சங்கரர் பெருமை
காஞ்சி காமகோடி
பீடாதிபதி
ஜகத்குரு ஸ்ரீ
சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்ரீ சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
ஆதிசங்கராசாரியருக்குத்தான் 'ஆசாரியர்கள்' என்று பெயர்.
இப்போது பீஷ்மாசாரியர், துரோணாசாரியர்
என்று பலரை ஆசாரியர் என்று சொல்லுகிறோம். அதே மாதிரி ஆசாரியரவர்களுக்குப் பின்னாலே
வந்த மத்வாசாரியர், தர்க்க
சாஸ்திரம் பண்ணின உதயணாசாரியார்,
கணித சாஸ்திரம் பண்ணின பாஸ்கராசாரியார் என்று இப்படி ஆசாரியார் என்ற பெயரோடு அநேக
மகான்கள் இருக்கிறார்கள். எந்த மகான் ஆசாரியார் ஆவார்?
ஆசினோதி ஹி சாஸ்த்ரார்த்தம்
ஆசாரே ஸ்தாபயத்யபி
ஸ்வயம் ஆசரதே
யஸ் மாத்தஸ்மாத் ஆசார்ய உச்யதே.
சாஸ்திரங்களுடைய சித்தாந்தங்களைத் தாம் தெளிவாகத் தெரிந்துகொண்டு, உலகத்தில்
உள்ள மக்கள் எல்லாம் க்ஷேமத்தை அடையும்படியாக அவர்களையும் அந்தச் சாஸ்திர வழியில் நிறுத்தி,
தாமும் சாஸ்திரத்தில் கண்டமுறையில் காரியங்களைச் செய்து அநுபவத்தில் தன்மயமாகவே இருப்பவர்
ஆசாரியர். இந்த மூன்று காரியஙக்ளையும் செய்கிறவர்கள் யாரோ அவருக்குத் தான் ஆசாரியர்
என்ற பெயர் உண்டாகும்.
சாஸ்திரம், மந்திரம
தெரிந்துகொண்டிருந்தால் வித்துவான்தான். அப்படியே அநுபவியாக இருந்தால் ஞானியாகி விடிகிறார். இதெல்லாம்
இல்லாமல் லோகத்திற்கு உபதேசம் மாத்திரம் செய்து கொண்டிருப்பவர் பிரசாரகர் ஆகிவிடுகிறார்.
ஆகவே, தாமும் தெளிவாக சந்தேகமின்றி சாஸ்திரங்களைத் தெரிந்துகொண்டு, பிறருக்கு அந்த
வழியில் செல்வதற்கு உபதேசம் பண்ணிக்கொண்டு, தம் அளவிலும் அநுபவியாக இருந்தால் தான்
அவருக்கு ஆசாரியர் எனப் பெயர் பொருந்தும்.
ஒவ்வொரு
சாஸ்திரத்திற்கும் ஒவ்வோர் ஆசாரியர் இருக்கிறார். கணித சாஸ்திரம் என்றால் பாஸ்கராச்சாரியர்!
தர்க்க சாஸ்திரம் என்றால் உதயணாசாரியர்; சைவ சித்தாந்தம் என்றால் ஶ்ரீகண்டாசிரியர்;
வைஷ்ணவத்திற்கு ஶ்ரீ ராமானுஜாசாரியர். இப்படி ஆசாரியரவர்களுக்கு முந்தியும் சரி, பிந்தியும்
சரி அநேக ஆசாரியர்கள் இருந்திருக்கிறார்கள். வில்வித்தை கற்றுக் கொடுத்துக் கெளரவர்களுக்கும்,
பாண்டவர்களுக்கும் நல்வழியை உபதேசம் பண்ணிக் கொண்டு துரோணாசாரியர், கிருபாசாரியார்
இருந்திருக்கிறார்கள். ஆசாரியர்களுடைய அபிப்ராயத்திற்கு வேறுபட்டதாக ஒரு மத ஸ்தாபனம்
பண்ணியிருப்பவர்கள் வல்லபாசாரியர், ஶ்ரீகண்டாசாரியர், ராமானுஜாச்சாரியார் இவர்கள்.
