'தத்த்வோபதேசம்' என்று பெயர் ஏற்பட்டிருக்கிறது.]

 தத்-தவம் பதா3ர்த2-சுத்3த்4யர்த2ம் கு3ரு: சிஷ்யம் வசோ(அ)ப்3ரவீத் |

வாக்யே தத்-த்வமஸித்யத்ர த்வம் பதா2ர்த2ம் விவேசய ||                      1

                 ஆசார்யர் ''தத்” “த்வம்'' என்ற இருபதங்களின் பொருளை சுத்தமாகச் (தெளிவாக விளக்கும் பொருட்டு) செய்ய சிஷ்யனைப் பார்த்து பின்வரும் வார்த்தையை சொன்னார். ''தத்த்வமஸி'' என்ற இந்த வாக்யத்தில் 'த்வம்' என்ற பதத்தின் பொருளைப் பிரித்துத் தெரிந்து கொள்.

ந த்வம் தே3ஹோ(அ)ஸி த்3ருச்யத்வாத் ரூப ஜாத்யாதி3மத்வத: |

பெ4ளதிகத்வா-தசுத்34த்வா-த3நித்யத்வாத் ததை2வ ச ||                        2

 அத்3ருச்யோ ரூப ஹீனஸ்த்வம் ஜாதி ஹீநோ(அ)ப்யப்பெ4ளதிக: |

சுத்3தநித்யோ(அ)ஸி த்3ருக்3ரூபோ க4டோ யத்3வத் ந த்3ருக் ப4வேத் ||         3

 அறியப்படுவதாலும், ரூபம், ஜாதி முதலியவைகளுடன் கூடியிருப்பதாலும் பூதங்களிலிருந்து உண்டாகியிருப்பதாலும், அசுத்தமாயிருப்பதாலும் அவ்விதமே அழிந்து போவதாலும் தேஹமாயிருக்கவில்லை.

நீ அறியப்படாதவனாயும்; ரூபமற்றவனாயும்; ஜாதியில்லாதவனாயும், பூதங்களிலிருந்து உண்டாகாதவனாயும்; சுத்தனாயும் - அழிவில்லாதவனாயும்; அறிகிற ஞான ரூபியாயும் இருக்கிறாய். நீ பார்க்கும் ஜடமான (குடம் எவ்விதம் ஞானமாக தன்னைக் குடமாய்ப் பார்த்துக் கொள்வதாக) ஆகாதோ அறிவாலேயே அறியப்படுவதும், அறிவில்லாவிடில் வெறும் ஜடமேயான துமான தேஹமும் ஞான ரூபமான ஆத்மா ஆகாது.

ந ப4வாநிந்த்3ரியாண்யேஷாம் கரணத்வேந யத் ச்ருதி: |

ப்ரேரகஸ் - த்வம் ப்ருதக் தேப்4யோ ந கர்தா கரணம் ப4வேத் ||               4

  நீ இந்திரியங்கள் அல்ல. ஏனெனில், இவை கரணமாக (கருவியாக) கேட்கப்படுகிறது (அநுபவிக்கப்படுகின்றன). (அவைகளை) ஏவுகின்ற நீ அவைகளைக்காட்டிலும் வேறானவன். செய்கிறவனே கருவியாக ஆகமாட்டான்.

நாநைதாந் - யேகரூபஸ் - த்வம் பி4ந்நஸ் தேப்4ய: குத: ச்ருணு |

ந சைகேந்த்3ரிய - ரூபஸ் - த்வம் ஸர்வத்ராஹம் - ப்ரதீதித: ||                 5

 இந்த இந்திரியங்கள் பலவாக இருக்கின்றன. ஒரே ஸ்வரூபமுள்ள நீ அவைகளைக்காட்டிலும் வேறானவன்; ஏனெனில் கேள் (சொல்கிறேன்) எல்லா இந்திரியங்களிலும் நான் என்ற (பொது) அறிவு ஏற்படுவதால் நீ ஏதாவது ஒரு இந்திரியமாக (மட்டும்) இருக்கமுடியாது.

ந தேஷாம் ஸமுதா3யோஸி தேஷாமந்யதமஸ்ய ச |

விநாசே(அ)ப்யாத்மதீ4ஸ் – தாவத3ஸ்தி ஸ்யாத் நைவமந்யதா2 ||              6

   இந்த இந்திரியங்களுடைய கூட்டமாக நீ இல்லை. அவைகளில் ஏதாவது ஒன்றுக்கு அழிவு ஏற்பட்டாலும், நான் என்ற ஞானம் (அழியாமல்) இருக்கிறது. இவவாறு இல்லாவிட்டால் (இந்திரிய சமுதாயம் ஆத்மாவானால்) (ஒரு இந்திரியம் இல்லாதவனுக்கு) இவ்வாறு (நான் என்ற ஞானம்) உண்டாகாது.

பரத்யேகமபி தாந்யாத்மா நைவ தத்ர நயம் ச்ருணு |

நாநா ஸ்வாமிக தே3ஹோ(அ)யம் நச்யேத் பி4ந் மதாச்ரய: ||                 7

 நாநாத்மாபி4மதம் நைவ விரு3த்34 விஷயத்வத: |

ஸ்வாம்யைக்யே து வ்யவஸ்தா2 ஸ்யாதேகபார்தி2வ–தே3சவத்: ||              8

                 அந்த இந்திரியங்கள் ஒவ்வொன்றும் ஆத்மாவல்ல. அந்த விஷயத்தில் யுக்தியை (காரண விளக்கத்தை) க் கேள். வெவ்வேறு அபிப்ராயங்களுக்கு இடமான, இந்த பல பேர்களை யஜமானர்களாக உடைய தேஹமானது அழிந்து விடும்.

      ஒன்றுக்கொன்று எதிரிடையான விஷயங்களுள்ளதால் பல ஆத்மா என்பது (ஒரு ஜீவனுக்கே உள்ளது) ஒருவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டதல்ல. ஒரே'யஜமானன் இருந்தால் தான், ஒரே அரசனுள்ள தேசம் போலக் கட்டுப்பாடு இருக்கும் (இருக்கமுடியும்).

      (கண், காது முதலான இந்திரியங்களில் ஒவ்வொன்றும் ஆத்மா என்ற வாதமும் சரியல்ல. ஏனெனில் இந்த சரீரத்தில் ஆத்மாதான் யஜமானன். அவன் இஷ்டப்படிதான் சரீரத்தில் கார்யம் நடைபெறவேண்டும். ஒவ்வொரு இந்திரியமும் ஆத்மாவானால் ஒவ்வொரு இந்திரியமும் இந்த சரீரத்திற்குப் பூரண அதிகாரமுள்ள யஜமானன் ஆகும். பல யஜமானர்களுக்குக் கொள்கை ஒன்றாக இருக்குமானால் ஒத்துப்போக முடியும். இதில்லாமல் வெவ்வேறு எதிரிடையான கொள்கைகள் கொண்ட பலர் ஒரு தேசத்திற்கு அரசர்களாக இருப்பார்களேயானால் ஒருவருக் கொருவர் சண்டையிட்டுக்கொள்வதன் மூலம் தேசம் அழிந்துவிடும். இதுபோல கண்ணுக்கு ரூபம் விஷயம், காதுக்கு சப்தம் விஷயம், இவ்விதமே ஒவ்வொரு இந்திரியத்துக்கும் வெவ்வேறான விஷயங்கள். எல்லோருக்கும் சமமான அதிகாரம் இருக்கிறது. இந்த நிலைமையில் கண் என்ற யஜமானன் ரூபத்தைப் பார்க்க வேண்டும் என்று சொல்லும். அதே சமயத்தில் காது என்ற யஜமானன் சப்தத்தைக் கேட்க வேண்டும் என்று சொல்லும். ஒரே சமயத்தில் இரண்டும் நடை பெற முடியாது. ஆகவே ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக்கொண்டு தேஹத்தையே அழித்து விடும். ஆதலால் சரீரத்தில் பலர் யஜமானர்களாக இருக்க முடியாது. ஒரு தேசத்தில் ஒருவனே எல்லா அதிகாரங்களும் கொண்ட மஹாராஜனாக இருந்தால் அவனுக்குக் கட்டுப்பட்டு எல்லோரும் நடப்பதால் ராஜ்ய பரிபாலனம் நன்கு நடை பெறும். இதுபோல் சரீரத்திலும் செவ்வனே காரியங்கள் நடைபெறுவதால் ஒரே ஆத்மாவை (யஜமானனை) த்தான் ஒப்புக் கொள்ள வேண்டும்.)

ந மநஸ் - த்வம் ந வா ப்ராணோ ஜட3த்வாதே3வ சைதயோ: |

3த - மந்யத்ர மே சித்த - மித் – யந்யத்வானுபூ4தித: ||                          9

 க்ஷத் தருட்3ப்4யாம் பீடி3த: ப்ராணோ மமாயம் சேதி பே43த: |

தயோர் த்3ரஷ்டா ப்ருதக் தாப்4யாம் க4டத்3ரஷ்டா க3டாத்யதா2 ||               10

   (மனம், ப்ராணன் என்ற) இவ்விரண்டும் ஜடமாயிருப்பதாலேயே (ஞான முள்ள) நீ, மனம் அல்ல. பிராணனுமல்ல.'' என்னுடைய மனது வேறிடத்தில் சென்றிருந்தது' என்று தன்னைக் காட்டிலும் வேறு பொருளாக அனுபவம் ஏற்படுவதால், (மனம் ஆத்மாவல்ல) என்னுடைய இந்த பிராணன் என்று சொல்கையில் வேற்றுமை தோன்றுவதாலும், பசிதாகங்களால் துன்பப்பட்ட (துன்பப்படுவதாலும்) பிராணன் (ஆத்மாவல்ல). எவ்விதம் குடத்தைப் பார்க்கிறவன் குடத்தைக்காட்டிலும் வேறானவனோ (அவ்வாறு) அந்த மனத்தையும் பிராணனையும் அறிகிறவன் அவைகளைக் காட்டிலும் வேறானவன். (என்னுடைய வீடு, என்னுடைய புத்ரன் என்பது போல் என்னுடைய மனம், என்னுடைய ப்ராணன் என்றும் சொல்வதால், சொல்வதும் ''நான்இவற்றிற்கு வேறானவன் - என்றாகிறது. ''என்னுடைய நான்'' என்பதில்லை)

ஸுப்தெள லீநா(அ)ஸ்தி யா போ3தே4 ஸர்வம் வ்யாப்நோதி தே3ஹகம் |

சிச்சா2யயா ச ஸம்ப3த்3தா4 ந ஸா புத்3திர் ப4வான் த்3விஜ ||                   11

 நாநாரூபவதீ போ3தே4 ஸுப்தெள லீநா(அ)திசஞ்சலா |

யதோ த்3ருகேகரூபஸ் த்வம் ப்ருத2க் தஸ்ய ப்ரகாசக: ||                       12

                 இரு பிறப்பாளனே! எது தூக்கத்தில் அடங்கியிருக்கிறதோ, விழித்திருக்கும் பொழுது சைதன்யப் ப்ரதிபிம்பத்துடன் சேர்ந்துகொண்டு சரீரம் முழுவதிலும் பரவியிருக்கிறதோ, அந்த புத்தியும் நீ இல்லை.

