Friday, November 6, 2020

 

சிவ மாநஸ பூஜா ஸ்தோத்ரம்

       (சிவபெருமானை மானஸிகமாகப் பூஜித்துப் பார்க்க உதவும் வழிபாட்டுக் கிரமத் துதி.)

 இத்துதியின் தொடக்கத்தில் அடியிற்காணும் சுலோகமும் கூறப்படுவதுண்டு:

 ஆராத4யாமி மணி ஸந்நிப4ம் ஆத்ம லிங்க4ம்

       மாயாபுரீ ஹ்ருதய பங்கஜ ஸந்நிவிஷ்டம் |

ச்ரத்3தா4நதீ விமல சித்த ஜலாபி4ஷேகை:

       நித்யம் ஸமாதி4 குஸுமை: ந புனர்ப4வாய ||                            1

       மாயையான உடலுள் இதயத் தாமரையில் நன்கு குடி கொண்ட மணியை நிகர்த்த, ஆத்மாவாம் லிங்கத்தை (ஜீவனுள் அங்குஷ்ட ப்ரமாணமாக ஒளிரும் பரமாத்மாவை), சிரத்தை என்ற நதியிலிருந்து, தூய சித்தத்தால் கொணர்ந்த நீரைக் கொண்டு தினமும் முழுக்காட்டி, ஸமாதி நிலை என்கிற பூவால் அர்ச்சித்து வழிபடுகிறேன். மறுபடி பிறப்பெடுக்காமலிருப்பதற்காக (இவ்வழிபாட்டைச் செய்கிறேன்).

 ரத்நை: கல்பிதமாஸநம் ஹிமஜலை: ஸ்நாநம் ச த3வ்யாம்ப3ரம்

       நாநாரத்ன விபூ4ஷணம் ம்ருகமதா3 மோதா3ங்கிதம்-சந்த3நம் |

ஜாதீ சம்பக பி3ல்வ பத்ரமதுலம் புஷ்பம் ச தூ4பம் ததா2

       தீ3பம் தே3வ த3யாநிதே4 பசுபதே ஹ்ருத் கல்பிதம்-க்ருஹ்யதாம் ||      1

       தயாநிதியான பசுபதியே! (உன்னை அமர்த்த) ரத்னமயமாக ஏற்படுத்திய ஆசனம்; (உனக்கு) பனிநீரில் திருமுழுக்கு; திவ்யமான வஸ்திரம்; பற்பல மணிகள் இழைத்த அணிகள்; கஸ்தூரியால் மணமூட்டப்பட்ட சந்தனம் (கந்த உபசாரம்); ஜாதி மல்லிகை, சம்பகம், வில்வ தளம், இணையற்ற (வேறு பல) பூக்கள் (ஆகியவற்றால் புஷ்ப உபசாரமான அர்ச்சனை); இவ்வாறே தூபம் காட்டும் உபசாரம்; தீபாராதனை உபசாரம் ஆகியனவுமாக - என் ஹ்ருதயத்தில் (மானஸீகமாக) ) செய்யப்படுவதை ஏற்றுக்கொள்வாயாக!

 ஸௌவர்ணே நவரத்த 2ண்ட3 ரசிதே பாத்ரே (அ)ந்நமப்யத்2பு4தம்

       4க்ஷ்யம் பஞ்சவித4ம் பயோக்3ருதயுதம் ரம்பா ப2லம் பாயஸம் |

சாகாநாமயுதம் ஜலம் ருசிகரம் கர்பூரக2ண்டோ3ஜ்ஜ்வலம்

       தாம்பூ3லம் மநஸா மயா விரசிதம் ப4க்த்யா ப்ரபோ4 ஸ்வீகுரு ||       2

  (இனி நைவேத்ய உபசாரமாக) நவரத்னங்களை ஏராளமாக இழைத்த பொற் பாத்திரங்களில் (வைக்கப்பட்ட). ஐந்து விதமான பக்ஷ்யங்களுடனும், பால் நெய் இவற்றுடனும் கூடியதான அதியற்புதமான அன்னம், வாழைப்பழம், பாயஸம், கணக்கற்ற காய்கறிகள், ஜீரணகாரியான தீர்த்தம், பச்சைக் கர்ப்பூரம், மிளிரும் தாம்பூலம் - ஆகிய, என்னால் மான ஸீகமாக பக்தியுடன் கல்பிக்கபட்டவற்றை ஏற்றுக்கொள்வாய், ப்ரபுவே !

