Saturday, November 7, 2020

 ப்ரஹ்மாநுசிந்தனம்

     ['ப்ரஹ்மத்தையே இடை விடாது சிந்திப்பது' எனும் பொருள் கொண்ட இப்பிரகரணத்தில் ப்ரஹ்ம ஸாக்ஷாத்காரம் அடைந்தவன் தன்னை எவ்வாறு எண்ணிக்கொள்வான் என்பதை ஆசார்யாள் காட்டுகிறார்.]

 அஹமேவ பரம் ப்3ரஹ்ம வாஸுதே3வாக்2ய-மவ்யயம் |

இதி ஸ்யாத் நிச்சிதோ முக்தோ ப3த்34 ஏவாந்யதா2 பவேத் ||                 1

       ''வாஸுதேவர் என்று பெயருள்ளதும் அழிவற்றதுமான பரப்ரஹ்மமானது நான் தான் என்று உறுதியான ஞானமுள்ளவனே முக்தனாக (ஸம்ஸாரத் தளையி லிருந்து விடுபட்டவனாக), இருப்பான். (இந்த ஞானம்) இல்லாவிடில் பக்தனாகவே (ஸம்ஸார பந்தத்தில் அகப்பட்டவனாகவே) இருப்பான்.

       (வாஸு என்ற பதத்திற்கு எல்லாவற்றையும் வஸிக்கும்படி, (அதாவது இருக்கும்படி செய்பவர் என்பது பொருள். அதாவது எல்லாவற்றிற்கும் 'இருப்பு' என்ற ஸத்தையைக் கொடுக்கும் 'ஸத்' என்னும் ப்ரஹ்மலக்ஷணம் ''வாஸுஎன்ற இந்த சொல் கூறப்பட்டது. தேவ: என்பதற்கு பிரகாசம் உள்ளவர் என்று அர்த்தம். அதனால் 'சித்' என்னும் லக்ஷணம் ஞான மயமான ப்ரஹ்ம லக்ஷணம் கூறப்படுகிறது.)

 அஹமேவ பரம் ப்3ரஹ்ம நிச்சிதம் சித்த சிந்த்யதாம் |

சித்3-ரூபத்வா-த3ஸங்க3த்வா-தபா3த்4யத்வாத் ப்ரயத்நத: ||                       2

    ஹே மனமே! ஞான வடிவமாயிருப்பதாலும், ஒன்றிலும் ஒட்டாததாலும், பாதிக்கப்படாமலிருப்பதாலும், நான் பரப்பிரஹ்மம் தான் (என்று) உறுதியாக முயற்சியுடன் (உன்னால்) ஆலோசிக்கப்படட்டும்..

 அஹமேவ பரம் ப்3ரஹ்ம ந சாஹம் ப்3ரஹ்மண: ப்ருத2க் |

இத்யேவம் ஸமுபாஸீத ப்3ராஹ்மணோ ப்3ரஹ்மணி-ஸ்தி2த: ||                3

       “நான் பரப்ரஹ்மம்தான். நான் ப்ரஹ்மத்தைக்காட்டிலும் வேறாக இல்லை'', என்று இவ்வாறு பிராஹமணன் (பிரம்ம நாட்டமுடையவன்) ப்ஹ்ம ஸ்வரூபத்தில் இருந்து கொண்டு (எப்போதும் மனத்தைச் செலுத்தி) தியானம் செய்யவேண்டும்.

 ஸர்வோபாதி4-விநிர்முக்தம் சைதந்யம் ச நிரந்தரம் |

தத்3 ப்3ரஹ்மாஹமிதி-ஜ்ஞாத்வா கத2ம் வர்ணாச்ரமீ ப4வேத் ||                 4

   ''எல்லா உபாதிகளிலிருந்தும் விடுபட்டதும், சைதன்ய ஸ்வருபமானதும், இடைவெளியில்லாததுமான அந்த ப்ரஹ்மம் நான்,'' என்று அறிந்துவிட்டால், வர்ணமுள்ள வனாகவும், ஆச்ரமமுள்ளவனாகவும் எப்படி இருப்பான்?