      (புத்தியானது) விழித்துக் கொண்டிருக்கும் பொழுது, பலவித உருவ (ஆகார) த்துடன் கூடியதாகவும், மிகவும் சஞ்சலமான தாகவும், தூக்கத்தில் மறைந்ததாகவும் இருக்கிறது. ஞானம் ஒன்றையே ஸ்வரூபமாகக் கொண்டவனாதலால் அதை, (அந்த புத்தியைப்) பிரகாசப்படுத்துகிற (நீ) அந்த புத்தியைக் காட்டிலும் வேறானவன்.

      நாம் விழித்துக் கொண்டிருக்கும்பொழுது பல விஷயங்களைத் தெரிந்து கொள்கிறோம். இதற்கு புத்திதான் காரணம். வெளியில் உள்ள விஷயங்களை கண், காது முதலான இந்திரியங்கள் மூலம் புத்தியால் மட்டும் அறிந்து கொள்கிறோம். உள்ளே ஏற்படும் ஸுகம், துக்கம் முதலியவைகளை புத்தியால் மட்டும் அறிந்து கொள்கிறோம். புத்தியானது சரீரம் முழுவதும் பரவியிருக்கிறது. சரீரத்தில் எந்த இடத்தில் வலி ஏற்பட்டாலும் புத்திக்குத் தெரிந்து விடுகிறது. கண்ணால் கோவிலில் உள்ள தேவதாமூர்த்தியைப் பார்க்கும் பொழுது புத்தியும் அந்த உருவமாக ஆகிவிடுகிறது. இதற்கு புத்தி விருத்தி என்று பெயர். இதில் சைதன்யம் பிரதிபிம்பிக்கிறது. உடனே நமக்கு அந்த விஷயத்தின் அறிவு ஏற்படுகிறது. புத்தி ஸ்வபாவத்தில் ஜடமாயிருந்தாலும் ப்ரகாசமான சைதன்ய பிரதி பிம்பத்துடன் கூடியிருப்பதால் அறியும் சக்தி அதற்கு ஏற்படுகிறது. தூக்கத்திலோ நமக்கு ஒன்றும் தெரிவதில்லை. அப்பொழுது புத்தி மறைந்து விடுகிறது. இவ்வாறு தான் ஜடமாய்ம், வேறொரு பிரகாச வஸ்துவின் உதவியைக் கொண்டு பிரகாசிக்கிறதாயும், பலவித மாறுபாடுகளை அடைகிறதாயும், ஒரு சமயத்தில் மறைந்தே போவதாயும் உள்ள புத்தி எவ்வாறு ஆத்மாவாக இருக்க முடியும்? மேலும் மற்ற பொருள்களை நமக்குப் பிரகாசப்படுத்தும் புத்தியையும் பிரகாசப்படுத்துபவன் ஆத்மா. அவன் ஸ்வரூபமே ஞானம்தான். ஆதலால்,  புத்தி பிரகாசனான ஆத்மா புத்தியைக் காட்டிலும் வேறு.

ஸுப்தெள தே3ஹாத்யபா4வே(அ)பி ஸாக்ஷீ தேஷாம் ப4வான் யத: |

ஸ்வானுபூ4தி ஸ்வரூபத்வாத் நாந்யஸ் தஸ்யாஸ்தி பா4ஸக: ||               13

  தூக்கத்தில் தேஹம் முதலியவைகள் இல்லாமல் போனாலும் அவைகளை ஸாக்ஷியாக அறிகிறவனாக நீ இருக்கிறதனால் ஸ்வானுபவ ரூபமாக இருக்கும் இந்த ஆத்மாவை விளங்கச் செய்கிற வேறு வஸ்து இல்லை.

 ப்ரமாணம் போ34யந்தம் தம் போ3தம் மாநேந யே ஜநா: |

பு3பு4த்ஸந்தே த ஏதோ4பி4ர் த3க்3தும் வாஞ்ச2ந்தி பாவகம் ||                    14

ப்ரமாணமான (அறிவதற்கு ஸாதன் மான இந்திரியம் முதலியவற்றை) அறிவுறுத்துகின்ற அந்த அறிவை (யே) பிரமாணத்தால் எந்த மனிதர்கள் அறிய விரும்புகிறார்களோ, அவர்கள் விறகுகளால் நெருப்பை (யே) எரிப்பதற்கு விரும்புகிறார்கள்!

      (உலகிலுள்ள விஷயங்களை இந்திரியம், மனம் முதலான பிரமாணங்களால் அறிந்து கொள்கிறோம், இந்த பிரமாணங்களை அறியப்படுத்துகிறது ஞான ரூபமான ஆத்மா. இவ்விதமிருக்க இந்த பிரமாணங்களைக்கொண்டு ஆத்மாவை எவ்வாறு அறிந்துகொள்ள முடியும்? அக்னி தான் விறகை எரிக்கலாம் (அழிக்கும்). விறகால் நெருப்பை (அழிக்க) எரிக்க முடியுமா? இந்திரியம், மனம் முதலிய வற்றால் ஆத்மாவை அறிவது என்பது விறகால் நெருப்பை எரிப்பது போலத்தான்.)

விச்வமாத்மானுப4வதி தேநாஸௌ நாநுபூ4யதே |

விச்வம் ப்ரகாசயத் - யாத்மா தேநாஸௌ ந ப்ரகாச்யதே ||                   15

  ஆத்மாவானது உலகத்தை அனுபவிக்கிறது. இந்தப் பிரபஞ்சத்தால் அந்த ஆத்மா அனுபவிக்கப்படுகிறதில்லை. ஆத்மாவானது பிரபஞ்சத்தை விளங்க வைக்கிறது. இந்த பிரபஞ்சத்தால் அந்த ஆத்மா பிரகாசிக்கப்படுவதில்லை.

ஈத்3ருசம் தாத்3ருசம் நைதத் ந பரோக்ஷம் ஸ்தே3வ யத் |

தத் - ப்ரஹ்ம த்வம் ந தே3ஹாதி3 த்3ருச்யரூபோ(அஸி ஸர்வத்ருக் ||          16

  எதுஇப்பேற்பட்டது'', ''அப்பேற்பட்டது'', "இவ்வாறு'' (என்றெல்லாம் வர்ணிக்கும்படி) இல்லையோ, பரோக்ஷமாகவும் இல்லையோ (முக்காலத்திலும்) அழியாத தாகவே இருக்கிற அந்த ப்ரஹ்மம் தான் நீ. எல்லாவற்றையும் அறியும் நீ, சரீரம் முதலிய அறியப்படும் பொருளாக இருக்கவில்லை. (பரோக்ஷம் என்பது நேரில் அறிய முடியாதது; ஆத்மஜீவா தன்னைத்தானாய்த் தன்னிலேயே அறியும். இப்படி நேருக்கு நேர் அறிவது அபரோக்ஷம் எனப்படும்.)

இத3ம் - த்வேநைவ யத் பா4தி ஸர்வம் தச்ச நிக்ஷித்4யதே |

அவாச்ய தத்வ – மநித3ம் ந வேத்3யம் ஸ்வப்ரகாசத: ||                         17

எது "இது'' என்றே தோன்றுகிறதோ அது எல்லாம் (ப்ரஹ்மம் அல்ல என்று உபநிஷத்துக்களில்) மறுக்கப்படுகிறது, "இதுவல்லாதது (ஆத்மா) சப்தத்தால் சொல்லமுடியாத உண்மைப்பொருள். (அது) தானாகவே ப்ரகாசிப்பதால் (தன்னைத்தானே அறிந்து கொள்வதால், வேறொன்றால் அறியப்படும் பொருள் அல்ல.

ஸத்யம் ஞான - மநந்தம் ச ப்3ரஹ்ம - லக்ஷண - முச்யதே |

ஸத்யத்வாத் ஞாநரூபத்வாத் அருந்ததத்வாத் த்வமேவ ஹி ||                 18

 ஸத்யம் (உண்மை), ஞானம் (அறிவு), அநந்தம் (எல்லையில்லாதது) என்பன ப்ரஹ்மத்தின் லக்ஷணமாகச் சொல்லப்படுகின்றன. ஸத்யமாயிருப்பதாலும், ஞான ரூபமாயிருப்பதாலும், எல்லையற்று இருப்பதாலும் நீதான் (அந்த ப்ரஹ்மம்).

ஸதி தே3ஹாத்3யுபாதெ4 ஸ்யாத் ஜீவஸ் - தஸ்ய நியாமக: |

ஈச்வர: சக்த்யுபாதி4த்வாத் த்3வயோர் – பா3தே4 ஸ்வயம் ப்ரப4: ||               19

   சரீரம் முதலிய உபாதி இருக்கும்பொழுது, ஜீவன் அதற்கு அடக்கி ஆள்பவனாக ஆவான், (மாயா) சக்தியை உபாதியாகக் கொண்டிருப்பதால், ஈசுவரன் (அதற்கு நியாமகன்). இரண்டு உபாதிகளையும் விலக்கிவிட்டால், தானே பிரகாசிக்கும் சைதன்யம் ஒன்று தான் (ஜீவன், ஈச்வரன் இருவருக்கும்) மிஞ்சி நிற்கும்.