 2த்ரம் சாமரயோர்யுக3ம் வ்யாஜனகம் சாத3ர்சகம் நிர்மலம்

       வீணாவேணு ம்ருத2ங்க3காஹல கலாகீ3தம் க ந்ருத்யம் ததா2 |

ஸாஷ்டாங்கம் ப்ரணதி: ஸ்துதிர் ப3ஹுவிதா4 ஹ்யேதத்-ஸமஸ்தம் மயா

       ஸங்கல் பேன ஸமர்பிதம் தவ விபோ4 பூஜாம் க்3ருஹாண ப்ரபோ4 || 3

       விச்வ வியாபகனான விபுவே, விச்வத்தை ஆளும் ப்ரபுவே! குடைபிடித்தலாகிய சத்ர உபசாரம், இரட்டை சாமரம், விசிறி (முதலியவற்றாலான உபசாரங்கள்), அழுக்கில்லாத கண்ணாடி (கையை பகவானுக்குக் காட்டும் உபசாரம்), வீணை - புல்லாங்குழல் - மிருதங்கம் - முரசு முதலியவற்றின் கீதம் (இசை உபசாரம்), இவ்விதமே நடன (உபசாரமும்; (இவற்றின் பின் நான் செய்யும்) ஸாஷ்டாங்க நமஸ்காரம், உன்னைக் குறித்த பலவிதமான துதிகளை ஓதல் - என்றிப்படி ஸங்கல்பத்தால் நான் அனைத்து அங்கங்களோடும் உனக்குப் புரியும் பூஜையை ஏற்றருள்க!

 ஆத்மா த்வம் கி3ரிஜா மதி: ஸஹசரா: ப்ராணா: சரீரம் க்3ருஹம்

       பூஜா தே விஷயோபபோ43ரசனா - நித்ரா ஸமாதி4 ஸ்தி2தி: |

ஸஞ்சார பத3யோ: ப்ரத3க்ஷிணவிதி4: ஸ்தோத்ராணி ஸர்வாகி2ரோ

       யத்3யத் கர்ம கரோமி தத்தத3கி2லம் சம்போ4 – தவாராத4னம் ||        4

       [என்னுடைய, அதாவது அனைத்து ஜீவராசிகளுடைய] ஆத்மா (பரப்ப்ரம்மமான பரமசிவமாம்) நீயே; (என்னுடைய) அறிவென்பது (உமது சக்தியாம் பராசக்தியான) மலைமகளே; (என்னுடைய) ஐந்து ப்ராணன்களே (உன்) பரிவாரம்; என்னுடைய சரீரமே (உனது) கோயில்; நான் இந்திரியங்களால் அநுபவிக்கும் எல்லாமே உன் வழிபாடு (வழிபாட்டின் அங்கமான பல – உபசாரங்கள்); நான் உறங்குவது (உன்னில் ஒருமித்த) ஸமாதி நிலை; காலால் (நான் செய்யும் ஸஞ்சாரம் யாவும் (உனக்குச் செய்யும்) பிரதக்ஷிண முறை; (பேசுகிற) எல்லா வார்த்தைகளும் (உன்னைப் போற்றும்) துதிகள். சம்புவே! நான் எந்தக் காரியம் செய்கிறோனோ, அது முழுதும் உனக்கான பூஜை (யாகட்டும்).

 கர சரண க்ருதம் வாக் காயஜம் கர்மஜம் வா

       ச்ரவண நயநஜம் வா மாநஸம் வா (அ)பராத4ம் |

விஹிதம் அவிஹிதம் வா ஸர்வம் ரதத் க்ஷமஸ்வ

       ஜய ஜய கருணாப்3தே4 ஸ்ரீ மஹதே3வ சம்போ4 || 5

       மஹாதேவனான ஸ்ரீ சம்புவே! கைகால்களினால் (நான்) செய்த பிழை; வாக்காலோ, சரீரத்தாலோ அல்லது மனத்தாலோ (நான்) புரிந்த அபராதம்; சிலவற்றைச் செய்ததால் ஏற்பட்ட அபராதம்; அவ்வாறே சிலவற்றைச் செய்யாமலிருந்ததால் உண்டான அபராதம் - இவை அனைத்தையும் மன்னித்தருள்வாயாக! கருணைக்கடலே, போற்றி, போற்றி!

 


No comments:

Post a Comment