      (ஒரு வஸ்துவுக்குத் தனி இயல்பைக் கொடுத்துக் கட்டுப்படுத்துபவையாவும் உபாதிகள் எனப்படும்.)

 அஹம் ப்3ரஹ்மாஸ்மி யோ வேத3 ஸ ஸர்வம் ப4வதி த்வித3ம் |

நாபூ4த்யா ஈசதே தே3வா-ஸ்தேஷாமாத்மா ப4வேத்3தி4 ஸ: ||                   5

 அந்யோ(அ)ஸாவஹமந்யோ(அ)ஸ்மீத்யுபாஸ்தே யோ(அ)ந்ய-தே3வதாம் |

ந ஸ வேத3 நரோ ப்3ரஹ்ம ஸ தே3வாநாம் யதா பசு ||                        6

       "நான் ப்ரஹ்மமாக இருக்கிறேன்'' (என்று) எவன் அறிந்துகொள்கிறானோ, அவன் இது எல்லாமாகவும் ஆகிறான். தேவர்கள் (அவன்) ஞான பலனை அடையாமலிருக்கும்படிச் செய்யத் திறமையற்றவர்கள். ஏனெனில், அவன் அந்தத் தேவர்களுக்கும் ஆத்மாவாக ஆய்விடுகிறான்..

   ''அந்த தேவர் (என்னைக்காட்டிலும்) வேறானவர். நான் (அவரைக் காட்டிலும்) வேறாக இருக்கிறேன்,'' என்று எவன் தன்னைக்காட்டிலும் வேறாக தேவதையை ஆராதிக்கிறானோ, அந்த மனிதன் பிரஹ்மத்தை அறிய மாட்டான், அவன் தேவர்களுக்குப் பசு போல இருப்பான்.

     (பிருஹதாரண்யகம் முதல் அத்யாயம் 4-வது பிராஹ்மணத்திலுள்ள மந்திரத்தின் கருத்து இந்த இரு சுலோகங்களில் காட்டப்படுகிறது. அதாவது: ஒவ்வொரு மனிதனும் தேவர்களுக்குக் கடன்பட்டே பிறக்கிறான். இந்தக்கடனை. தேவர்களைக் குறித்து யாகம் செய்வதாலும், பூஜை செய்வதாலும் தீர்க்க வேண்டும். இவற்றில் தேவர்களுக்கு போகத்தையும், திருப்தியையும் உண்டு பண்ணுகிறான். பிரதியாக அவர்கள் இவனுக்கு போகத்தை அருளுகின்றனர். தேவர்களுக்கு பிரீதி ஏற்படும்படி நடந்து கொள்ளாவிட்டால் கோபம் அடைந்து இடைஞ்சல் செய்வார்கள். காரியத்தின் பலன் கிட்டாமல் செய்வார்கள். ஆகவே, மனிதன் தேவர்கள் விஷயத்தில் பசுவின் நிலையைத்தான் அடைகிறான். எப்படியெனில் பசு தன்னை வளர்க்கும் யஜமானனுக்கு பாலைக்கொடுத்து போகத்தை உண்டுபண்ணுகிறது. அவனும் ஸந்தோஷம் கொண்டு அதற்கு உணவும், மற்றும் சௌகர்யங்களும் செய்து கொடுக்கிறான். ஸந்யாஸாச்ரம ஸ்வீகாரம் செய்து கொண்டு ஞான மார்க்கத்தில் செல்பவன் யாகமும், பூஜையும் செய்யப் போவதில்லை. அவனிடமிருந்து தேவர்களுக்கு போகம் கிடைக்காது. இது தேவர்களுக்குப் பிடித்தமானது அல்ல. எனவே இவன் ஞானம் அடையவொட்டாமல் இடையூறு களைச் செய்வார்கள். ஒரு மனிதன் தன்னை விட்டுப் பசு கூட பிரிந்து செல்வதை விரும்பாதது போலவே, தேவர்களுக்கு ஜீவன் தன்னைவிட்டு ஞான வழி செல்வது.

