Thursday, November 5, 2020

 

ஆதி சங்கரர்

ராஷ்டிரபதி டாக்டர் ராதாகிருஷ்ணன்

       நம்முடைய சமய மரபு குறைந்தபட்சம் மூவாயிரம் அல்லது நாலாயிரம் ஆண்டுச் சரிதம் கொண்டது. இந்தச் சரித்திர காலத்தில் எவ்வெப்போது நெருக்கடிகள் தோன்றினாலும், அவ்வப்போது நம் மரபை விளக்கி வைக்க மகான்கள் தோன்றி, மதத்துக்குப் புது வாழ்வளித்திருக்கிறார்கள்.

     இந்த மகான்களில் ஒருவர் ஸ்ரீமத் ஆதி சங்கராசாரியரவர்கள். இந்தியாவின் பண்பாட்டு வரலாறு பெற்றெடுத்த அமரப் புதல்வர்களில் ஒருவர் அவர். பிரத்தியட்சமான அனுபவத்தை ஆதாரமாகக் கொண்ட அவரது உபதேசம் உலகம் முழுவதையும் தழுவுவதாகும். ஆனால் இந்நாட்டின் மற்ற பல சமயாசாரியர் போலவே அவரும் தமது உபதேசங்களுக்கெல்லாம் தாமே மூலகர்த்தா என்று கூறிக் கொள்ளவில்லை. முன்னமே உள்ள நம் நாட்டின் மகத்தான ஆத்மிக சம்பிரதாயத்தைக் காலத்தின் நிலைக்கேற்ப மீண்டும் விளக்கிவைத்தவர் என்ற முறையில், வியாக்கியான கர்த்தராகவே அவர் தனிச் சிறப்புப் பெறுகிறார். உபநிஷதங்களும், பகவத் கீதையும், மற்ற பல புராதன சமய நூல்களும் உபதேசித்த போதனையை அவர் தம் காலத்திலிருந்த பண்பட்ட மனத்தினருக்கு ஏற்கும் விதத்தில் புதிதாக விளக்கி வைத்தார். அவருடைய புது வியாக்கியானங்களே புதிய மூல சிருஷ்டிகள்போல் வடிவெடுத்துப் பொலிந்தன. இன்றும் அவை நம்மை ஆகர்ஷிக்கின்றன.

   சங்கரருடைய கிரந்தங்களில் மகோன்னதமான அறிவுத் திறனையும், அப்பழுக்கற்ற வாத சாதுரியத்தையும், பொங்கும் உணர்ச்சியையும் காண்கிறோம். மனித வாழ்வின் சகல அம்சங்களும் தம்மிடம் திகழ்ந்த ஒரு பூரண மனிதர் ஆதி சங்கரர். அவரிடம் திகழ்ந்த மரபோ அவருக்கும் எத்துணையோ காலம் முந்தியது.

    மதம் என்பது அனுபவித்துப் பார்த்து நிரூபணமாகவேண்டிய விஷயம்.

     ஸதா பச்யந்தி ஸூரய: தத் விஷ்ணோ: பரமம் பதம் திவீவ சக்ஷுராத்தம் |

 என்று ரிக் வேதம் மொழிகிறது. 'பச்யந்தி' ('பார்க்கிறார்கள்') - என்கிற பதம் பிரயோகிக்கப்பட்டுள்ளது. பௌதிகக் கண் எவ்வாறு வானத்தில் தோன்றும் வண்ணக் கலவைகளைக் காண்கிறதோ அப்படியே ஆத்மாவின் கண் தெய்வத்தின் இருப்பிடத்தைக் காண்கிறது. பகவத் கீதையிலும் இது சுட்டப்படுகிறது. 'பிரம்ம ஸம்ஸ்பர்சம்' - பிரம்மத்தைத் தீண்டுவது பற்றி கீதை கூறுகிறது. சத்தியப் பொருளை நாம் நேரில் அநுபவிக்க வேண்டும்.

    அநுபவ அவஸானமேவ வித்யா பலம்

     - 'கல்வியின் நிறைவான பலன் அநுபவம் பெறுவதே' என்கிறார் ஸ்ரீ சங்கரர்.