அபேக்ஷ்யதே(அ)கி'2ர் மாநைர் ந யன் மாந – மபேக்ஷதோ |

வேத3வாக்யம் ப்ரமாணம் தத் ப்ரஹ்மாத்மா - வகதௌ - மதம் ||             20

  எல்லா பிரமாணங்களாலும் எது எதிர்பார்க்கப்படுகிறதோ, எது வேறு ப்ரமாணத்தை எதிர்பார்க்கிறதில்லையோ, அந்த உபநிஷத் வாக்யம் ப்ரஹ்ம ஸாக்ஷாத்காரத்தில் (ப்ரஹ்மத்தை ஆத்மாவாக நேரில் தெரிந்து கொள்வதில்) ப்ரமாணமாக ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது.

      (ப்ரத்யக்ஷம், அநுமானம் முதலிய ப்ரமாணங்கள் எல்லாம் சப்தப்ரமாண மான வேதத்தை அனுஸரித்தால் தான் ப்ரமாணமாகும். வேத முடியான உபநிஷத் வாக்யத்தால் ஜீவப்ரஹ்ம ஐக்ய ஸாக்ஷாத்காரம் ஏற்படுகிறது.)

அதோ ஹி தத் - த்வமஸ்யாதி வேதவாக்யம் ப்ரமாணத: |

ப்ரஹ்மணோ(அ)ஸ்தி யயா யுக்த்யா ஸா(அ)ஸ்மாபி: ஸம்ப்ரகீர்த்யதே ||      21

  ஆகையால், எந்த யுக்தியினால்'தத் - த்வமஸி'முதலான வேதவாக்யம் ப்ரஹ்மத்திற்கு ப்ரமாணமாக இருக்கிறதோ, அந்த யுக்தி எங்களால் நன்கு சொல்லப்படுகிறது.

 ('தத்த்வமஸி' முதலான உபநிஷத் வாக்யத்தினால் ப்ரஹ்ம ஸாக்ஷாத்காரம் ஏற்படுவதாகக் கூறப்பட்டது. ஆனால் இந்த வாக்யத்தைக் கேட்பதால் மட்டும் ஒருவருக்கும் இந்த அனுபவம் ஏற்படுவதில்லை. அதனால் இந்த வாக்கியத்தி லிருந்து ஆத்மானுபவம் ஏற்படுவதற்குவேண்டிய உபாயத்தை குருமார்களாகிய தங்களிடமிருந்து பெறவேண்டும் என்கிறார்.)

சோதி4தே த்வம் – பதா3ர்தே2 ஹி தத் – த்வமஸ்யாதி3 சிந்திதம் |

ஸம்ப4வேத் நாந்யதா2 தஸ்மாத் சோத4நம் க்ருதமாதி3த: ||                     22

 த்வம்' என்ற சொல்லின் பொருள், ஆராய்ந்து பார்க்கப்பட்ட பொழுதல்லவா'தத்த்வமஸி'முதலான வாக்யம் ஆராயப்பட்டதாக ஆகும்? அப்படியில்லாவிடில் ஆகாது. ஆகையால் முதலில் (இந்த ப்ரகரணத்தில் இதற்கு முன் இது) சோதனம் செய்யப்பட்டது. (ஆராய்ந்து முடிவு செய்யப்பட்டது. மேலும், இந்த "த்வம்'' ஆகிய'' நீ'யை விளக்குகிறார்.)

தே3ஹேந்த்3ரியாதி3 4ர்மான் ய: ஸ்வாத்மந் - யாரோபயன் ம்ருஷா |

கர்த்ருத்வாத் – யபி4மாநீ ச வாச்யார்த2ஸ் த்வம் – பத3ஸ்ய ஸ: ||              23

  எவன் தன் ஸ்வரூபத்தில், தேஹம், இந்திரியம் முதலியவற்றின் தர்மங்களைப் பொய்யாக ஆரோபணம் செய்துகொண்டு (சுமத்திக் கொண்டு) கர்த்ருத்வம் முதலியவை இருப்பதாக அபிமானம் கொள்கிறானோ, அவன் த்வம்'எனும் பதத்திற்கு வாச்யார்த்தம் (வாச்யமான பொருள்). (யாவருக்கும் தெரியும் வெளிப்படையான பதப்பொருள்'' வாச்யார்த்தம்'எனப்படும்.)

தே3ஹேந்த்3ரியாதி3 ஸாக்ஷீ ய: தேப்4யோ பா4தி விலக்ஷண: |

ஸ்வயம் போ34 ஸ்வரூபத்வாத் லக்ஷயார்த2ஸ் த்வம் – பத3ஸ்ய ஸ: ||       24

  எவன் தான் ஞானஸ்வரூபமாக இருப்பதால், தேஹம், இந்திரியம் முதலியவைகளை நேரில் அறிபவனாகவும், அவைகளைக்காட்டிலும் வேறுபட்ட தன்மை உள்ளவனாகவும் விளங்குகிறானோ, அவனே த்வம் என்ற சொல்லுக்கு லக்ஷ்யார்த்தம். (லக்ஷணையினால் கிடைக்கும் பொருள்). (ஆராய்ந்தறியும் உட்பொருளே லக்ஷ்யார்த்தம்.)

வேதா3ந்த வாக்ய ஸம்வேத்3ய விச்வாதீதாக்ஷரா – த்3வயம் |

விசுத்தம் யத் ஸ்வஸம்வேத்3யம் லக்ஷ்யார்த2ஸ் தத் - பதஸ்ய ஸ: ||         25

  எது உபநிஷத் வாக்யங்களால் அறியத்தக்கதும், பிரபஞ்சத்திற்கு அப்பால் பட்டதும், அழிவற்றதும், இரண்டற்றதும், பரிசுத்தமான தும், ஸ்வயம் ப்ரகாசமாகவும் உள்ளதோ, அது 'தத்' என்ற பதத்திற்கு லக்ஷ்யார்த்தம்.

ஸாமாநாதி4கரண்யம் ஹி பத3யோஸ் தத் - த்வமோர் – த்3வயோ:

ஸம்ப3ந்த4ஸ் - தேந வேதா3ந்தைர் – ப்3ரஹ்மைக்யம் ப்ரதி பாத்3யதே ||       26

   'தத்' 'த்வம்' என்ற இரண்டு பதங்களுக்கும், ஸாமாநாதிகரண்யம் அல்லவா ஸம்பந்தம்? அதனால் உபநிஷத் வாக்யங்களால் ப்ரஹ்மத்தினின்று அபேதம் (வேறின்மை) விளக்கப்படுகிறது.

  (தத், த்வம், இவ்விரு பதங்களும் 'தத்வமஸி' என்ற ஒரே வாக்யத்தில் இருப்பதால் ஒன்றுக்கொன்று சேர்ந்து கொண்டு தான் வாக்யார்த்தத்தை உண்டு பண்ணுகிறது. இவ்விரு பதங்களின் ஸம்பந்தத்திற்கு ஸாமாநாதிகரண்யம் என்று பெயர். அதை மேற்கொண்டு விளக்குகிறார். ஒரே பொருளைக் குறிப்பது தான் ஸாமாநாதிகரண்யம் என்பது. ஆகவே இந்த மஹா வாக்யத்திலிருந்து ப்ரஹ்ம அபேத ஞானம் உண்டாகிறது.)

பி4ந்ந ப்ரவ்ருத்தி ஹேதுத்வே பத3யோரேக வஸ்துநி |

வ்ருத்தித்வம் யத் ததை2வைக – விப4க்த்யந்தகயோ - ஸ்தயோ: ||             27

 ஸாமாநாதி4 கரண்யம் தத் ஸம்ப்ரதா3யிபி4ரீரிதம் |

ததா2 பதா3ர்தயோரேவ விசேஷண விசேஷ்யதா ||                             28

   இருபதங்களுக்கு ப்ரவ்ருத்தி நிமித்தம் வெவ்வேறாக இருக்கும் பொழுது ஒரே விபக்தியந்தத்தை (ஒரே வேற்றுமை உருபைக் கடைசியில்) கொண்ட அவ்விரு பதங்களுக்கும் அப்படியே ஒரே வஸ்துவில் இருப்பது என்பது எதுவோ, அது ஸாமாநாதிகரண்யம் என்று சாஸ்திர ஸம்ப்ரதாயம் அறிந்தவர்களால் சொல்லப்பட்டிருக்கிறது. அவ்விதமே, இருபதங்களின் அர்த்தங்களுக்கும் விசேஷண விசேஷ்யபாவம் (சொல்லப்பட்டிருக்கிறது).

      ஒரு சொல் ஒரு பொருளைக் குறிக்கிறதென்றால் அதற்குத் தனிப்பட்ட காரணம் இருக்கிறது. இதற்கு'ப்ரவ்ருத்தி நிமித்தம்'என்று பெயர். (ப்ரவ்ருத்திக்கு- சொல் பொருளைக் குறிப்பதற்கு, நிமித்தம் - காரணம்.) ஒவ்வொரு சப்தத்திற்கும் ஒவ்வொன்று ப்ரவிருத்தி நிமித்தமாக இருக்கும். ஒரே மாதிரி விபக்தியுடன் (வேற்றுமை உருபுடன்) கூடிய இருபதங்களுக்கு, ப்ரவ்ருத்தி நிமித்தம் வெவ்வேறாக இருந்தாலும் இரண்டும் ஒரே பொருளைக் குறிக்குமானால் அங்கு ஸாமாநாதிகரண்யம் இருப்பதாக சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. அதாவது, ''சுக்லா கௌ:" வெளுப்பு நிறமுள்ள பசு'' என்று சொல்கிறோம். இங்கு சுக்லபதமும், கோபதமும், ப்ரதமாவிபக்த்யந்தம். (முதல் வேற்றுமையில் இருப்பவை.) சுக்ல பதத்திற்கு ப்ரவ்ருத்தி நிமித்தம் வெளுப்பு நிறம். கோ பதத் திற்கு ப்ரவ்ருத்தி நிமித்தம் 'கோத்வம்' என்ற ஜாதி. ப்ரவ்ருத்தி நிமித்தம் வெவ்வேறாக இருந்தாலும் இரண்டு பதங்களும் சேர்ந்து ஒரே பசுவைக் குறிக்கிறது. இங்கு கோ - பதம் விசேஷ்யம் (விசேஷிக்கப்படுவது) சுக்லபதம் விசேஷணம் (விசேஷத்தைத் தருவது). விசேஷ்ய விசேணபாவம் உள்ள இடங் களில் ஸாமாநாதிகரண்யம் இருக்கும்.