  ஆகையால் ஆரம்பத்தில் சிரத்தையுடனும், பக்தியுடனும் தேவர்களை ஆராதித்து அவர்களுக்கு பிரீதியை உண்டு பண்ணி, அவர்களிடமே ஞானம் கிடைக்க அநுக்ரஹிக்கும்படி பிரார்த்திக்க வேண்டும். வேறு பலனைக் கேட்கக் கூடாது. அவர்களும் பிரீதியுடன், இடையூறு செய்யாமல் ஒத்தாசை புரிவார்கள். சித்த சுத்தி கிடைக்கும் வரை தேவதைகளின் அநுக்ரஹத்தை பிரார்த்திக்க வேண்டும். பிறகு குருவின் அநுக்ரஹத்தால் ஞான மார்க்கத்தில் தீவிரமாகச் செல்கையில் இவனை தேவர்கள் ஒன்றும் செய்யமுடியாது. இடையூறும் செய்ய முடியாது. தானே ஸகலமுமான ப்ரஹ்மம் என்பதால் தேவதைகளும் தனக்கு வேறல்ல என்ற பாவம் இவனுக்கு இப்போது ஏற்பட்டிருப்பதால், அவற்றுக்கும் இவன் ஆத்மாவாகியிருப்பான். அப்படிப்பட்டவனை அவர்கள் ஒன்றும் செய்ய முடியாது.

அஹமாத்மா ந சாந்யோஸ்மி ப்3ரஹ்மைவாஹம் ந சோகபா4க் |

ஸச்சிதா3நந்த3ரூபோ(அ)ஹம் நித்ய-முக்த-ஸ்வபாவவாங் ||                   7

   "நான் ஆத்மா; வேறாக - இல்லை. நான் பிரஹ் மமே, சோகக் அநுபவிப்பவனல்ல. நான் ஸச்சிதானந்தஸ்வரூபி, எப்பொழுதும் விடுபட்ட இயல்புள்ளவன்.''

ஆத்மாநம் ஸததம் ப்3ரஹ்ம ஸம்பா4வ்ய விஹரந்தி யே |

ந தேஷாம் து3ஷ்க்ருதம் கிஞ்சித்3-து3ஷ்க்ருதோத்தா2 ந சாபத3: ||               8

ஆத்மாநம் ஸததம் ப்3ரஹ்ம ஸம்பா4வ்ய விஹரேத் ஸுக2ம் |

   (முன் ச்லோகத்தில் சொன்னவாறு) எப்பொழுதும் தன்னை ப்ரஹ்மமாக எண்ணி எவர்கள் இன்பமாய் வாழ்கின்றனரோ, அவர்களுக்கு பாபம் கொஞ்சமும் கிடையாது, பாபங்களிலிருந்து உண்டாகும் ஆபத்துக்களும் (துன்பமும்) கிடையாது. ஆகையால் தன்னை எப்பெழுதும் ப்ரஹ்ம ஸ்வரூபமாக எண்ணி ஆனந்தமாக வாழவேண்டும்.

க்ஷணம் ப்3ரஹ்மாஹமஸ்மீதி ய: குர்யா-தா3த்மசிந்தநம் ||                     9

தன் மஹாபாதகம் ஹந்தி தம: ஸுர்யோத3யோ யதா |

    "நான் ப்ரஹ்மமாக இருக்கிறேன் என்று கணநேரம் எவனொருவனும் ஆத்மத்யானம் செய்வானேயாகில், ஸூர்யனின் உதயம் இருளை நீக்குவதுபோல் அந்த ப்ரஹ்மத்யானம் (அவனது) மஹா பாபத்தை அழித்துவிடுகிறது.