    கோட்பாடுகளை விடாப்பிடியாகப் பிடித்துக் கொள்வது மதமாகாது. சடங்குகளில் அநுஷ்டிக்கும் ஆசாரங்கள் மதமாகாது. நமக்காக விதிக்கப்பட்டுள்ள சடங்குகளைச் செய்வது மட்டும் மதமாகாது. நம்முடைய உள் தன்மையையே புதிதாகச் சிருஷ்டித்துக் கொள்வதுதான் மதம். நம் இயல்பையே உன்னதமாக உருமாற்றிக் கொள்வது தான் மதம். அவ்விதமான அநுபவம் ஏற்படும் வரையில், ஒருவரைப் பூரணமான மத உணர்வு உள்ளவர் என்று சொல்வதற்கில்லை, உண்மையான மத உணர்வால் ஆத்மாநுபவம் பெற்ற மனிதர் பயத்திலிருந்து விடுபட்டிருப்பார். பகையிலிருந்து விடுபட்டிருப்பார்.

        அபயம்; அஹிம்ஸா

   அச்சமின்மை, வெறுப்பின்மை இவையே ஓர் உண்மையான சமயவாதியின் ஆன்ம லட்சணங்கள். நம்மில் பலர் மதாபிமான முள்ளவர்களாக நம்மைச் சொல்லிக் கொள்ளுகிறோம். மதத்தின் வெளி அங்கங்களான சிலவற்றைப் பின்பற்றுகிறோம். எனினும் மற்றவர்களிடமிருந்து உண்மையான மதாசாரமுள்ள உள்ளங்களைப் பிரித்துக் காட்டும் முறையில் உள்ளூற நடைபெறும் பரிணாமத்தை நம்மில் பலரிடையே காண முடியவில்லை.

    ஆத்மாவைக் குறித்த அந்த வேறு உலகில் பதத்தின் மூலம் பிரவேசிப்பதற்கே நாம் முயல வேண்டும். இப்போது மக்கள் அறிவின் மூலம் ஆத்மீகத்தை அறிய முயலும் நிலைக்கு வந்திருக்கிறார்கள். இது விஞ்ஞான நிலை எனலாம். இதனினும் உயர்ந்த ஒரு தன்னும் உயாந்த ஒரு நிலையை அவர்கள் அடைந்தாக வேண்டும். விஞ்ஞானத்தைக் கடந்து 'ஆனந்தம்' என்ற உயர் நிலையை எய்தவேண்டும். இதுவே ஆத்மிகத்தின் நிறைவு. விஞ்ஞானத்திலிருந்து ஆனந்தத்துக்குக் கடத்துவிக்கும் சாதனமே சமய ஒழுக்கம். குறைபாடு கொண்டதும், பூரணச் செம்மை பெறாததும், புதுப் பிறவி மலர்ச்சி பெறாததுமான இயல்பிலிருந்து எழும்பி ஓங்கி வளர்ந்து முழுமையைப் பெறவே சமய உணர்வுள்ள எவரும் முயல வேண்டும். நன்னெறி ஒழுக்கங்களை வாழ்வில் கடைப் பிடித்து, ஆத்மிக சாதனங்களை அநுஷ்டித்து 'நான் கடவுளைக் கண்டிருக்கிறேன்' என்று சொல்லக் கூடியவர்களால் தான் இந்த முழுமையை அனுபவிக்க முடியும்.

        வேதாஹம் ஏதம் புருஷம் மஹாந்தம்

       ஆதித்ய வர்ணம் தமஸ: பரஸ்தாத்

     ‘இருளுக்கு அப்பால் சூரியப் பிரகாசத்துடன் திகழும் மகாபுருஷனை நான் அறிவேன்' என்று ரிஷி கோஷித்தது போல் சொல்லக்கூடியவனே சமயத்தை உணர்பவன் அவன் 'கடவுள் இருக்கிறார்' என்று சொல்வதோடு மட்டுமில்லை; கடவுளைத் தன்னுடைய ஒவ்வொரு நாடியிலும் நுகர்பவன் அவன். தன்னுடைய சொந்த அனுபவத்தின் மீதே, ' நான் கடவுளைக் கண்டிருக்கிறேன்' என்று அவனால் சொல்ல முடியும். இந்த அனுபவத்தைத்தான் மதாபிமானிகள் யாவரும் இலக்காகக் கொள்ளவேண்டும். இத்தகைய அநுபவபூர்வமான ஆத்ம ஜீவனத்தை விளக்கி வைத்தவரே ஆதிசங்கரர்.