அயம் ஸ : ஸோ(அ)யமிதிவத் ஸம்ப3ந்தோ44வதி த்3வயோ: |

ப்ரத்யக்த்வம் ஸத்3விதீ3யத்வம் பரோக்ஷத்வம் ச பூர்ணதா ||                  29

பரஸ்பர விருத்34ம் ஸ்யாத் ததோ ப4வதி லக்ஷணா |

லக்ஷய லக்ஷண ஸம்ப3ந்த4: பதா3ர்த2 ப்ரத்யகா3த்மநோ: ||                     30

   "இவன் (தான்) அவன், ''அவன் (தான்) இவன்'' என்பது போல் இரண்டு பதங்களுக்கும் ஸம்பந்தம் ஏற்படுகிறது. அபரோக்ஷமாயிருக்கும் தன்மையும், பரோக்ஷ மாயிருக்கும் தன்மையும், இரண்டாவது பொருளுடன் கூடியிருக்கும் தன்மையும், எங்கும் நிறைந்து ஒரே வஸ்துவாயிருக்கும் தன்மையும், ஒன்றுக் கொன்று எதிரிடையானதாக ஆகும். ஆகையால் லக்ஷணையானது இருக்கிறது. பதத்திற்கும் அதன் அர்த்தமான ப்ரத்யக் (உள்வஸ்துவான) ஆத்மாவுக்கும் லக்ஷ்யலக்ஷண ஸம்பந்தம்.

      ('சுக்லா கௌ:' என்ற வாக்யத்தில் போல தத் - த்வமஸி வாக்யத்தில் விசேஷ்ய விசேஷண பாவத்தைக்கொண்ட ஸாமாநாதிகரண்யம் கூற முடியாது. அவனே இவன், இவனே அவன் என்ற வாக்யத்தில் போல அபேதத்தைத்தான் வாக்யார்த்தமாகக் கூறவேண்டும். ஏனெனில் வெளுப்பான பசுவை நாம் நேரில் காண்பதால் அங்கு எல்லோருக்கும் தெளிவும், வெளிப்டையான வாச்யார்த்தத் தைக் கொண்டாலே போதும். இங்கு நீ (ஜீவன்) அவனாக (ஈசுவரனாக) இருக் கிறாய் என்று வாச்யார்த்தத்தைக்கொண்டு பொருள் கூறினோமானால் இது ஒன்றுக் கொன்று விருத்தமாயிருக்கிறது. த்வம் – பதத்தின் பொருளான ஜீவன் ப்ரத்யக்ஷ மாக இருக்கிறது. பல வேற்றுமைகளுடன் கூடியது. தத்பதத்தின் பொருளான ஈசுவரனோ பரோக்ஷம், எங்கும் நிறைந்த ஒரே வஸ்து. ஜீவன் ஈசுவரனாக இருக்க முடியாது. ஈசுவரன் ஜீவனாக இருக்க முடியாது. இவ்வாறு வாச்யார்த்தத்தில் விரோதம் ஏற்படுவதால் அதை விட்டு லக்ஷ்யார்த்தத்தையே கொள்ள வேண்டும்.

மாநாந்தரோபரோதா4ச்ச முக்2யார்த2ஸ்யாபரிக்3ஹே |

முக்2யார்த2ஸ்யாவிநாபூ4தே ப்ரவ்ருத்திர் - லக்ஷணோச்யதே ||                31

    வேறு ப்ரமாணத்திற்கு விரோதம் ஏற்படுவதால், முக்யமான (வாச்ய) அர்த்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கும் பொழுது, முக்யார்த்தத்தில் சேர்ந்துள்ள பொருளில் செல்வது'லக்ஷணை'என்று கூறப்படுகிறது.

      (ஒரு வாக்யத்திலுள்ள பதங்களிலிருந்து கிடைக்கும் முக்யார்த்தத்தைச் சேர்த்துப் பார்த்ததில் அந்த வாக்யார்த்தம் ப்ரமாண விருத்தமாக இருக்குமானால் முக்யார்த்தத்துடன் சேர்ந்த வேறு பொருளை அந்த பதத்திற்கு அர்த்தமாகச் சொல்வது லக்ஷணை எனப்படும்.)

த்ரிவிதா4 லக்ஷணா ஜ்ஞேயா ஜஹத்யஜஹதீ ததா2 |

அந்யோப4யாத்மிகா ஜ்ஞேயா தத்ராத்3யா நைவ ஸம்ப4வேத் ||                32

   லக்ஷணையானது மூன்று விதமாக அறியத்தக்கது (ஜஹத், அஜஹத், ஜஹத் ஜஹத் என்ற மூன்று விதம்.) (ஒன்று) விட்டது. (இரண்டு) அவ்விதம் விடாதது. (மூன்றாவது) இரண்டுமாக இருப்பதால் (விட்டும் விடாதது) என இவை அறியத் தகுந்தவை. இவற்றில் முதலாவது அர்த்தம் இங்கு பொருந்தாது. (பின்வரும் ச்லோகங்கள் இதை விளக்கும்.)

வாச்யார்த2மகில2ம் த்யக்த்வா வ்ருத்தி: ஸ்யாத்3யா தத3ன்விதே |

3ங்கா3யாம் கோ4ஷ இதிவத் ஐஹதீ லக்ஷணா ஹி ஸா ||                    33

  வாச்யார்த்தம் முழுவதையும் விட்டு, அதனுடன் சேர்ந்த வேறு பொருளில் இருப்பது யாதொன்று உண்டோ அது'' கங்கையில் இடைச்சேரி'' என்பது போல ஜஹத் லக்ஷணையல்லவா?

  (சப்தத்திலிருந்து கிடைக்கக் கூடிய வாசயார்த்தத்தை விட்டு விட்டு அதனுடன் ஸம்பந்தமுள்ள வேறொரு வஸ்துவை இந்தப் பதத்திற்குப் பொருளாகக் கூறுவது ஜஹத்லக்ஷணை எனப்படும். உதாரணம்: -கங்காயாம் கோஷ:''  இந்த வாக்யத்திற்கு "கங்கையில் இடைச்சேரி இருக்கிறது" என்பது பொருள். கங்கை என்னும் சொல் இருகரைகளுக்குள் ஓடுகிற பிரவாஹத்தைக் குறிக்கும். அதுதான் வாச்யார்த்தம். ஜலப்ரவாஹத்தில் இடைச்சேரி இருக்க முடியாது. வாச்யார்த்தமான ப்ரவாஹத்தைக் கொண்டால் விரோதம் ஏற்படுகிறது. அதனால் இங்கு வாச்யார்த்தமான ப்ரவாஹத்தை விட்டுவிட்டு பிரவாஹத்தை ஒட்டியுள்ள கரையை, கங்கா பதத்தின் பொருளாக லக்ஷணையால் சொல்கிறோம். கங்கைக் கரையில் இடைச்சேரி இருக்கலாம். இப்போது விரோதம் இல்லை. இங்கு வாச்யார்த்தம் முழுவதையும் விட்டுவிடுவதால் இதற்கு ஜஹத்லக்ஷணை (விட்டலக்ஷணை) என்று பெயர்.

 வாச்யார்த2ஸ்யைகதே3 சஸ்ய ப்ரக்ருதே த்யாக3 இஷ்யதே |

ஜஹதீ ஸம்ப4வேத் நைவ ஸம்ப்ரதா3ய விரோத4த: ||                          34

     இங்கு கூறப்படும் தத் - த்வமஸி வாக்யத்தில், வாச்யார்த்தத்தினுடைய ஒரு அம்சத்திற்கு விடுதல் விரும்பப்படுகிறது. இது சாஸ்திர ஸம்ப்ரதாயத்திற்கு விரோதமாயிருப்பதால் ஜஹத் லக்ஷணை இங்கு ஸம்பவிக்காது.

   'தத் - த்வமஸி' மஹாவாக்யத்தில் 'தத்' என்ற ஈச்வரன் மாயா உபாதியுடன் கூடிய சைதன்யம் என்பதே வாச்யார்த்தம்.) ஆனாலும் பொருள் கொள்கை யில்'தத்'என்பது மாயா உபாதியுமற்ற சைதன்யமான பிம்பம் என்றே கொள்கிறோம். அதாவது லக்ஷ்யார்த்தத்தை முழுதும் விடாமல் ஒரு அம்சத்தை மட்டும் விடுகிறோம். இவ்வாறே தேஹாதிகள் என்ற உபாதியுடன் கூடிய சைதன்யம் என்ற த்வம்பத வாச்யார்த்தத்திலும் ஏகதேசமான உபாதியைவிட்டு சைதன்யத்தை மட்டும் த்வம் பதத்தின் பொருளாகச் சொல்கிறோம்.'கங்காயாம்'என்பதில்'ப்ரவாஹம்'என்ற வாசயார்த்தம் முழுவதையும் விட்டு 'கரை' என்ற வேறு அர்த்தத்தைக் கொள்வதால், அங்கு ஜஹத்ல க்ஷணை (விட்டலக்ஷணை) பொருந்தும். மஹாவாக்யத்தில் வாச்யார்த்தம் முழுவதையும் விடாதபடியாலும் ஏகதேசத்தை வைத்துக்கொள்வதாலும், இங்கு ஜகத்லக்ஷணை (விட்டலக்ஷணை) பொருந்தாது.

வாச்யார்த2மபரித்யஜ்ய வ்ருத்திரந்யார்த2கே து யா |

கதி2தேய - மஜஹதீ சோணோ(அ)யம் தா4வதீதிவத் ||                          35

       வாச்யமான பொருளை விடாமல் வேறு பெருாளில் இருப்பது எதுவோ இது ''சிகப்பு நிறமுள்ள இது (குதிரை) ஓடுகிறதுஎன்பது போல அஜஹத் லக்ஷணையாக கூறப்பட்டுள்ளதுவாச்யமான பொருளையும் விடாமல் வாச்யமல்லாத வேறு பொருளையும் குறிக்குமானால் அங்கு அஜஹத்ல க்ஷணையாகும். சோணோ தாவதி என்ற வாக்யத்தில்'சோண'என்றால் சிகப்பு நிறம்','தாவதி'என்றால் 'ஓடுகிறது' என்று பொருள். நிறம் என்பது குணமான தால் அது திரவ்யத்தை விட்டுத் தனியாக இருக்காது. சிகப்பு நிறம் மட்டும் தனியாக ஓடாது. ஆகவே, 'சிவப்பு நிறம் ஓடுகிறது' என்ற வாக்யார்த்தில் ப்ரத்யக்ஷ விரோதம் ஏற்படுவதால் சோணபதத்திற்கு 'சிகப்பு நிறமுள்ள குதிரை' என்று லக்ஷணையால் பொருள் சொல்கிறோம். இங்கு வாச்யார்த்தமான சிவப்பு நிறத்தை விடாமல், அதையும் சேர்த்து சிகப்புக் குதிரை என்று பொருள் கூறுவதால் இங்கு அஜஹலக்ஷணை யாகும்.