அஜ்ஞாநாத்3-ப்3ரஹ்மணோ ஜாதமாகாசம் பு3த்3பு3தோ3பமம் ||                  10

 ஆகாசாத்3-வாயுருத்பந்நோ வாயோ-ஸ்தேஜ-ஸ்தத: பய: |

அத3ப்3யச்ச ப்ருதி2வீ ஜாதா ததோ வ்ரீஹி-யவாதி3கம் ||                        11

ப்ருதி2வ்யப்ஸு பயோ வஹ்நௌ வஹ்நிர் வாயௌ நப4-ஸ்யஸெள |

நபோ4(அ)ப்யவ்யாக்ருதே தச்ச சுத்3தே சுத்3தோ4(அ)ஸ்ம்யஹம் ஹரி: ||        12

  ப்ரஹ்மத்திலிருந்து மாயையால் நீர்க்குமிழிக்கு ஒப்பான ஆகாசம் உண்டானது; ஆகாசத்திலிருந்து வாயு உண்டானது. வாயுவிலிருந்து அக்னியும், அதிலிருந்து ஜலமும், ஜலத்திலிருந்து பூமி (பிருதிவி) யும் உண்டாயின. அதிலிருந்து (பிருதிவியிலிருந்து) நெல், நவதானியம் முதலானவை உண்டாயின.

  பூமி ஜலத்திலும், ஜலம் அக்னியிலும், அக்னி வாயுவிலும், அந்த வாயு ஆகாசத்திலும், ஆகாசமும் கூட (அனைத்தையும் அடக்கிக்கொண்டு வெளிப்படாமலிருப்பதான மூலப்பொருளிலும் அதாவது மாயையிலும்) அதுவும் சுத்த (மான ப்ரஹ்ம) த்திலும் (லயம் அடைகின்றன.) ஒடுங்குகின்றன. (கடைசியில் மிஞ்சிய) சுத்தமான ஹரியாக நான் இருக்கிறேன்.

  (ஹரி என்பதால் அனைத்தையும் தன்னுள் ஸம்ஹரித்துக் கொண்டு எஞ்சி நிற்கும் ஏகப் பரம்பொருள் குறிக்கப்படுகிறது.)

அஹம் விஷ்ணுரஹம் விஷ்ணுரஹம் விஷ்ணுரஹம் ஹரி: |

கர்த்ரு-போ4க்த்ராதி3கம் ஸர்வம் தத்3வித்3யோத்த2மேவ ச ||                  13

  "நான் விஷ்ணு (எங்கும் நிறைந்தவன்); நான் விஷ்ணு; நான் விஷ்ணு; நான் ஹரி; செய்கிறவன், அனுபவிக்கிறவன் என்பதெல்லாம் அவனுடைய அவித்யையால் (மாயையால்) ஏற்பட்டதே.

அச்யுதோ(அ)ஹ-மநந்தோ(அஹம் கோவிந்தோ3(அ)ஹ-மஹம் ஹரி: |

ஆநந்தோ3(அ)ஹ-மசேஷோ(அ)ஹ-மஜோ(அ)ஹ-மம்ருதோ(அ)ஸ்ம்ய ஹம் || 14

    நான் அச்யுதன் (தன் நிலையிலிருந்து வழுவாதவன்). நான் அனந்தன் (தேசம், காலம், வஸ்து என்ற மூன்று எல்லைகளும் அற்றவன்). நான் கோவிந்தன் (இந்திரியங்களை ஆள்பவன்). நான் ஹரி. நானே ஆனந்தம். எல்லாமே நான். நான் பிறப்பு அற்றவன். நான் மரணம் இல்லாதவனாக இருக்கிறேன்.

நித்யோ(அ)ஹம் நிர்விகல்போ(அ)ஹம் நிராகாரோ(அ)ஹ-மவ்யய: |

ஸச்சிதா3நந்த-ரூபோ(அ)ஹம்: பஞ்சகோசாதிகோ3(அ)ஸ்ம்யஹம் ||            15

      நான் எப்பொழுதும் இருப்பவன். நான் வேற்றுமை அற்றவன். நான் உருவமற்றவன். சிகை அற்றவன். நான் ஸத்தாயும், சித்தாயும், ஆனந்தமாகவும் இருப்பவன். நான் (அன்ன மயம், பிராணமயம், மனோமயம், விஜ்ஞானமயம், ஆனந்த மயம் என்னும் ஐந்து கோசங்களுக்கும் அப்பாற்பட்டவனாக இருக்கிறேன்.)