   அநுபவத்தின் முலம் பரம்பொருளை நுகர்ந்த பின் அந்த அனுபவத்தை வார்த்தைகளில், அறிவுக்கு ஏற்ற கோட்பாடுகளில் விளக்க வேண்டுமென முயற்சி தோன்றும். ஆனால் நமது ரிஷிகளோ இந்த அநுபவத்தை வார்த்தைகள் என்ற சங்கேதங்களாலோ, தர்க்க ரீதியான வியாக்கியானத்தாலோ வருணிக்க முடியாது என்கின்றனர்.

     யதோ வாசோ நிவர்தந்தே அப்ராப்ய மந ஸா ஸஹ

   வெற்று வார்த்தைகளால் மட்டும் அதை எட்டிப் பிடிக்க முடியாது. அப்படிப் பிடிக்க முயன்றால் பரம்பொருளின் அனந்த கல்யாண குணச் செல்வங்களையும், அளவற்ற மகிமைகளையும் விவரிக்க முடியாமல் குழம்ப வேண்டியதுதான். புத்தரும் இதைச் சொன்னார் :

     அநக்ஷரஸ்ய தர்மஸ்ய க்ரு திகா தேச நாசகா?

   ‘எழுத்தால் விளக்க வொண்ணாத விஷயத்தைச் சொல்லும் வேதம் ஏது? உபதேசம் ஏது?' என்றார். வார்த்தையில் வடிக்க வொண்ணாத சத்தியத்துக்குப் பிரமாண நாலுமில்லை; உபதேசமுமில்லை. ஒவ்வொரு மனிதனும் தானாகவே அதைக் கண்டு பிடித்துக் கொள்ள வேண்டியது தான். தன்னந் தனியாகத் தேடும் அவன் பரம் பொருளை அடையும்போது புத்தம்புதிய திரு முகத்துடன் தேஜோ மயமாய்த் திகழ்கிறான். அவன் ஆண்டவனைத் தன்னில் ஆவிர்ப் பாவம் செய்து கொண்டவனாகிறான்.

    ஈசுவர லக்ஷணம் என்ற இந்த விந்தைப் பெரும்பொருளை விளக்குவது கடினம்,

      அத்ருஷ்டம் அவ்யவஹார்யம் அக்ராஹ்யம்

       அலக்ஷணம் அசிந்த்யம் அவ்யதேச்யம்

       ஏகாத்ம ப்ரத்யயஸாரம் ப்ரபஞ்சோபசமம்

       சாந்தம் சிவம் அத்வைதம்

      மாண்டூக்ய உபநிஷதம் உரைக்கும் இவ்விதத்தில் தான் நாம் அதனைப் பற்றிப் பேசமுடியும்'. சாந்தம், சிவம், அத்வைதம்.

     ப்ரஹ்மேதி பரமாத்மேதி பகவானிதி சப்த்யதே |

 என்கிறது பாகவதம் (1-2-11). காலத்துக்கும் தேசத்துக்கும் அப்பாற்பட்ட உத்தம சத்தியமாய், தர்க்கத்தினால் வெளியிடவொண்ணாத வஸ்துவாய், தெய்வத்துக் கெல்லாம் மேலான தெய்வமாய் விளங்குவதே பிரம்மம் என்கிறது. இவ்வாறு எல்லாம் கடந்துள்ள அதனை யாரும் கிரகிக்க முடியாது என எண்ணிவிடலாகாது. அதுவே நமது உள்ளுக்குள் உள்ளே அடி ஆழத்தில் இருக்கிறது. நாம் ஆத்மா எனில் அது பரமாத்மாவாக நமக்கு அடி ஆழத்தில், நம்மின் அடி ஆழமாக இருக்கிறது. நம் அகவாழ்வின் இயல்பையும் உணர்வையும் ஆய்ந்து கொண்டே போகும் போது அதன் இறுதியில் பரம் பொருளின் சத்தியமான இருப்பை உணர்வோம். அதனாலேயே அவனைப் பரமாத்மா என்கிறோம். வெளிப் பிரபஞ்சத்தை நோக்கி, அந்த விசுவ வெளியில் நாம் ஒரு பாகம் என்ற பாவனையைக் கொள்ளும் போது, அதே பரம் பொருளை பகவான் - லோக நாயகன் என்கிறோம். அவனிடம் உறவு கொள்ள விழைகிறோம். கிருஷ்ணனை அர்ஜுனன் கண்டாற்போல் ஈசுவரனை நேருக்குநேர் கண்டு சம்பாஷித்து உறவு கொள்வது இந்நிலையின் இலட்சியம். யாவும் கடந்த பிரம்மம், நமக்குள்ளேயே உரையும் பரமாத்மா, உலக நாதனாகிய பகவான் என்ற மூன்றும் வர்ணிக்கவொண்ணாத ஒரே அற்புதமும் விந்தையுமான அந்தரங்க சுகாநுபூதிப் பொருளின் வேறு வேறு பெயர்கள் தாம். ஒரே வஸ்துவின் பல நிலைகள்தாம் அவை. நம் அகத்தை வைத்துப் பேசும்போது பரமாத்மன்; பிரபஞ்சத்தை வைத்து அதன் பிரபுவாகப் பார்க்கும் போது பகவான்; பரம தத்துவமாகப் பார்க்கும் போது பிரம்மம்.

