Thursday, November 5, 2020

 

அத்வைத உணர்வு

காஞ்சி காமகோடி பீடாதிபதி

ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்ரீ சங்கராச்சார்ய சுவாமிகள்

       உத்தம கவியான் ஸ்ரீ ராமபத்ர தீக்ஷிதர் ஆக்கிய பதஞ்சலி விஜயத்தில் ஸ்ரீ சங்கரரின் வரலாறு சுருக்கமாகத் தரப்பட்டிருக்கிறது. அதன் முடிவில், பரமாசாரியர்கள் தமது குருவாக கோவிந்த பகவத்பாதர்களை வழிபட்டு, பின்னர் பிரம்ம ஸூத்ரங்களுக்குப் பாஷ்யம் எழுதி, திக் விஜயம் செய்து, ஆம்னாய ஸ்ரீமடங்கள் ஸ்தாபித்து காஞ்சி காமகோடி பீடாதிபதியாகத் தாமே அமர்ந்து, அங்கேயே ஸித்தி அடைந்தார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

       சதாசிவமான பரம்பொருளே ஸ்ரீ சங்கரராக வந்து பிறந்தது. மற்ற யுகங்களில் ஞானோபதேசம் என்பது முழு நேர வேலையாக இல்லை. கிருஷ்ணாவதாரத்தில் அரசுரிமை பற்றிய பல செயல்களில் கிருஷ்ணன் ஈடுபட்டிருந்ததோடு, தானே ஒரு நாட்டுக்கு அரசனாகவும் இருந்து ஆண்டான். போர்க் களத்தில் கீதையைச் சொன்னது போன்று ஒவ்வொரு நேரத்தில் அறவுரைகளையும், அருளுரைகளையும் வழங்கினான். ஆனால் கலியுகத்தில் இப்படிச் செய்தால் போதாது. தருமம் நலிந்து அதருமம் மலிந்த இந்த யுகத்தில் முழு நேரமும் தருமத்தை நிலை நாட்டுவதில் செலவிட வேண்டிய தேவையிருப்பதனால், இதற்கென்றே காலத்தை ஒதுக்கி ஏற்பட்டது ஸ்ரீ சங்கராவதாரம்.

       வேறுபட்ட பல மதக்கொள்கைகள் அப்பொழுது நமது தேசத்தில் நிறைந்திருந்து, மக்களின் மனத்தைக் குழப்பிக் கொண்டிருந்தன. தமது வேற்றுமைகளினால் நாட்டையே பல துண்டுகளாக்கி வைத்திருந்தன. பாரதம் முழுதும் ஒரு நாடு, ஒரு பண்பு, ஓர் உயிர் என்ற எண்ணமே இல்லாமல் தனித்தனியாக மக்கள் பிரிந்து கலைந்து வாழ்வதற்கே இம்மதங்கள் வழி செய்தன. வேதங்கள் சொன்ன ஒற்றுமை வழி, ஓருமை வழி மறந்து போய்விட்டது.

       ''ஒன்றே சத்தியம்; எல்லாத் தெய்வங்களும் அதன் பெயர்களே; எல்லாச் சமயங்களும் அதையே முடிவாகக் கொண்டவை'' என்ற வேதத்தின் குரல் வெறும் ஆடம்பரச் சண்டைகளில் அமுங்கிப்போய் விட்டிருந்தது. அரசியல் முறையில் பாரத தேசம் பல துண்டுகளாகச் சிதறிக் கிடந்து, பின்னர் ஒரே தேசமாக, ஒரு கொடியின்கீழ் வந்தது எவ்வளவு முக்கியமோ, அதே போல, பல சமயக் கொடிகளின் கீழ் சிதறிக்கிடந்த பாரததேசத்தை சத்தியம் என்கிற கொடியின் கீழ் ஸ்ரீ சங்கரர் ஒன்றுபடுத்தினார்.

    உலகத்தில் எவ்வளவு மக்கள் இருக்கிறார்களோ, அவர்கள். எல்லோருக்கும் அவரவருக்குத் தக்கபடி மத உணர்வை வளர்க்கும் வேத மதமான அத்வைதத்தை ஸ்ரீ சங்கரர் எடுத்துச் சொன்னார். இரண்டில்லை என்பது அத்வைதம். எங்கும் எதிலும் இதுதான் உண்மை. மனிதர்கள் சண்டையிட்டுக்கொள்ளாமல், அடுத்தவனைக் கண்டு பயமில்லாமல், வாழ்கின்ற நிலை எப்போழுது கிட்டும்? அடுத்தவன் என்பவனும் நம்மைப் போன்றவனே; அவனும் தெய்வமே என்ற பார்வை பிறக்கும்பொழுதுதான் உண்மையான அமைதி உண்டாகும். எல்லோரும் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வு வந்துவிட்டால் அப்புறம் கலகம் ஏது? அத்வைதமாக வாழ்வது என்பது, பிறரை ஏதோ வேற்றாளாக, எதிரியாக எண்ணாமல், ஒரே நெருப்பில் தெறித்த பொறிகள் நாம் என்று சகோதரனாக எண்ணி அன்பு செலுத்துவதுதான்.

        மா க்ருத: கஸ்யஸ்வித் தனம் என்பது ஈசாவாஸ்யம்.