அகர்தா(அ)ஹ-மபோ4க்தாஹ-மஸங்க3: பரமேச்வர: |

ஸதா3 மத்-ஸந்நிதாநேந சேஷ்டதே ஸர்வ மிந்த்3ரியம் ||                      16

   நான் (ஒன்றையும்) செய்யாதவன். நான் (எதையும்) அநுபவியாதவன். (நான்) ஒன்றிலும் ஒட்டாதவன். பரமேசுவரன். எப்பொழுதும் என் ஸந்நதியில் இருப்பதாலேயே எல்லா இந்திரியமும் வேலை செய்கின்றன.

   ஒரு காரியத்தைச் செய்வதற்கும், அதன் பயனை அனுபவிப்பதற்கும் பிற வஸ்துவுடன் ஸம்பந்தம் இருக்கவேண்டும். ஆத்மா ஒரு வஸ்துவுடனும் ஸம்பந்தப்படாததால் அது கர்த்தாவும் அல்ல, போக்தாவும் அல்ல. ஆனாலும் ஆத்மா இருப்பதால்தான் எல்லாம் அதன தன் வேலையைச் செய்கிறது. காந்தத்தின் அருகில் இரும்பு அசைவது போல் ஆத்ம ஸந்நிதியில் இந்திரியங்கள் வேலை செய்கின்றன. காந்தம் போல ஆத்மா இருக்கிறது என்பதைத் தவிர இந்திரியங்களின் காரியங்களில் அதற்கு ஒரு வித ஸம்பந்தமும் இல்லை.

ஆதி3-மத்4யாந்தமுக்தோ(அ)ஹம் ந ப3த்தோ(அ)ஹம் கதா3சந |

ஸ்வபா4வ நிர்மல: சுத்34: ஸ ஏவாஹம் ந ஸம்சய: ||                         17

  "நான் ஆதி, மத்யம், முடிவு மூன்றும் அற்றவன். நான் ஒரு பொழுதும் கட்டுப்பட்டவனில்லை. நான் இயற்கையிலேயே அழுக்கு அற்றவன். பரிசுத்தன் (நான்) அந்த பரமாத்மாவே. (இதில்) சந்தேஹமில்லை.''

ப்3ரஹ்மைவாஹம் ந ஸம்ஸாரீ முக்தோ(அ)ஹமிதி பா4வயேத் |

அசக்நுவந் பா4வயிதும் வாக்யமேதத் ஸ்தா3ப்4யஸேத் ||                       18

யத3ப்4யாஸேந தத்3பா4வோ ப4வேத்3-ப்4ரமர–கீடவத் |

அத்ராபஹாய ஸந்தே3ஹம் அப்4யஸேத் க்ருதநிச்சய: ||                       19

      (ஞானம் பெறாதவரும் மேற்சொன்னவாறு) "நான் ப்ரஹ்மமே, ஸம்ஸாரி அல்ல. நான் (எல்லா பந்தங்களிலிருந்தும்) விடுபட்டவன்.'' என்று பாவிக்க வேண்டும். பாவிப்பதற்கு சக்தி இல்லாதவன் இந்த வாக்கியத்தை எப்பொழுதும் திருப்பித் திருப்பிச் சொல்லவேண்டும்.

  ஏனெனில் அப்யாஸம் செய்வதால், குளவியால் கொட்டப்பட்ட புழுவுக்குக் குளவித்தன்மை உண்டாகி விடுவது போல், அந்த ப்ரஹ்மபாவம் இவனுக்கு ஏற்படும். இவ்விஷயத்தில், ஸம்சயத்தை விட்டு, உறுதி செய்து கொண்டு அப்யாஸம் செய்ய வேண்டும்.