    கீதா பாஷ்யத்தில் ஆசாரியர் கூறுவது போல பரம்பொருள் என்னும் பெரும் ஒளியின் தூதர்களாக உலகுக்குப் பல மகான்கள் வந்து ஞான ஒளி தந்திருக்கிறார்கள். எல்லா மதாசாரியர்களும், முனிவர்களும், அடியார்களும், பரஞ்சோதியின் தூதுவர் தாம் அவர்கள் இவ்வுலகில் பிறந்து தங்களுக்கென ஒரு காத்திரத்தைத் தரித்துக் கொள்வது நமக்கு ஞான ஒளி தருவதற்காகத்தான்; நாம் பரமனை நாடிச் செல்லுமாறு ஊக்கத் தான். நம் கண்ணால் தாங்கவொண்ணாத பரஞ்சோதியின் சின்னமாகவே ஆசாரிய புருஷர்களும், அடியார்களும் நாம் கண்ணால் காணக் கூடியவர்களாக வருகிறார்கள் என லாம். அவர்கள் பற்பல வழிகளைக் காட்டிக் கொண்டு நம்மை ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு இட்டுச் செல்வதற்காக வருகிறார்கள். பிரம்மம், பகவான், பரமாத்மா என்றெல்லாம் பல படித்ததாகத் தோன்றும் மெய்ப்பொருளே, பரஞ்சோதியைக் கொண்டு வந்து பரப்பும் ஆசாரியர்களாகவும் அவதாரங்களாகவும் தோன்றுகிறது.

   ஸ்ரீ சங்கரர் போதித்த தத்துவத்தை எண்ணும் போது, நாம் காண்கிற உலகைப் பற்றிய அவரது கருத்தையே முக்கியமாக நினைக்கத் தோன்றுகிறது. உலகத்தை அவர் இறுதி சத்தியமாக எண்ணவில்லை; இரண்டாம் பட்சமான ஒன்றாகவே - வேறு ஏதோ ஒன்றுக்கு உட்பட்டதாகவே - கருதினார். அப்படியெனில் முதல் பட்சமாக அவர் கருதியது எதனை? பரம்பொருளே உத்தம சத்தியம் என அவர் கூறுகிறார். அதற்கு உட்பட்ட இரண்டாம் பட்ச உண்மை நிலையே உலகத்துடையது என்கிறார். உலகும் ஒரு நிலையில் உண்மையாயிருக்கிறது. ஆனால் இது உயர் நிலை அல்ல; தாழ்நிலையில் மட்டுமே உலகம் உண்மை. 'வியாவஹாரிக சத்தியமே உலகம்; பாரமார்த்திக சத்தியமல்ல' என்று இதனைச் சங்கரர் சொல்லுகிறார். ஆனால் உலகம் என்பது எந்த ஒரு தனி மனிதனுடைய கனவும் அல்ல.