       பிறர் பொருளுக்கு ஆசைப்படாதே என்பது இதன் பொருள். இதற்கு ஸ்ரீ சங்கரர் என்ன உரை செய்திருக்கிறார் தெரியுமா? இன்னொருவன் என்று அடுத்தவனைப் பிரித்து எண்ணுவதனால் தானே அவன் பணத்தைக் கண்டு பொறாமைப்படுவதும், பிடுங்கிக் கொள்வதும் ஏற்படுகிறது? அவனை நம்முடன் ஒன்றாக எண்ணிவிட்டால், அவன் சுகமும், துக்கமும் நம்முடைய சுகதுக்கமாகி விட்டால், பின் போட்டி பொறாமை ஏது? நமக்கு என்று தனியாக ஒன்றை ஒதுக்கி வைக்கவேண்டிய தேவையென்ன? அடுத்

தவன் ஒன்றாக இருந்தால், அது நாம் ஒன்றாக இருக்கிறோம் என்பதற்குச் சமம். இந்தச் சம உணர்வு, சமுதாய உணர்வு, எல்லோருக்கும் வந்துவிட்டால், வேண்டியது வேறொன்றும் இல்லை. சாதாரண அன்றாட வாழ்க்கையில் கூட நாம் பின்பற்றவேண்டிய அத்வைத உண்மையை ஸ்ரீ சங்கரர் உபநிஷத்துக்களின் மூலம் எடுத்துக்காட்டினார். ஒற்றுமையான சர்வதேச உறவு, அரசியல், பொருளாதாரம், சமுதாய வாழ்வு, எல்லாவற்றுக்குமே இந்த அத்வைதமே அடிப்படையாகும். இதைத்தான் வேதம் சொல்லுகிறது என்று நமது பரமாசார்யர்கள் எடுத்காட்டினார்கள்.

       சரி; இத்தகைய அத்வைத பாவனை எல்லோருக்கும் சாத்தியமா? இது ஒரு கேள்வி. எல்லோருக்கும் சாத்தியமே என்பது ஆசார்யாளுடைய பதிலாகும். வேதமே இதற்கு வழி செய்திருக்கிறது. அவரவர்க்கு என்னென்ன முதலில் சாத்தியமோ அதைச் செய்வதற்கு அது ஏற்பாடு செய்திருக்கிறது. தன்னலம் குறைந்து பொதுநலம் பெருக வாழும் முறை சட்ட பூர்வமான சமுதாயத்தில் இன்றும் காணக் கிடக்கிறது. பணம் படைத்தவர்கள் ஏழைகளுக்குத் தாமாக உதவினால் உத்தமம். இல்லையானால், பொது அரசாங்கம் அவர்களிட ருந்து பணத்தை வரியாகப் பெற்று ஏழைகளுக்குத் தருவதும் பொது நலத்துக்காகத்தான். சட்டத்திற்கு முன் எல்லோரும் சமம் என்பதற்கு அத்வைதம்தான் பொருள். இதுதான் சமுதாய அத்வைதம் (Social non - duality). சாதாரண தருமங்களான பொய் சொல்லாதிருத்தல், உயிர்க்கொலை செய்யாதிருத்தல் போன்றவற்றால் உள்ளத்தைத் தூய்மைப் படுத்திக்கொண்டால், அதில் அன்பைத் தவிர வேறொன்றிற்கும் இடமிருக்காது. வெறுப்பதையே கொள்கையாகக் கொள்பவர்கள் யாரும் இல்லை. மிகக் கொடிய அரக்கரும் தம் மனைவி மக்களிடத்திலாவது அன்பு செலுத்தத்தான் செய்கிறார்கள்.

       அன்பு என்பது அத்வைத உணர்வு. எவ்வுயிரும் தம்முயிர்; யாதும் ஊர்; யாவரும் கேளீர். அன்புடையார் என்பும் உரிய பிறாக்கு.

 ஆத்ம ஒளபம்யேன ஸர்வத்ர ஸமம் பச்யதி.

 என்பது கீதா வாக்கியம். தன்னைப்போல பிறறையும் எண்ணுகிறான் என்பது பொருள்.

     ''நான்'' ''எனது'' என்னும் குறுகிய எண்ணம் வேண்டாம். இந்த எண்ணத்தை விலக்க முடியவில்லையென்றால், என்ன செய்ய வேண்டும்? அதை இன்னும் பெரிதாக்கிக் கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் "நான்'' என்று எண்ணிவிட வேண்டும். அப்படி எண்ணினால் வேற்றுமையும் வெறுப்பும் போய், ஒற்றுமையும் அன்பும் உதிக்கும். இதுதான் அத்வைதத்தின் கண்கண்ட பலன்.

   எங்கோ, எப்பொழுதோ கிடைப்பது அல்ல அத்வைத ஆனந்தம். இந்த வாழ்க்கையிலேயே அமைதியாகவும், சந்தோஷமாகவும், திறமையாகவும் வாழ்ந்து மனைவி மக்களும், உற்றாரும் ஊராரும் மெச்ச, ஈசுவர சிந்தனையோடு, வேற்றுமை வெறுப்புகள் இல்லாமல், அன்பு செய்து வாழ்வதற்கும் இந்த அத்வைத உணர்வே ஆதாரமாகும். உலகம் ஒரு குடும்பம்; அதற்குத் தாயார் அம்பாள்; தந்தை ஈசுவரன். இந்த உண்மையை மறக்காமல் வாழ்ந்து எல்லோரும் சிரேயஸ்ஸை அடைய வேண்டும். இதுவே எனது ஆசிகள்.

 

No comments:

Post a Comment