   (வாஸ்தவ அநுபவம் ஸித்திக்காவிடினும், பாவனையிலாவது ப்ரஹ்ம நிலையைச் சிந்திப்பதாலும், அதுவும் இயலாதவர், அந் நிலை கூறும் வாசகங்களை யேனும் பயில்வதாலும் காலக்ரமத்தில் பக்குவமடைவர்.)

த்4யாந-யோகே3ந மாஸைகாத்3-ப்3ரஹ்மஹத்யாம் வ்யபோஹதி |

ஸம்வத்ஸரம் ஸதா3(அ)ப்யாஸாத் ஸித்3த்4யஷ்டக-மவாப்நுயாத் ||            20

யாவஜ்ஜீவம் ஸதா3ப்4யாஸாத் ஜீவந்முக்தோ ப4வேத்3-யதி: |

    ஒரு மாத காலம் இம்மாதிரி த்யானம் செய்வதால் ப்ரஹ்மஹத்தி பாபத்தை (யும்) போக்கடிக்கிறான். ஒரு வருஷகாலம் எப்பொழுதும் அப்யாஸம் செய்வதால், எட்டு ஸித்திகளையும் (அத்புதமான ஸகல சக்திகளையும்) அடைவான். உயிருள்ள வரை எப்பொழுதும் செய்வதால் யதியானவன் ஜீவன் முக்தனாக (உடலில் வாழும்போதே மோக்ஷம் பெற்றவனாக) ஆவான்.

நாஹம் தே3ஹோ ந ச ப்ராணோ நேந்த்3ரியாணி ததை2வ ச ||                21

ந மநோஹம் ந பு3த்3தி4ச்ச நைவ சித்தமஹங்க்ருதி: |

நாஹம் ப்ருத்2வீ ந ஸலிலம் ந ச வஹ்நி-ஸ்ததா2(அ)நில: ||                   22

ந சாகாசோ ந சப்தச்ச ந ஸ்பர்சஸ்ததா2 ரஸ: |

நாஹம் க3ந்தோ ந ரூபம் ச ந மாயா(அ)ஹம் ந ஸம்ஸ்ருதி: ||                23

ஸதா3 ஸாக்ஷி-ஸ்வரூபத்வாத் சிவ ஏவாஸ்மி கேவல: |

   "நான் சரீரமல்ல. ப்ராணனும் அல்ல. அப்படியே இந்திரியங்களும் அல்ல. நான் மனம் அல்ல, புத்தியும் அல்ல; சித்தமும் அல்ல; அஹங்காரமும் அல்ல. நான் ப்ருதிவி அல்ல; ஜலம் அல்ல; அக்னியும் அல்ல; அவ்விதமே வாயு (அல்ல); ஆகாசமும் அல்ல; சப்தமும் அல்ல; ஸ்பர்சமும் அல்ல; அவ்வாறே ரஸமும் (அல்ல), நான் கந்தம் அல்ல; ரூபமும் அல்ல. நான் மாயை அல்ல. ஸம்ஸாரம் அல்ல. எப்பொழுதும் ஸாக்ஷி ஸ்வரூபமாயிருப்பதால், தனிப்பட்ட சிவஸ்வரூபமாகவே இருக்கிறேன். (சிவம் என்பது சாந்தம், மங்களம், அன்பு முதலியவற்றைக் கடந்து எஞ்சி நிற்கும் மூலப்பொருளைக் குறிக்கும்.)

மய்யேவ ஸகலம் ஜாதம் மயி ஸர்வம் ப்ரதிஷ்டி2தம் || 24

மயி ஸர்வம் லயம் யாதி தத்3-ப்3ரஹ்மாஸ்ம்யஹ-மத்3வயம் |

   எல்லாம் என்னிடத்திலேயே உண்டானது. எல்லாம் என்னிடமே நிலை பெற்றுள்ளன. என்னிடந்தான் எல்லாம் ஒடுங்குகின்றன. நான் அப்படிப்பட்ட இரண்டற்ற ப்ரஹ்மமாக இருக்கிறேன்.