ஆனால் வேறு யாரையாவது சொல்ல வேண்டுமானால் “பாஸ்கராசாரியர்,
ராமானுஜாசாரியர், ஸ்ரீ கண்டாசாரியர்” என்று சொல்ல வேண்டும். பெயரைச் சொல்லி 'ஆசாரியர்' என்பதையும் சேர்த்துச்
சொன்னால் தான் அவர்களின் நினைப்பு வரும். ஆனால் “ஆசாரியர்கள்" என்று மாத்திரம்
சொல்லி விட்டால் போதும் சங்கரர் என்று சொல்லவேண்டியதில்லை. இந்தச் சொல் அவர்
ஒருவரைத்தான் போய்ச் சேரும். ஆசாரியரவர்கள் என்று சொன்ன மாத்திரத்திலே யாரை அது குறிக்குமோ
அவர் தாம் சங்கராசாரியார்; சங்கராசாரியர்
என்று சொல்லவேண்டியதில்லை. ஆசாரியர்கள் என்றால் போதும்.
நமது பாரத கண்டத்தில் 56 தேசம் உண்டு என்பார்கள். பரம்பரையாக வேதாத்யயனம் பண்ணி, குருமுகமாக
அத்யயனம் பண்ணி, தர்ம
சாஸ்திரங்களின் படி இருந்த தேசங்கள் 56 தேசங்கள். இவைதாம் ஆசாரியர்கள் காலத்தில் இருந்தவை.
பாரதப் பிரகாரம் ஸப்த த்வீபம், ஸப்த சமுத்திரம், என்று இருந்தன.
ஒரு மோதிரம் பூமி, ஒரு மோதிரம்
சமுத்திரம், இப்படி
இருந்ததாகத் தெரிகிறது. பூமியின் அசைவினால் காலப்போக்கில் அந்த ஸப்த த்வீபம், ஸப்த
சமுத்திரம் என்பது மாறிப் போயிற்று. கன்னியாகுமரிக்கு அடுத்துக் கூடத் தேசங்கள்
இருந்தன. அவற்றை யெல்லாம் கடல் கொண்டு விட்டதாக இப்போது சொல்கிறார்கள். அப்படி
ஒரு காலத்தில் ஒருவிதமாக மாறிப் போயிற்று.
அந்தக் காலத்தில் ஸப்த த்வீபம், ஸப்த சமுத்திரம் என்று வரிசை வரிசையா இருந்திருக்கின்றன.
அங்கெல்லாம் ஈசுவர உபாசனையும்,
விஷ்ணு உபாசனையும் இருந்திருக்கின்றன. இப்போதுகூட மெஸபோடோமியோ, ஸ்காண்டிநேவியா
முதலிய இடங்களில் அகப்பட்டுள்ள ஆதாரங்களி மித்ரா வருணன் என்ற தெய்வ உபாசனை
அங்கே இருந்திருப்பதாகத் தெரிகிறது. இவர், வேதத்தில்
வரும்படியான கடவுளே. இப்படியே பல சொல்லலாம்.