    அவரது பிரம்ம ஸூத்திர பாஷ்யத்தில் இந்த மகத்தான வாசகங்கள் உள்ளன:

    ஏவமேவமய மநாதிரனந் தோநைஸர்கிகோ(அ)த்யாஸோ

                        மித்யா ப்ரத்யய ரூப: கர்த்ருத்வி |

     போக்த்ருத்வ ப்ரவர்த்தக: ஸர்வலோக ப்ரத்யக்ஷ: ||

   உலகம் என்பது சகலருக்கும் கண்ணுக்கு மெய்யாய் இருப்பது; ஸர்வலோக ப்ரத்யக்ஷ: என்கிறார். எல்லோரும் அதை ஒரே போல் பார்ப்பதால் அது நமது மனம் புனைந்த கனவல்ல. இதோ அது விரிந்து பரந்து காண்கிறது. அது இப்போது தோன்றி உடனே அழிகின்ற தோற்றங்களின் தொகுப்பல்ல. ஒரே ஒருவர் மட்டுமின்றிப் பலர் தொடர்ந்து கண்டுவருகிற ஒன்றல்லவா உலகம்? எனவேதான் சூத்திரங்களில் பல இடங்களில், உலகம் என்பதை உண்மையில் இல்லாத ஒன்றாகக் கருதலாகாது என்று கூறப்படுகிறது. எப்போது உலகம் என்று ஒன்றைப் பலர் ஒரே போல் கிரகிக்க முடிகிறதோ அப்போது அது உண்மையாகவே உள்ள வஸ்து என்பது நிச்சயமாகிறது. விழிப்பு நிலைக்கும், கனவு காணும் நிலைக்குமுள்ள அடிப்படையான மாறுபாடுகள் நமக்குத் தெரியுமாதலால் உலகைக் கனவோடு ஒப்பிட முடியாது. இந்த உலகம் எப்போது தோன்றிற்று என்றும் தெரியவில்லை. எனவேதான் இதை அனாதி என்கிறோம். உலகில் பிறக்கும் ஒவ்வொரு ஜீவனும் பிரபஞ்ச வியாபாரத்தில் பங்கு கொள்பவன். ஆனாலும் இந்த உலகை ஆதார சத்தியமாகவோ, இறுதி சத்தியமாகவோ எண்ண முடியவில்லை. (உலக வாழ்வைவிட உயர்ந்த ஒன்றுதான் ஆதார காரணம், அதுதான் முடிவான சத்தியமும் என்று அறிகிறோம்.) அதே சமயத்தில் உலகை முழுப் பொய் என்றும் கூற முடியவில்லை. இதனால் தான் விவகார நிலையில் உள்ளவரையில் உலகம் சத்தியம் என்று கூறும் சங்கரர், இந்த உலகத்தின் மூலம் ஆதாரமும் இறுதியுமான 'நிரந்தர சத்திய நிலையை அடையலாம் என்கிறார்; மோட்சம் பெறுவதற்குச் சாதனமாகவே சம்சார வாழ்வு உள்ளது -

      மோக்ஷாயதே ஸம்ஸார: என்கிறார்.

      உலகம் தரும் வாய்ப்புக்களைப் பற்றிக் கொண்டு உலகத்துக்கு மேலாக எழும்பி ஞான நிலையை எய்துவதற்காகத்தான் நாம் உலகில் பிறக்கிறோம்.

   ‘சங்கரர் ஜாதி முறையை ஆதரித்து வாதம் செய்தவரா? பிரிவினைகளை அவர் ஆதரித்தாரா?' என்றெல்லாம் பலர் கேட்கிறார்கள். விவகார உலக வாழ்க்கையைப் பொறுத்த வரையில் அவர் எவ்வகை அமைப்புக்களை ஆதரித்தார் என்பது ஒருபுறம் இருக்கட்டும். மோக்ஷ நிலையைப் பற்றி அவர் கூறுவதைப் பார்ப்போம். தமது பாஷ்யத்தில் அவர் மோக்ஷத்துக்குத் தகுதி பெற்றவர்கள் யார் என்று வினவி, விளக்குகிறார்.

       புருஷ மாத்ர ஸம்பந்திபி:

 என்று விடை கூறுகிறார். அதாவது மானிட இயல்பு உள்ள எவனுமே ஞானத்துக்கும், முக்தி நிலைக்கும் உரிமை பெற்றவன் என்கிறார். அவனது ஜாதியைப் பற்றிக் கவலை இல்லை. இந்தச் சமூகப் பகுப்புக்கள் ஞானாநுபவத்தில் எந்த உண்மையான மாறுபாடு களையும் குறிக்க வில்லை. உண்மையான மனிதத் தன்மை யாரிடம் இருந்தாலும், அவன் ஞானமும் வீடும் பெறத் தகுதி பொருந்தியவனாகிறான். உயர் குலத்தில் பிறக்காமல் முக்தி அடைந்த பலர் பூர்வத்திலேயே உண்டு.

     ஞானம் பெற்ற ஒருவன் என்னவாகிறான்? அவன் மறைந்துவிடுகிறானா? அல்ல. பிரம்மத்தை அறிந்தவன் பிரம்மமாகவே ஆகிறான். எவ்வாறு? இவ்வுலகை விட்டுப் பிரிந்ததா? அல்ல என்பதை பிரம்ம சூத்திரம் (3-3- 2) சொல்கிறது. அபாந்தரமஸ், வஸிஷ்டர், பிருகு, நாரதர், ஸநத்குமாரர் முதலிய பரமஞானிகள் உலகத்தில் வாழ்ந்தே பணி புரிந்தவர்கள். பிரபஞ்சமே ஒரு முடிவுக்கு வரும்போது தீமையெல்லாம் அகன்றுபேதங்கள் யாவும் விலகி, மனித குலம் முழுவதும் மாறுதலற்ற நிலை எய்தி, சூரியனும் ஒளிக் குன்றிக் குளிர்ந்து போகிறான். அப்போதுதான் பரமஞானிகளும் பரம்பொருளில் நிரந்தரமாக லயிக்கின்றனர். அதுவரை உலகை நிர்வகிக்கும் சர்வேசுகரனுடன் தங்களை அபேதமாகக் கருதி அவர்கள் லோக உத்தாரணம் செய்வார்களேயன்றி, உலகம் கடந்த பரப்பிரம்ம நிலையில் ஓன்றியிருக்க மாட்டார்கள். பரப்பிரம்மத்துடன் அத்வைதமாக ஒன்றி அநுபவிக்கும் நிலை ஒருவருடைய உள்ளத்திள் எப்போதும் உள்ளது. எனினும் உலகைப் பொறுத்தமட்டில் பிரபஞ்ச நாயகனான பகவானுடன் தொடர்பு கொண்டவர்களாகவே ஞானிகளும் காணப்படுவார்கள்.

      அப்பய தீக்ஷிதர் கூறுவார்:

      பாஷ்யகாரோபி அதிஸ்பஷ்டம் முக்தஸ்ய ஸகுணேச்வர பாவாபத்திம் ஆஹ!

      ஜீவன் முக்தன் அல்லது முக்தனுடைய நிலைபற்றி ஆதிசங்கரர் என்ன கூறுகிறார் என்பதை அப்பய்ய தீக்ஷிதர் விளக்குகிறார். பிரம்மமே பிரபஞ்சத்தை ஸர்வேசுவரனாக இயக்குவது போலத்தான் ஜீவன் முக்தர்களும் செயல்படுகிறார்கள்; பிரபஞ்சம் பிரளயமுறும் போதுதான் அவர்கள் பிரம்மமாகிய பாரமார்த்திக சத்தியத்துடன் ஒன்றி விடுகிறார்கள் என்கிறார்.

   சுருங்கச் சொன்னால் சமயம் என்பது அநுபவத்திலேயே உள்ளது என்பதுதான் சங்கரரின் போதனை. அதனைத் தர்க்க ரீதியில் நிலைநாட்ட முடியாது. ஆகவே மெய்ப் பொருளை நெருங்கும் முறையில் உருவான எல்லாக் கருத்துக்களையும் நேசமாகவே வரவேற்போம். மெய்ப்பொருளை அறிய உதவும் எந்த விளக்கத்தையும், வர்ணனையையும் வரவேற்போம். 'நான் கடவுளைக் கண்டுவிட்டேன். நான் கண்ட அந்த ஒரே விதத்தில் தான் மற்றவர்களும் கடவுளைக் காணவேண்டும்' என்று அகம்பாவமாக எண்ணாதிருப்போமாக  மனித இதயத்தில் எத்தனை விதமான இயல்புகள் உண்டோ அத்தனை விதத்திலும் ஆண்டவனை அடைய முடியும். ஒவ்வொருவனிடமும் ஒரு தெய்விகப் பொறி உள்ளது. ஒவ்வொருவனுக்கும் அவனது இதயத்தின் இரத்தத்திலேயே தோய்ந்ததாக அவனுக்கென்று ஒரு மார்க்கமும் உண்டு. அதனைப் பின்பற்றி முக்தி நிலை பெறுமளவும் மனிதன் உலகில் கர்மம் புரிய வேண்டும். ஞான மயமான கண்ணனும், ஜனகரும் கூட உலகத்தின் வழியை அனுசரித்து, மக்களை யெல்லாம் உயர்த்தப்பாடுபட்டார்கள். இவ்வுலகிலேயே விடுதலை பெற்ற ஜீவன் முக்தர்களும் உலகுக்குப் புரிய வேண்டிய கடமை உண்டு,