ந ஸம்ப4வதி ஸா(அ)ப்யத்ர வாச்யரர்தே2(அ)திவிரோத4த: |

விரோதா4ம்ச பரித்யாகோ3 த்3ருச்யதே ப்ரக்ருதே யத: ||                        36

  ப்ரக்ருதமான தத்த்வமஸி வாக்யத்தில், வாச்யமான பொருளில் மிகுந்த விரோதமிருப்பதால் விருத்தமான பாகத்தைக் கைவிடுவது காணப்படுகிற படியால் இங்கு அந்த அஜஹத்லக்ஷணையும் பொருந்தாது.

  ('தத் - த்வமஸி' மஹாவாக்யத்தில் அஜஹத்லக்ஷணையும் பொருந்தாது. வாச்யார்த்தத்தைவிடாமல் முழுவதும் சேர்த்துக்கொண்டால்தான் அஜஹத் லக்ஷணை சொல்லலாம். மஹாவாக்யத்திலோ வாச்யார்த்தமான உபாதிகளைச் சேர்த்துக்கொண்டால் விரோதம் ஏற்படுகிறது. அதற்காக விருத்தமான அம்சத்தை விட்டு விடுகிறோம். ஆகையால் அஜஹத்லக்ஷணையும் இல்லை.)

வாச்யார்த2ஸ்யைகதே3சம் ச பரித்யஜ்யைகதே4சகம் |

யா போ34யதி ஸாஜ்ஞேயா த்ருதீயா பா43லக்ஷணா ||                       37

    வாச்யமான அர்த்தத்தின் ஒரு அம்சத்தை விட்டு விட்டு மற்றோர் அம்சத்தை எது அறிவிக்கிறதோ, அது மூன்றாவதான பாகலக்ஷணையாக அறியத் தகுந்தது.

      (வாச்யமான அர்த்தத்தில் ஒரு அம்சத்தை விட்டுவிட்டு மற்றோர் அம்சத்தை மட்டும் பதத்திற்குப் பொருளாகக் கூறுவதானால் அது மூன்றாவதான ஜஹத் ஜஹத்லக்ஷணை எனப்படும். வாச்யார்த்தத்தில் ஒரு பாகத்தைவிட்டு ஒரு பாகத்தை எடுத்துக்கொள்வதால் இதற்கு பாகலக்ஷணை என்றும் பெயர் உண்டு.)

ஸோ(அ)யம் விப்ர இத3ம் வாக்யம் போ34யத்யாதி3தஸ்ததா2 |

தத்காலத்வ விசிஷ்டம் ச ததை2தத் கால ஸம்யுதம் ||                         38

 அதஸ்தயோர் விருத்34ம் தத் தத்காலத்வாதி3தர்மகம் |

த்யக்த்வா வாக்யம் யதா. விப்ரபிண்டம் போதயதீரிதம் ||                      39

ததை2வ ப்ரக்ருதே தத்த்வமஸித்யத்ர ச்ருதௌ ச்ருணு |                      39

    "அவன் (தான்) இந்த ப்ராஹ்மணன்,'' என்ற இந்த வாக்கியம் முதலில் அப்படியே அந்த காலத்துடன் கூடின வரும், அவ்விதமே இந்தக் காலத்துடன் கூடினவருமான பிராமணனை அறிவிக்கிறது. ஆகையால் அவைகளில் விருத்தமான அந்த அந்தக்காலம் முதலான தர்மத்தை விட்டு விட்டு வாக்யமானது எப்படி பிராமணவ்யக்தியை அறிவிக்கிறது (என்று) சொல்லப்பட்டுள்ள தோ அவ்விதமே ப்ரக்ருதமான தத்வமஸி என்ற இந்த வேத வாக்யத்தில் கேள். (காசியில் ஒருவன் ஒரு பிராமணரைக் கண்டான். பிற்பாடு அதே பிராமணரை ராமேசுவரத்தில் கண்டான். ஞாபகம் வந்துவிடுகிறது. "ஸோயம் விப்ர:' ''அவன் தான் இந்த பிராமணன்'' என்று சொல்கிறான். காசியில் அன்று பார்த்தோமே அந்த பிராமணன் தான் இவன் என்பது இந்த வாக்யத்தின் பொருள். இந்த வாக்யத்தில் ஸ: "அவன்" என்ற பதத்திற்கு, அந்தக் காசி தேசம், அந்தக் காலம் இவைகளுடன் சேர்ந்த பிராமணன் என்று அர்த்தம். அயம் "இவன்'' என்ற பதத்திற்கு இந்த ராமேசுவர தேசம், இந்தக் காலம் இவைகளுடன் சேர்ந்த பிராமணன் என்று அர்த்தம். இரண்டும் ஒன்று என்பதை வாக்யம் காட்டுகிறது. இது விருத்தம். காசியும், ராமேசுவரமும், அந்தக் காலமும், இந்தக் காலமும் ஒன்றாக முடியாது. அதற்காக ஸ:, அயம் என்ற பதங்களின் வாச்யார்த்தத்தில் ஏகதேசமான காலதேசங்களை விட்டு, மற்றோர் பாகமான பிராமண வியக்தியைமட்டும் இருபதங்களும் லக்ஷணையால் கூறுவதாக ஒப்புக்கொண்டு இந்த வாக்யம் அபேதத்தை போதிக்கிறதாகச் சொல்கிறோம். இதுதான் பாகலக்ஷணை. இதேபோல் தத்தவமஸி மஹாவாக்யத்திலும் உபாதிகளை விட்டு விட்டுப் பார்த்தால்'தத்'' எனும் ஈச்வரன், "த்வம்'' எனும் பிரம்மம் இரண்டுக்கும் ஐக்யம் தான் அர்த்தம்.

ப்ரத்யக்த்வாதீ3ன் பரித்யஜ்ய ஜீவ த3ர்மாம்ஸ் - த்வம்: பதா3த் || 40

 ஸர்வஜ்ஞத்வபரோக்ஷாதீ3ன் பரித்யஜ்ய தத3: பதா3த் |

சுத்த4ம் கூடஸ்த2- மத்3வைதம் போ3த யத்யாத3ராத் பரம் ||                    41

 தத் - த்வமோ: பத3யோரைக்யமேவ தத் - த்வமஸீத் – யலம் |

  த்வம்'' பதத்திலிருந்து கிடைக்கும் அபரோக்ஷத்வம் முதலான ஜீவனுடைய தர்மங்களை விட்டு,'தத்'பதத்திலிருந்து கிடைக்கும் ஸர்வஞத்வம், பரோஷம் முதலான தர்மங்களை விட்டு, தத்த்வமஸி என்ற வாக்யம் தத் - த்வம் பதார்த்தங்களின் அபேதத்தைத் தான் (அதாவது) சுத்தமாயும், விகாரமற்றதாயும், இரண்டற்றதாயுமுள்ள பரப்ரஹ்மத்தை கவனமாக நன்கு அறியப்படுத்துகிறது.

   (தத்த்வமஸி மஹாவாக்யத்தில் த்வம் பதத்திற்கு அபரோக்ஷத்வம், பேதம் முதலிய தர்மங்களுடன் கூடிய சைதன்யம் வாச்யார்த்தம். இதில் முதலில் கூறப்பட்ட தர்மங்களை விட்டு விடவேண்டும். தத்பதத்திற்கு ஸர்வஞத்வம், பரோக்ஷத்வம் முதலிய தர்மங்களுடன் கூடிய சைதன்யம் வாச்யார்த்தம். இதிலும் முதலில் கூறப்பட்ட தர்மங்களை விட்டுவிட வேண்டும். இரண்டிலும் வாச்யார்த் தத்தில் மிஞ்சியுள்ளது சைதன்யம் தான். இந்த சைதன்யமே லக்ஷணையால் இரண்டு பதங்களுக்கும் பொருள் ஆகிறது. அதனால்'தத்'தும் தவம் மும ஒன்றுதான் என்பதை வாக்யம் காட்டுகிறது.

இத்த2மைக்யாவபோ3தேந4 ஸம்யக்2ஜ்ஞானம் த்3ருடம் நயை: ||                42

அஹம் ப்ரஹ்மேதி விஜ்ஞானம் யஸ்ய சோகம் தரத்யஸௌ |

      இவ்வாறு யுக்திகளால் (உண்டாகும்) அபேத ஞானத்தால், தத்வஞானம் உறுதியாகி எவனுக்கு'' நான் ப்ரஹ்மம்'' என்ற ஸாக்ஷாத்காரம் ஏற்படுகிறதோ அவன் பிறவித் துன்பத்தைத் தாண்டுகிறான்.

ஆத்மா ப்ரகாசமாநோ(அ)பி மஹாவாக்யைஸ் ததை2கதா ||                   43

 தத் - த்வமோர் – போ34த்யதே (அ) தாபி பௌர் வாபர்யானுஸாரத: |

ததாபி சக்யதே நைவ ஸ்ரீகுரோ : கருணாம் விநா II                            44

 அபரோக்ஷயிதும் லோகே மூடை4: பண்டி3தமாநிபி4: |

  ஆத்மா, (எப்போதும்) பிரகாசிப்பதாயிருந்த போதிலும், அப்படியே மஹா வாக்யங்களால் முன்னாலும், பின்னாலும் சொல்லியிருக்கும் விஷயத்தை அனுஸரித்து தத்பதார்த்தமான ஈசுவரனுக்கும், த்வம்பதார்த்தமான ஜீவனுக்கும் அபேதம் அறிவிக்கப்படுகிறதாயிருந்தபோதிலும், உலகில் பண்டிதர் என்ற கர்வம் கொண்ட மூடர்களால், ஸத்குருவின் கருணை இல்லாமல் நேரில் அறிந்துகொள்வதற்கு (ப்ரத்யக்ஷமாய் அநுபவிப்பதற்கு) முடியாது.

அந்த:கரண ஸம்சுத்தௌ ஸ்வயம் ஜ்ஞானம் ப்ரகாசதே ||                     45

வேத3வாக்யைரத: கிம் ஸ்யாத் கு3ருணேதி ந ஸாம்ப்ரதம்

     மனமானது பரிசுத்தமாக ஆனதும், உபநிஷத் வாக்யங்களால் ஞானமானது தானாகவே ப்ரகாசிக்கிறது. ஆகையால் குருவினால் என்ன பிரயோஜனம் ஏற்படும்? என்பது உசிதம் இல்லை.

 ஆசார்யவான் புருஷோ ஹி வேதே3த்யேவம் ச்ருதிர்ஜகெ3 ||                46

அநாதா3விஹ ஸம்ஸாரே போ34கோ கு3ருரேவ ஹி |

    ''ஆசார்யனுடன் கூடிய மனிதன் (தான்) (ஸத்யத்தை) அறிந்துகொள்கிறான்"

என்று இவ்விதமாக வேதம் சொல்லியுள்ளது அல்லவா! (ஆகையால்) ஆரம்பமில்லாத இந்த ஸம்ஸாரத்தில் ஞானத்தைத் தருபவர் குருநாதனே! அன்றோ?

  (சாந்தோக்ய உபநிஷத்தில் ஆறாவது அத்தியாயத்தில் (14 - 2) ச்வேதகேது வுக்கு ஆருணி 'தத்த்வமஸி' மஹாவாக்யத்தை உபதேசம் செய்யும் இடத்தில் 'ஆசார்யவான் புருஷோவேத' என்னும் வாக்யம் காணப்படுகிறது. ஆசார்யரோடு கூடிய, அதாவது ஆசார்யரிடமிருந்து உபதேசம் பெற்றவர்தான் ஆத்மாவை அறிகிறான், அவனுக்குத்தான் ஆத்ம ஸாக்ஷாத்காரம் ஏற்படும் என்பது இந்த வாக்யத்தின் கருத்து.)

அதோ ப்3ரஹ்மாத்ம வஸ்த்வைக்ய ஜ்ஞாத்வா த்3ருச்யமஸத்தயா || 47

 அத்3வைதே ப்3ரஹ்மணி ஸ்தே2யம் ப்ரத்யக்2ப்ரஹ்மாத்மநா ஸதா |

   ஆகையால் ப்ரஹ்மம், ஆத்மா இந்த வஸ்துக்களின் அபேததுதை (குருவின் உபதேசத்தால்) அறிந்து, காணப்படுப் பிரபஞ்சத்தைப் பொய்யான தாக அறிந்து, எப்பொழுதும் உள் பொருளான ப்ரஹ்மஸ்வ ரூபமாக அத்வைத ப்ரஹ்மத்தில் நிலைத்திருக்கவேண்டும்.

      ஞான அடர்த்தியான அந்த இரண்டற்ற ப்ரஹ்மம் பிரத்யக்ஷ மாக அறியப் பட்டதாக ஆகிறது. அதுதான் இங்கு உபநிஷத்துக்களால் கருத்துடன் விளக்கத்தக்கது. ஜடமான த்வைதம் இல்லை. (த்வைதம் என்பது பலவான அழியும் பிரபஞ்சத்தைக் குறிக்கும்.)

ஸுக2ரூபம் சித3த்4வைதம் து3: கரூபமஸத் ஜட3ம் ||                            49

வேதா3ந்தைஸ் தத்3 – த்3வயம் ஸம்யக் நிர்ணீதம் வஸ்துதோ நயாத் |

  ஒன்றான சைதன்யம் ஆனந்த ரூபம். பொய்யான ஜடப்பொருள் துக்க ரூபம். அவ்விரண்டும் யுக்தியினால், வஸ்து ஸ்வபாவத்தால், உபநிஷத்துக்களால் நன்றாக தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது.

அத்3வைதமேவ ஸத்யம் த்வம் வித்3தி4 த்3வைதமஸத் ஸதா3 ||               50

சுத்3தே4 கத2மசுத்34 ஸ்யாத் த்3ருச்யம் மாயா மயம் தத: |

    அத்வைதத்தையே உண்மையாகவும், த்வைதத்தை பொய்யாகவும் எப்பொழுதும் நீ அறிந்துகொள். சுத்தமான வஸ்துவில் அசுத்தமான பதார்த்தம். எப்படி இருக்கும்? ஆகையால், காணப்படும் பிரபஞ்சம் மாயையால் ஏற்பட்டது (பொய்யானது).

சுக்தெள ரூப்யம் ம்ருஷா யத்3வத் ததா2 விச்வம் பராத்மனி ||                 51

வித்3யதே ஸ்வத: ஸத்வம் நாந்யத: ஸத்வமஸ்தி ஹி |

  எப்படி கிளிஞ்சலில் வெள்ளி பொய்யாக உள்ள தோ, அப்படிப் பிரபஞ்சம் ப்ரஹ்மத்தில் (பொய்யாக) இருக்கிறது. (அதற்கு) உண்மை தானாகவும் இல்லை; மற்றவை மூலமாகவும் உண்மை கிடையாதல்லவா.

 (வெயிலில் மினுமினுக்கும் கிளிஞ்சலைப் பார்த்து. ப்ராந்தியால் வெள்ளி என நினைக்கிறான். அவன் கண்ணுக்கு கிளிஞ்சல் தெரிவதில்லை. வெள்ளி தெரிகிறது. இந்த வெள்ளி உண்மையல்ல. பொய்யானது. இதற்குத் தானாகவும் ஸத்வம் கிடையாது. காரணத்திலுள்ள தர்மங்களை கார்யத்தில் காண்பது போல் வேறொன்றின் மூலமாகவும் இதற்கு ஸத்வம் சொல்லமுடியாது.)

பா3த்4யத்வாத் நைவ ஸத்3- த்3வைதம் நாஸத் ப்ரத்யக்ஷபா4நத: ||             52

ஸத3ஸத் ந விருத்34த்வாத் அதோ(அ)நிர்வாச்யமேவ தத் |

 வேற்றுமை கொண்ட பிரபஞ்சம் மறைந்து போவதால், ஸத்தான (உண்மையான) பொருள் அல்ல. நேரில் தோன்றுவதால், இல்லாத பொருளும் அல்ல. ஒன்றுக்கொன்று விருத்தமாயிருப்பதால், ஸத்தாயும், அஸத்தாயும் உள்ள பொருளும் அல்ல. ஆகையால் அது இன்ன விதம் என்று சொல்ல முடியாததுதான்.

 (கிளிஞ்சலில் தோன்றும் வெள்ளியைக் கடையில் உள்ள வெள்ளியைப்போல் ஸத்வஸ்து (உண்மைப் பொருள்) எனக் கூறமுடியாது. ஏனெனில், 'இது கிளிஞ்சல்' என்ற உண்மை அறிவு ஏற்பட்டவுடன், இந்த வெள்ளி மறைந்து விடுகிறது. உண்மைப் பொருளாயிருந்தால், ஞானத்தால் மறைந்து போகாது. ஆயினும் இதை அஸத் (இல்லவே இல்லை) என்றும் கூறமுடியாது. ஏனெனில் நேரில் அதை (மினுமினுப்பைப்) பார்க்கிறோம். இல்லாததை எப்படிப் பார்க்க முடியும்? ஸதஸத் (இருப்பும் இல்லாமையும் கலந்தது) என்றும் கூறமுடியாது. ஏனெனில், இரண்டும் ஒன்றுக்கொன்று விருத்தமானது. ஸத்தாயிருந்தால் அஸத்தாக இருக்காது. அஸத்தாயிருந்தால் ஸத்தாக இருக்காது. ஆகவே அது அநிர் வாச்யம் அல்லது அநிர் வசநீயம், அதாவது இன்னவிதம் என்று கூற முடியாத பொருள் எனப்படுகிறது. இதேபோல பிரபஞ்சமும் ப்ரஹ்மஞானத்தால் மறைந்து போவதாலும், நேரில் தோன்றுவதாலும் ஸத்தாகாவா, அஸத்தாகவோ கூறமுடியாமலிருப்பதால் அநிர்வசனீயம்)

ய: பூர்வமேக ஏவாஸீத் ஸ்ருஷ்ட்வா பச்சாதி33ம் ஜக3த் ||

ப்ரவிஷ்டோ ஜீவரூபேண ஸ ஏவாத்மா ப4வான் பர: |                          53

  எது ஸ்ருஷ்டிக்கு முன்னால் ஒன்றாகவே இருந்ததோ, பின்னால் இந்த பிரபஞ்சத்தை ஸ்ருஷ்டி செய்து, ஜீவஸ்வ ரூபமாக (சரீரத்திற்குள்) நுழைந்திருக்கிறதோ அந்த பரமாத்மாதான் நீ.

ஸச்சிதா3னந்த3 ஏவ த்வம் விஸம்ருத்யாத்மதயா பரம் ||                      54

 ஜீவபா4வமனுப்ராப்த: ஸ ஏவாத்மாஸி போ34த: |

அத்3வயாநநந்த3 சின்மாத்ர: சுத்த: ஸாம்ராஜ்யமாக3த: ||                       55

  நீ ஸச்சிதானந்தமான பரப்ரஹ்மம்தான். உன் ஆத்மாவாக இருக்கும் பரப்ரஹ்மத்தை மறந்து ஜீவத்தன்மையை அடைந்துவிட்டாய். (இப்பொழுது) ஞானத்தால் இரண்டற்றதும், ஆனந்தத்தையும், ஞானத்தையுமே ஸ்வ ரூபமாகக் கொண்டதும், பரிசுத்தமானதுமான அந்தப் பரமாத்மாவாகவே இருக்கிறாய். (மோக்ஷ) ஸாம்ராஜ்யத்தை அடைந்து விட்டாய்.

கர்த்ருத்வாதீ3னி யாந்யாஸம் - ஸ் - த்வயி ப்3ரஹ்மாத்3வயே பரோ |

தாநீதாநீம் விசார்யந்தே கிம்ஸ்வரூபாணி வஸ்துத: ||                         56

 இரண்டற்ற ப்ரஹ்மமாயும், எல்லாவற்றிற்கும் மேம்பட்டவனாயும் உள்ள உன்னிடத்தில், கர்த்ருத்வம் முதலிய எந்த தர்மங்கள் இருந்தனவோ, அவைகள் உண்மையில் எத்தகைய ஸ்வரூபமுள்ளவை என்று இப்பொழுது விசாரிக்கப் படுகின்றன.

அத்ரைவ ச்ருணு வ்ருத்தாந்த மபூர்வம் ச்ருதிபா4ஷிதம் |

     இவ்விஷயத்திலே உபநிஷத்தில் கூறப்பட்ட அபூர்வமான கதையைக் கேள்.

      (இந்த விஷயத்தில் சாந்தோக்ய உபநிஷத்தில் ஆறாவது அத்யாயத்தில் ஆருணி ச்வேதகேதுவுக்கு தத்வமஸி மஹாவாக்யத்தை உபதேசிக்கும் பொழுது சொன்ன கதையைச் சொல்கிறேன் கேள்.)

கச்சித் கா3ந்தா4ர தே3சீயோ மஹாரத்ந விபூ4ஷித: ||                            57

ஸ்வக்3ருஹே ஸ்வாங்கணே ஸுப்த: ப்ரமத்த: ஸன் கதா4சநா |

  ஒருசமயம், காந்தார தேசத்தில் வசிக்கும் ஒருவன் சிறந்த ரத்னங்களால் அலங்கரிக்கப்பட்டவனாக தன் வீட்டில், தன் அறையில் கவனக்குறைவுள்ளவனாகத் தூங்கினான்.

ராத்ரௌ சோரை: ஸமாக3த்ய பூ4ஷணானாம் ப்ரலோபி4தை: ||                58

 3த்3த்4வா தே3சாந்தரம் சோரைர் நீத: ஸன் க3ஹனே வநே |

பூ4ஷணாந்யபஹ்ருத்யாபி ப3த்3தா4க்ஷகர பாதக: ||                              59

 நிக்ஷிப்தோ விபிநே(அ)தீவ குச - கண்டக - வ்ருச்சிகை: |

வ்யாள - வ்யாக்ராதிபிச்சைவ ஸங்குலே தருஸங்கடே ||                     60

 இரவில் நகைகளில் பேராசைகொண்டு வந்த திருடர்களால், கட்டி வேறு தேசத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, உட்புக முடியாத காட்டில், நகைகள் திருடப்பட்டு, திருடர்களால் கண், கைகால்கள் கட்டப்பட்டவனாய் தர்ப்பை முள், தேள் இவற்றாலும், பாம்பு, புலி முதலியவைகளாலும் அடர்ந்து நிறைந்ததும் மரங்கள் நிறைந்ததுமான காட்டில் தள்ளப்பட்டான்.

வ்யாளாதி3 து3ஷ்ட ஸத்வேப்4யோ மஹாரண்யே ப4யாதுர: |

சிலா கண்டக த3ர்பா4த்3யைர் தே3ஹஸ்ய ப்ரதிகூலகை: ||                     61

 க்ரியமாணே விலுட2நே விசீர்ணாங்கோ3(அ)ஸமர்த2க: |

க்ஷத்-த்ருடா3தப-வாய்வக்3ந்யாதிபி4ஸ்தப்தோ(அ)திதாபகை: ||                  62

 3ந்த4 முக்தௌ ததா2 தே3ச-ப்ராப்தா-வேவ ஸுது3: க2தீ4: |

3த்3ருசே கஞ்சிதா3க்ரோசன் ஏகம் தத்ரைவ தஸ்தி2வான் ||                   63

  பெரிய காட்டில் பாம்பு முதலான துஷ்ட பிராணிகளிடமிருந்து பயத்தால் துன்பமடைந்தவனாய் புரளும் பொழுது, உடலுக்கும் தீங்கு விளைவிக்கின்ற கல், முள், தர்ப்பை முதலியவைகளால், சிதைந்த அவயவங்களை உடையவனாக, பலம் இல்லாதவனாய், மிகுந்த தாபத்தைக் கொடுக்கும் பசி, தாகம், வெயில், காற்று, நெருப்பு முதலியவைகளால் துன்பம் அடைந்தவனாய், மிகுந்த துக்கம் அடைந்தவனாக, கட்டிலிலிருந்து விடுபடவும், அவ்விதமே தன் தேசத்தை அடைவதற்காகவும் யாராவது ஒருவரைக் குறித்துக் கத்திக்கொண்டு அங்கேயே கிடந்தவனாகக் காணப்பட்டான்.

ததா2 ராகா3தி3பி4ர் வர்கை3: சத்ருபி4ர் து3:கதா3யிபி4: |

சோரைர் தே3ஹாபிமாநாத்3யை: ஸ்வானந்த3 4நஹாரிபி: ||                  64

 ப்3ரஹ்மானந்தே3 ப்ரமத்த: ஸ்வாஜ்ஞான நித்3ரா வசீக்ருத: |

3த்34ஸ்த்வம் ப3ந்த4னைர் போ43 த்ருஷ்ணா ஜ்வராதி3பி4ர்-த்ருட4ம் ||        65

  அவ்விதமே, ப்ரஹ்மானந்தத்தில் கவனக் குறைவுள்ளவனாகவும், தன் அக்ஞானம் என்னும் நித்ரைக்கு வசமாக்கப்பட்டவனாகவும் உள்ள நீ, துன்பத்தைத் தருகின்ற ஆசை முதலிய எதிரிக்கூட்டங்களாலும், தன் ஆனந்தம் என்னும் பணத்தைப் பறிக்கின்ற தேஹத்தில், அபிமானம் முதலிய திருடர்களாலும், போகங்களில் ஆசை, தாபம் முதலிய கட்டுகளால் உறுதியாகக் கட்டப் பட்டிருக்கிறாய்.

அத்3வயாநந்த3ரூபாத் த்வாம் ப்ரச்யாவ்யாதீவ தூ4ர்தகை: |

தூ3ர நீதோ(அ)ஸி தே3ஹேஷு ஸம்ஸாராரண்ய பூ4மிஷூ ||                   66

  வஞ்சகர்களால் (காமன் முதலியவர்களால்). பேதமில்லாத ஆனந்த ஸ்வரூபத்திலிருந்து உன்னை நழுவும்படி செய்து, ஸம்ஸாரம் என்ற காட்டுப் பிரதேசங்களில் சரீரங்களில் வெகுதூரம் எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறாய்.

ஸர்வது3: 2நிதா3நேஷ சரீராதி3 த்ரயேஷு ச |

நாநா யோநிஷு கர்மாந்த4வாஸநா நிர்மிதாஸு ச ||                          67

 ப்ரவேசிதோ(அ)ஸி ஸ்ருஷ்டோ(அ)ஸி ப3த்34 ஸ்வாநந்த3 த்3ருஷ்டித: |

   எல்லாத் துன்பங்களுக்கும் மூலகாரணமான (ஸ்தூலம், ஸூக்ஷ்மம், காரணம் என்ற) மூன்று சரீரங்களிலும் கர்மாக்களைச் செய்வதால் ஏற்பட்ட ஸூக்ஷ்மமான ஸம்ஸ்காரம் என்னும் வாஸனையால் உண்டுபண்ணப்பட்டு பலவிதப் பிறவிகளில் நுழையும்படியும் செய்யப்பட்டிருக்கிறாய். தன் ஸ்வரூபமான ஆத்மானந்த த்ருஷ்டி மறைக்கப்பட்டு விட்டதால் ஸ்ருஷ்டிக்கப்பட்டவனாக இருக்கிறாய்.

அநாதி3 காலமாரப்4ய து3:க2ம் சானுப4வன் ஸதா3 ||                            68

 ஜந்ம - ம்ருத்யு - ஜரா தோ3ஷ நரகாதி3 பரம்பராம் |

நிரந்தரம் விஷண்ணோ(அ)நுப4வன் - னத்யத்த - சோகவான் ||                69

 அநாதிகாலமாக எப்பொழுதும் துன்பத்தை அனுபவித்துக்கொண்டும், பிறவி, மரணம், மூப்பு, ராகத்வேஷாதி தோஷங்கள், நரகம் முதலியவைகளின் பரம்பரையை அனுபவித்துக்கொண்டும், மிகுந்த சோகத்துடன் கூடியவனாக இடைவிடாமல் வருந்திய வனாக இருக்கிறாய்.

அவித்3யாபூ4த ப3ந்த4ஸ்ய நிவ்ருத்தெள து3:க23ஸ்ய ச |

ஸ்வரூபானந்த3ஸம்ப்ராப்தௌ ஸத்யோபாயம் ந லப்34வான் ||              70

   துன்பத்தைத் தருகின்ற அக்ஞானத்தால் ஏற்பட்ட கட்டு விலகவும், தன் ஸ்வ ரூபமான ஆனந்தத்தை அடையவும் உண்மையான உபாயத்தை (இப்படிப் பட்டவன்) அடையவில்லை.

யதா2 கா3ந்தா4ர தேசீய: சிரம் தை3வாத்3 – த்3யாளுபி4: |

கைச்சித் பாந்தை2: பரிப்ராப்தை: முக்த த்3ருஷ்ட்யாதி33ந்த4ன: ||             71

 ஸ ஸ்வஸ்தை2ருபதி3ஷ்டச்ச பண்டி3தோ நிச்சிதாத்மக: |

க்3ராமாத்3 – க்ரா3மாந்தரம் கச்ச2ன் மேதா4வீ மார்க3 - தத்பர: ||                 72

 3த்வா கா3ந்தா4ரதேசம் ஸ ஸ்வக்3ருஹம் ப்ராப்ய பூர்வவத் |

பா3ந்த4வை: ஸம்பரிஷ்வக்த: ஸுகீ2 பூத்4வா ஸ்தி2தோ(அ)பதிவத் ||            73

  காந்தாரதேச நபர் வெகுநேரம் சென்ற பிறகு அதிருஷ்டவசமாக அங்கு வந்த இரக்கமுள்ள சில வழிப்போக்கர்களால், கண் முதலியவைகளின் கட்டு அவிழ்க்கப்பட்டவனாய், ஸ்வஸ்தர்களான அவர்களால் மார்க்கம் உபதேசிக்கப் பட்டவனாக, புத்திமானாகவும், உறுதியான மன முள்ளவனாகவும், மேதையுடன் கூடினவனாகவும், வழியிலேயே மனத்தைச் செலுத்தியவனாயும் இருந்து, ஒவ்வொரு கிராமமாகச் செல்கின்றவனாய் அவன் காந்தார தேசம் சென்று தன் வீட்டை அடைந்து, உறவினர்களால் தழுவிக்கொள்ளப்பட்டவனாய், ஸுகமுள்ளவனாக ஆகி முன் போல் நிலைபெற்றிருந்தான். (இது) எவ்வாறோ,

த்வமப்யேவ – மநேகேஷு து3:2தா3யிஷு ஜந்மஸு |

ப்4ராந்தோ தை3வாத் சுபே4 மார்கே3 ஜாதச்ரத்34: ஸுகர்மக்ருத் ||              74

 வர்ணாச்ரமாசாரபரோ(அ)வாப்த - புண்ய மஹோத3ய: |

ஈச்வராநுக்3ரஹாத் லப்34 ப்3ரஹ்மவித் கு3ரு ஸத்தம: ||                       75

 விதி4வத் க்ருத ஸந்யாஸோ விவேகாதி3யுத: ஸுதீ4: |

ப்ராப்த ப்ரஹ்மோபதே3சோ(அ)த்ய வைராக்3யாப்4யாஸத: பரம் ||              76

 பண்டி3தஸ் தத்ர மேதா4வீ யுக்த்யா வஸ்து விசாரயன் |

நிதித்4யாஸன ஸம்பந்: ப்ராப்தோ ஹி த்வம் பரம் பத3ம் ||                   77

   அவ்வாறே நீயும் துன்பங்களைத் தருகின்ற பல பிறவிகளில் உழன்று, அதிருஷ்டவசமாக நல்வழியில் நம்பிக்கை ஏற்பட்டவனாய் நல்லகாரியங்களைச் செய்துகொண்டு, தன் வர்ணத்திற்கும், ஆச்ரமத்திற்கும் ஏற்பட்ட ஆசாரங்களிலேயே ஈடுபட்டவனாய், புண்யங்களால் மிகுந்த சிறப்பைப்பெற்று, ஈசுவரனுடைய அருளால் ப்ரஹ்மத்தை அறிந்த குரு சிரேஷ்டரை அடைந்து, சாஸ்திர முறைப்படி ஸந்யாஸம் செய்துகொண்டு, விவேகம் முதலியவைகளுடன் கூடியவனாகவும், சிறந்த புத்தியுள்ளவனாகவும், நிறைந்த வைராக்யத்தாலும் அப்யாஸத்தாலும், இப்பொழுது ப்ரஹ்மம்பற்றி உபதேசம் பெற்று அதில் பண்டிதனாகவும், மேதாவியாகவும், யுக்தியால் வஸ்துவை விசாரித்துக்கொண்டு, த்யானத்துடன் கூடினவனாய் நீ மேலான நிலையை அடைந்து விட்டாய் அல்லவா?

அதோ ப்3ரஹ்மாத்ம விஜ்ஞானமுபதி3ஷ்டம் யதா3விதி4 |

மயா(ஆ)சார்யேண தே தீர4 ஸம்யக் தத்ர ப்ரயத்னவான் ||                     78

 பூ4த்வா விமுக்தப3நத4ஸ் - த்வம் சின்ன – த்3வைதாத்மஸம்சய: |

நிர்த்3வந்த்3வோ நிஸ்ப்ருஹோ பூ4த்வா விசரஸ்வ யதா2ஸுகம் ||             79

  ஆகையால் தீரனே! ஆசார்யனான என்னால் உனக்கு ப்ரஹ்மஸ்வரூபமான ஆத்மாவின் ஞானம் முறைப்படி உபதேசிக்கப்பட்டிருக்கிறது. அதில் நன்கு முயற்சியுடன் கூடியவனாக இருந்து நீ பந்தத்திலிருந்து விடுபட்டு, த்வைத ப்ரபஞ்சத்திலும் ஆத்மாவிலும் உள்ள ஸம்சயங்கள் எல்லாம் நீங்கியவனாகவும், த்வந்த்வங்கள் அற்றவனாகவும், ஆசையற்றவனாகவும் ஆகி ஸுகமாக ஸஞ்சாரம் செய்வாயாக.

வஸ்துதோ நிஷ்ப்ரபஞ்சோ(அ)ஸி நித்யமுக்த: ஸ்வபா4வத: |

ந தே ப3ந்த4விமோக்ஷெள ஸ்த: கல்பிதௌ தௌ யதஸ்த்வயி ||              80

  உண்மையில். இயற்கையாகவே பிரபஞ்ச ஸம்பந்தமற்றவனாகவும், எப்பொழுதும் விடுபட்டவனாகவும் நீ இருக்கிறாய். உனக்கு பந்தமும் இல்லை, மோக்ஷமும் இல்லை. ஏனெனில் உன்னிடத்தில் அவைகள் ஆரோபம் செய்யப் பட்டவைகளே (கல்பிதமாகச் சுமத்தப்பட்டவையே).

 ந நிரோதோ4 ந சோத்பத்திர் ந ப3த்தோ4 ந ச ஸாத4க: |

ந முமுக்ஷர் ந வை முக்த இத்யேஷா பரமார்த2தா ||                          81

 "ப்ரளயம் இல்லை. சிருஷ்டியும் இல்லை. கட்டுப்பட்டவன் இல்லை. ஸாதனங்களை அனுஷ்டிக்கிறவனும் இல்லை. விடுதலை அடைய விரும்புகிறவன் இல்லை. விடுபட்டவனும் இல்லை.'' என்ற இது தான் உயர்ந்த உண்மை நிலை. (இது ஆசாரியாளின் பரமகுரு வான் ஸ்ரீ கௌடபாதரின் ''மாண்டூக்யகாரிகை"யில்.)

ச்ருதி ஸித்3தா4ந்த ஸாரோ(அ)யம் ததைவ த்வம் ஸ்வயா தி4யா |

ஸம்விசார்ய நிதி3த்4யாஸ்ய நிஜாநந்தா2த்மகம் பரம் ||                        82

 ஸாக்ஷாத் - க்ருத்வா(அ)பரிச்சிந்நாத்3வைத – ப்3ரஹ்மாக்ஷரம் ஸ்வயம்

ஜீவந்நேவ விநிர்முக்தோ விச்ராந்த: சாந்திமாச்ரய ||                          83

 இது உபநிஷத் ஸித்தாந்தத்தின் ஸாரம். அவ்விதமே நீ தன் புத்தியால் நன்கு விசாரித்து (மனனம் செய்து), ஆழ்ந்த த்யானம் செய்து, தனது ஸ்வபாவ ஆனந்தஸ்வ ரூபமாயும், மேலானதும், எல்லையற்றதும் இரண்டற்றதும் அழிவற்றதுமான ப்ரஹ்ம ஸ்வ ரூபத்தைத் தானாகவே ப்ரத்யக்ஷமாக அறிந்து, உயிர்வாழும் பொழுதே பந்தம் விலகியவனாய், துன்பம் அற்றவனாய், அமைதியை அடைவாயாக.

விசாரணீயா வேதா3ந்தா: வந்த3நீயோ கு3ரு: ஸதா3

கு3ரூணாம் வசனம் பத்2யம் த3ர்சனம் ஸேவநம் ந்ருணாம் ||                  84

 உபநிஷத்துக்கள் விசாரிக்கத் தக்கவை. எப்பொழுதும் ஆசார்யர் வணங்கத்தக்கவர். ஆசார்யர்களுடைய உபதேசமும், தர்சனமும், ஸேவையும் மனிதர்களுக்கு மிகவும் நலன் தரவல்லது.

 கு3ரூர் ப்3ரஹ்ம ஸ்வயம் ஸாக்ஷாத் ஸேவ்யோ வந்த3யோ முமுக்ஷபி4: |

நோத்3வேஜநீய ஏவாயம் க்ருதஜ்ஞேந விவேகிநா ||                           85

   தானே நேராக ப்ரஹ்ம ஸ்வரூபமாக உள்ள குருவானவர் மோக்ஷம் அடைய ஆசையுள்ளவர்களால் ஸேவிக்கத்தக்கவர், வணங்கத்தக்கவர். நன்றியறிவுள்ள விவேகமுள்ள சிஷ்யனால் இவர் தாபம் அடையும்படி செய்யத்தக்கவரேயல்ல.

யாவதா3யுஸ் தவயா வந்த3யோ வேதா3ந்தோ கு3ருரீச்வர: |

மநஸா கர்மணா வாசா ச்ருதிரேவைஷ நிச்சய: ||                             86

  உன்னால் ஆயுள் உள்ளவரை மனத்தினாலும், செய்கையாலும், வாக்காலும் உபநிஷத்தும், ஆசாரியரும், ஈசுவரனும் வணங்கத்தக்கவர்கள். இந்தத் தீர்மானம் வேதக் கருத்தேயாம்.

பா4வாத்3வைதம் ஸதா3 குர்யாத் க்ரியாத்3வைதம் ந கர்ஹிசித் |

அத்3வைதம் த்ரிஷுலோகேஷு நாத்3வைதம் கு3ருணா ஸஹ ||               87

    மனோபாவனையில் அத்வைதத்தை எப்பொழுதம் செய்யலாம். ஒரு இடத்திலும் கார்யம் செய்கையில் அத்வைதம் கூடாது. மூவுலகங்களிலும் அத்வைத பாவனை செய்யலாம். ஆசார்யனிடத்தில் (மட்டும்) அத்வைத பாவனை செய்யக்கூடாது.

 உலக வியவஹாரங்களில் ஈடுபட்டு காரியங்களைச் செய்யும் பொழுது வேற்றுமைகளை மதித்துத்தான் நடக்கவேண்டும். இங்கு அத்வைதத்தைக் காட்டினால் காரியங்களே நடைபெறாது. விபரீத விளைவுகளும் ஏற்படும். ஆகையால் மனோபாவத்தில் அத்வைதமே தவிர, க்ரியையில் அத்வைதம் கிடையாது. பாவ அத்வைதத்தையும் குருவினிடம் காட்டக்கூடாது. மூவுலகிலம் உள்ள எல்லாப் பொருள்களையம் தானேயாக மனத்தில் பாவனை செய்யலாம். இது போல் குருவும் தானும் ஒன்றுதான் என்ற எண்ணம் கொள்ளவே கூடாது. ஜீவன் முக்தனும் கூடத் தன் குருவைப் பூஜ்யராகவே நினைக்க வேண்டும்.)


 

 

No comments:

Post a Comment