ஆசாரியர்கள் காலத்தில் வேதங்களை குரு முகமாக அத்யயனம் பண்ணிவந்த தேசங்கள் பாரத
கண்டத்தில் 56 இருந்திருக்கின்றன. உபநிஷத்து என்பது வேதத்தின் சிகரம். மரத்தின் மேலே
வாசனையோடு மகரந்தத்தோடு இருக்கும் புஷ்பம் மாதிரி, வேதத்தின்
சிகரத்தில் இருப்பது உபநிஷத்து. இந்த உபநிஷத்து, வேதம் இவற்றை எல்லாம்
இந்த 56 தேசங்களிலும் ஆசாரியர்கள்
சஞ்சாரம் பண்ணி உபதேசம் செய்திருப்பதோடு, 'அத்வைதமான பரமாத்மா ஒருவரே சத்தியம், அவர் ஒருவர் தாம் பார்க்கிற பொருள், பார்க்கப்படுகிற பொருள்,
பார்க்கும் பார்வை ஆக இப்படி எல்லாமாக இருக்கிறார். எல்லாமாக இருக்கிறது
ஒன்றுதான்' என்கிற அத்வைதத்
தத்துவத்தை ஸ்தாபித்தார். அநேக ரூபமாக, கோடி கோடி ரூபமாக இருப்பவை எல்லாம் ஒன்றுதான். அந்த ஈசுவரன் ஒருவன் தான்
சத்தியமானவன்.' என்கிற தத்துவத்தைப்
பாரத கண்டத்தில் உள்ள ஐம்பத்தாறு தேசங்களிலும் ஸ்தாபித்தார். இதற்குத்தான்
அத்வைதம் என்று பெயர்; இரண்டு இல்லாதது. அதற்கு முந்தி அத்வைதம் என்கிற முறையில்
இல்லாமல் வேறு அநேக விதமான மதங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமாகச் சாங்கிய மதம், மீமாம்ஸ மதம்
என இரண்டு. இவற்றுக்கு வேதந்தான்
பிரமாணம். ஆனால் சாங்கிய மதத்தில் ஒரே ஆத்மா என்கிறது இல்லை; பரமாத்மா
என்கிறதும் இல்லை; எல்லாம்
ஜீவாத்மாக்கள் தாம்.
மீமாம்சையில்,
ஈசுவரன் என்றோ, செய்வது என
அவனைத் தியானம் செய்வது, உபாசனை செய்வது
என்றோ ஒன்றுமே கிடையாது. வேதத்தில் சொல்லியிருக்கும் கர்மானுஷ்டானங்களைச் செய்ய
வேண்டும். இந்தக் கர்மானுஷ்டானங்களே மோட்சத்தைக் கொடுத்துவிடும். அப்புறம் தியானம், ஈசுவர ஆராதனை
என்று ஒன்றும் வேண்டியதில்லை என்று சொல்வது அதனுடைய கொள்கை.
இந்த இரண்டு மதங்களைற் தவிர, புத்த இந்த இரண்டு மதங்கறை மதம், ஜைன மதம் என்று வேதததுக்கு அப்பாற்பட்ட மதங்கள் இரண்டு. ''உலகத்தில் ஒரு
பொருளும் இல்லை. சத்தியமான பொருள், சாசுவதமான பொருள் என்று ஒன்றுமே கிடையாது. எல்லாம் சூன்யந் தான்'' என்று சொல்வது
புத்த மதம்.
"உலகத்தில்
எல்லாக் காலத்திலும் இருக்கும்படியான ஒரு பொருள் இருக்கிறதா? இல்லை. இல்லையா? இருக்கிறது. இருக்கிறதா, இல்லையா? இருக்கிறது, இல்லை.'' என்று இப்படிச்
சொல்கிறது ஜைன மதம். சப்த சங்கி
என்று ஏழு விதமான சந்தேகத்துடன், 'இல்லை, இருக்கிறது, இருக்கிறது
இல்லை, இல்லையா
இருக்கிறதா? இருக்கிறது.
இல்லை இருக்கிறது என்பதாகச் சொல்வது ஜைன மதம். ஒன்றுக்கொன்று மாறுதலாக இருக்கும்.
ஜைன மதமும், புத்த மதமும்
வேதத்துக்குச் சம்பந்தம் இல்லாதவை. இந்த மாதிரி 72 மதங்கள் நம் தேசத்தில் இருந்ததாகச் சொல்வார்கள்.
இவற்றில் பிரதானமாக நான் நான்கு தான் சொன்னேன்.
ஆசாரியர்கள் எட்டாவது வயசில் ஆசிரமம் வாங்கிக்கொண்டு, பதினாறாவது வயசிற்குள்
உபநிஷத்துக்களுக்குப் பாஷ்யம் எழுதி, வேதாந்த சூத்திரத்துக்கும் பாஷ்யத்தை எழுதி, பகவத் கீதைக்கும் பாஷ்யம் எழுதினார்.