   சங்கரரின் மதம் எதையும் புறச் சான்றுகள் மீதும் பிற பிரமாணங்களின் மீதும் ஒப்புக் கொள்ளத் தேவையில்லை என்கிறது. 'ஆண்டவன் இப்படித்தான் விதித்திருக்கிறான்' என்று அம் மதம் பேசவில்லை. ஒவ்வொருவனும் தானே முயன்று, தான் யார், தான் இங்கு வந்திருப்பது எதற்காக என்று கண்டறிய வேண்டும் என்கிறது அது. பிரபஞ்ச வாழ்நிலை ஐந்தடுக்குக் கொண்ட ஒரு படி வரிசை; அன்னம், பிராணன், மனம், விஞ்ஞானம், ஆனந்தம் - என்பதாக. இப்போது நாம் விஞ்ஞான நிலையில் இருக்கிறோம். மனிதன் இன்னும் அறிவாராய்ச்சி வாத நிலையில் தான் இருக்கிறான். வார்த்தைகள் மூலமும், குணப் பகுப்புகளின் மூலமும் தன்னை வெளியிட்டுக் கொள்ளத்தான் அவன் விரும்புகிறான்.

  இனி ஆனந்த நிலைக்கு உயர வேண்டும். அகமறுமலர்ச்சி இன்றி, பூரணத்துவமின்றி வாழும் நாம் நம்மை நிறைவித்துக்கொண்டு, பேதங்களையும், துவேஷங்களையும் கடந்து, பரம ஞானத்தை அடைய வேண்டும். இந்தத் துதிப்பு நம் ஒவ்வொருவருடைய இதயத்திலும் அந்தரங்கத்தில் உள்ளது. அந்த ஆர்வத் துடிப்பே நமது ஆத்மிக முயற்சி சத்தியமானது என்பதற்கு நற்சான்றேயன்றி, முக்தி நிலைக்கான முயற்சியை யாரும் சோதித்துப் பார்த்து நிரூபிக்க முடியாது. பசித்த எந்த இதயமும், ஆர்வமுற்ற எந்த மனமும் விவகார உலக நிலையில் திருப்தி கொள்ள முடியாது. எனவே மேலே எழும்பும் முயற்சி தோன்றியே தீரும். இம்முயற்சியில் ஈடுபடு படுபவர்கள் மாற்றுக் கருத்துள்ளவர்களிடம் அன்புடன் இருத்தல் வேண்டும். இவ்வுலகம் நிரந்தர சத்தியமல்ல என்பதை உணர்ந்து, இது ஆண்டவனால் படைக்கப்பட்டு ஆண்டவனைச் சார்ந்திருக்கும் ஒன்று என்று உணர்ந்து, இதில் உள்ள மன மாறுபாடுகளையும் அவற்றுக்கேற்ற பல மார்க்கங்களையும் மதிக்க வேண்டும். உலகம் சர்வ சுதந்திரமானது என்று ஒரு போதும் மயங்காமல் நன்னடத்தையுடன் ஒழுகி, ஆத்ம சாதனைகளைப் புரிவோமாக! உயர்நிலை உற்று, அதன் பின்னும் உலகம் உய்யப் பணி புரிவோமாக!!

     மக்கள் யாவருக்கும் இதமானதைச் செய்வோம் !

     மக்கள் யாவருக்கும் இன்பமானதைச் செய்வோம் !

     பஹுஜன ஹிதாய

      பஹுஜன ஸுகாய

 

No comments:

Post a Comment