ஸர்வஜ்ஞோ(அ)ஹ-மநந்தோ(அ)ஹம் ஸர்வேச: ஸர்வசக்திமாந் || 25

ஆநந்த3: ஸத்ய-போ3தோ4ஹம் இதி ப்3ரஹ்மாநுசிந்தநம் |

   ''நான் எல்லாம் அறிந்தவன்; நான் எல்லை அற்றவன்; எல்லாவற்றையும் அடக்கி ஆள்பவன். எல்லாச் சக்திகளுடன் கூடியவன். நான் ஆனந்த ரூபி, ஸத்தாகவும், சித்தாகவும் இருப்பவன் என்பதே ப்ரஹ்மத்தை இடைவிடாது சிந்திக்கும் முறை.

அயம் ப்ரபஞ்சோ மித்3யைவ ஸத்யம் ப்3ரஹ்மாஹ-மவ்யயம் || 26

அத்ர ப்ரமாணம் வேதா3ந்தா கு3ரவோ(அ)நுப4வஸ் ததா2 |

   இந்தப் பிரபஞ்சம் (மெய்போலத் தோற்றம் காட்டும்) பொய்யே. நான் உண்மையானதும் அழிவற்றதுமான ப்ரஹ்மம். இந்த விஷயத்தில் உபநிஷத்துக்களும், ஆசார்யர்களும், அவ்வாறே (ஸ்வ) அநுபவமும் பிரமாணம்.

ப்3ரஹ்மைவாஹம் ந ஸம்ஸாரீ ந சாஹம் ப்3ரஹ்மண: ப்ருத2க் || 27

நாஹம் தே3ஹோ ந மே தே3ஹ: கேவலோ(அ)ஹம் ஸநாதன: |

      நான் ப்ரஹ்மமே, ஸம்ஸாரி அல்ல. நான் ப்ரஹ்மத்தைக் காட்டிலும் வேறு அல்ல. நான் சரீரம் அல்ல. சரீரம் என்னுடையது அல்ல. நான் எப்பொழுதும் இருப்பவன்; தனி ஒன்றாயிருப்பவன்.

ஏகமேவாத்3விதீயம் வை ப்3ரஹ்மணோ நேஹ கிஞ்சந || 28

   (ப்ரஹ்மம்) ஒன்றேதான்; இரண்டு அற்றது. இங்கு ப்ரஹ்மத்தைக் காட்டிலும் வேறாக ஒன்றும் இல்லை.

     ("ஏகமேவாத்விதீயம், நேஹ நாநாஸ்தி கிஞ்சன'' என்பன உபநிஷத் வாக்யங்கள்.)

ஹ்ருத3ய-கமல-மத்4யே தீ3பவத்-வேத3ஸாரம்

       ப்ரணவமய-மதர்க்யம் யோகி3பி4ர்-த்4யாந–க3ம்யம் |

ஹரி-கு3ரு-சிவயோக3ம் ஸர்வ-பூ4தஸ்த2-மேகம்

       ஸக்ருத3பி மநஸா வை சிந்தயேத்3-ய: ஸ முக்த: ||                      29

      எவன் தாமரை போன்ற ஹிருதயத்தில், தீபம் போல் ஒளியுள்ளதும்,. வேதத்தின் ஸாரமானதும், ஓங்கார ஸ்வரூபமான தும், புத்தியால் ஊஹிக்க முடியாததும், மனத்தை அடக்கிய யோகிகளால் தியானத்தால் அறியக்கூடியதும், எல்லாப் பிராணிகளிடமும் இருப்பதும், ஒன்றானதும், விஷ்ணு, ஆசார்யன், சிவன் இம்மூவரும் சேர்ந்ததுமான ப்ரஹ்மதத்வத்தை ஒரு தடவையாவது மனத்தால் தியானம் செய்கிறானோ அவன் முக்தன்.


No comments:

Post a Comment