குழந்தைகளுக்குப் புரியும்படியான லேசான ஸ்தோத்திரங்களை எல்லாம் எழுதினார். மிக
நுட்பமான கருத்துக்களை எல்லாம் நினைக்கும்படியாகச் சிறு சிறு சூத்திரங்களை எல்லாம்
எழுதிப் பூர்த்தி பண்ணிவிட்டார்.
அதற்கப்புறம் சிஷ்யர்களுக்குப் பாடம் சொல்லிக்கொண்டிருக்கிறபொழுது, வேத வியாசர் ஒரு
வயோதிகப் பிராம்மணனைப் போல் வந்து, ஆசார்யர்களோடு வாதம் செய்தாராம். வேதவியாசருடைய பிரம்ம சூத்திரத்துக்கு
ஆசாரியர் பாஷ்யம் எழுதியிருக்கிறார். ஆசாரியர்களுடைய பெருமையை உலகத்துக்கு
எடுத்துக்காட்ட வேண்டுமென்று வியாசர் அப்படி வயோதிகப் பிராம்மண ரூபத்தோடு வாதம்
செய்வதற்கு வந்தாராம். இவர்கள் இரண்டு பேருக்கும் பலமாக வாதம் நடந்த போது
சிஷ்யர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. "யாரடா, இந்தக் கிழவர், இவ்வளவு வாதம் பண்ணுகிறார்?'' என்று ஒரு
சமயம் நினைப்பார்கள். அவருடைய வாதத்தைக் கேட்கும் போது ''ஆசாரியர்கள்
கூடத் தோற்றுப் போய் விடுவார் போலிருக்கிறதே!'' என்று பயப்படுவார்கள். அப்புறம் ஆசாரியர்கள் வாதம் ஓங்குகிறபோது '' ஆசாரியர்கள்
இந்தக் கிழத்தை
தோற்கடித்து விட மாட்டாரா?'' என்று
திரும்பவும் சந்தோஷப்படுவார்கள். இப்படி ஆசார்யர்களோடு இருந்த சிஷ்யர்கள் பலவித
உணர்ச்சிக்கு உள்ளாகிக் கொண்டிருந்தார்களாம்.
இரண்டு பேரும் ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் வாதம் செய்வதைப் பார்த்த போதுதான், பத்மபாதாசாரியர்
கொஞ்சம் ஞான திருஷ்டியினாலே பார்த்தார். ''அடடா! வேதவியாசரே
அல்லவா இந்தக் கிழ ஸ்வரூபத்தோடு வந்திருக்கிறார்? என்று அவருக்குத் தெரிந்து போய்விட்டது. வேத வியாசர்
நாராயண ஸ்வரூபம். சங்கரரோ ஈசுவர ஸ்வரூபம். 'இவர்கள் இரண்டு பேருமே இப்படி வாதம் செய்தால் நாம் எல்லாம் எந்த மூலைக்கு? என்று நினைத்து
உடனே,
சங்கர: சங்கர : ஸாட்சாத்: வ்யாஸோ நாராயண: ஸ்வயம்
(சங்கரர்
ஸாட்சாத் சங்கரர்தாம். வியாசரோ ஸாட்சாத் நாராயணன் தான்.)
தயோர் விவாதே ஸம்ப்ராப்தே கிங்கர: கிம் கரோம்யஹம்.
(அவர்கள் இரண்டு
பேருக்குமே இப்படி விவாதம் ஏற்பட்டால், கிங்கரராகிய நாம் என்ன பண்ணுவது? யாருக்கு
மத்யஸ்தம் பண்ணுவது?) என்று உடனே
சொன்னாராம்.
அதைக் கேட்டவுடனே வியாசாசார்யர் தம்முடைய
நிஜ ஸ்வரூபத்தை எடுத்துக் கொண்டு சங்கரருக்கு
அநுக்கிரஹம் பண்ணி "லோகத்தில் இருக்கும்
மகாவித்துவான்கள் கொண்டி (விதண்டை) வழியில் கண்டனங்கள் பண்ணி மறுப்பார்கள். அவர்களுக்கு
தெரியாத கொண்டி வழியில் எல்லாம் நான்
தர்க்கம்பண்ணி, முடிவில் ஈசுவர
அவதாரம் நீ என்பதை உலகுக்கு நிரூபித்துக்காட்டவே
இப்படி வந்தேன்'' என்று
சொன்னவுடன், ஆசாரியர்கள்
எல்லாவற்றையும் அவர் பாதத்திலேயே வைத்து விட்டு, தாம் வந்த காரியம் பூர்த்தியாகி விட்டது என்று
புறப்படக் கிளம்பினாராம். ''இல்லை, இல்லை; இன்னும் 16 வருஷங்கள்
இருந்து லோகம் முழுக்க ஸஞ்சாரம்பண்ணி, இந்தத் தத்துவங்களினால் மகாசந்தோஷம் அடைந்திருக்கிற ஜனங்களுக்கு ஸ்வரூப
தரிசனத்தையும் அளித்துச் சந்தோஷப்படுத்த வேண்டும் என்று அவர் அனுக்கிரஹம் பண்ண, அந்த க்ஷணமே
பிரம்மாவும் தோன்றிப் பாதுகா சித்தி அளித்தார் என்றெல்லாம் கதை போகிறது. அப்புறம் ஆசாரியர்கள் ஆஸேது ஹிமாசல பர்யந்தம் ஸஞ்சாரம்பண்ணி அத்வைத
மதத்தை ஸ்தாபனம் பண்ணியிருக்கிறார். அதற்கு முன்னாடி என்ன என்ன மதங்கள் இருந்தனவோ, அவ்வளவும் ஆசாரியர்கள்
காலத்தில் இல்லாமலே போய்விட்டன.
அதற்கு முந்திச் சாங்கிய மதமும் இருந்தது, புத்த மதமும்
இருந்தது. எல்லோரும் புத்த மதத்தில் இல்லை. எல்லாரும் சாங்கிய மதத்தில் இல்லை.
இப்படி ஒவ்வோர் ஆசார்யர் ஒவ்வொரு மதத்தை ஸ்தாபித்தாலும், அந்த அந்த
மதத்தைச் சேர்ந்தவர்களே அனுஷ்டித்திருக்கிறார்கள். ஆனால் சங்கரர் அவதாரம்
செய்தவுடனே எல்லா மதங்களும் இல்லாமல் போய்விட்டன. இவர் உபதேசம் பண்ணின ஒன்றுதான் 56 தேசங்களிலும் பரவிற்று. அதனாலே ஆசார்யர்கள் என்றால் இவர் ஒருவரைக் குறிக்குமே
தவிர வேறு யாரையாவது சொல்ல வேண்டு மானால் பெயரையும் சேர்த்துச் சொன்னால் தான்
புரியும்.
அப்படிப்பட்ட ஆசாரியரவர்களுடைய பக்தி நமக்கு இருந்துவிட்டால் போதும். சாட்சாத்
ஈசுவரனையே, அத்வைத
சாஸ்திரத்தையும் இவரே நமக்குக் காட்டிவிடுவார். ஆகவே ஜன்மம்
வேண்டாம் என்று சொல்ல வில்லை. எந்த ஜன்மமாக இருந்தாலும் சரி, பிரதானமாக
ஆசாரியர்களுடைய பக்தி இருக்கும்படியான, ஆசாரியர்களே குருவாக குருவாக இருக்கும்படியான, பரமேசுவரனே தெய்வமாக, வேதாந்த சாஸ்திரமே
சாஸ்திரமாக இருக்கும்படியான ஜன்மமாகக் கிடைத்தால் போதும். ஜன்மம் எவ்வளவு நிஷித்தமானதாக இருந்தாலும் சரி; எடுக்கும் பிறவியில் எல்லாம் இந்த மூன்று
தன்மையும் இருக்கும்படியாக அநுக்கிரஹம் பண்ண வேண்டும் என்று பிரார்த்தனை செய்து
கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment